ரூ.200 கோடி சாலை பணிக்கான டெண்டரில் செட்டிங்கா..? நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கடும் எதிர்ப்பு…
Author: Babu Lakshmanan19 October 2023, 2:49 pm
கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் சென்டர் மீடியன், தடுப்புச்சுவர், சிறுபாலம், மழைநீர் வடிகால் மற்றும் சாலை பாதுகாப்பு பணிகளுக்காக கோவை மற்றும் திருப்பூர் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் இ- டெண்டர் அறிவிக்கப்பட்டது.
சுமார் 200 கோடி மதிப்பில் 9 பேக்கேஜ்களாக நடக்கும் திட்டப்பணிக்களுக்கான இந்த டெண்டர் நேற்று மதியம் திறக்கப்பட்டு விண்ணப்பங்கள் இறுதி செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படும் முன்பே சிலருக்கு குறிப்பிட்ட பணிகளை ஒதுக்கி முடிவு செய்து விட்டதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், உள்ளூர் ஒப்பந்ததாரர்களை புறக்கணித்து விட்டு, 20 % கமிஷனைப் பெற்றுக் கொண்டு வெளியூர் ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டரை ஒதுக்குவதாகவும், டெண்டருக்கு முன்பாகவே ஒப்பந்ததாரரின் பெயர்களை வெளியிட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதுபோன்ற கமிஷன் மூலம் ஒதுக்கப்படும் டெண்டர்களால் தரமற்ற கட்டுமானங்களை கட்டி பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கும் வீண் செலவு ஏற்படுத்துவதாக உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே, செட்டிங் டெண்டர் நடைமுறை கூடாது என்றும், முறையாக விண்ணப்பங்கள் திறந்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள், பல்வேறு முறைகேடுகளை நடப்பதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் அனுமதிக்கக் கூடாது என்றும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற முறைகேடுகளில் மெத்தனம் காட்டாமல், உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.
சட்டவிதிகளை மீறி நடக்கும் இந்த டெண்டர் செட்டிங்கால், அடுத்த ரெய்டு நமது அமைச்சருக்குத் தான் என்று அரசு அதிகாரிகளே புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளாக சொல்லப்படுகிறது.