ஓடையில் தவறி விழுந்த 7 வயது சிறுவன்… கண்முன்னே நடந்ததை பார்த்து பதறிய தாய் ; வெளியான சிசிடிவி காட்சியால் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan19 October 2023, 5:00 pm
கன்னியாகுமரி அருகே கனமழையின் போது ஓடையில் தவறி விழுந்த 7 வயது சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டி தீர்த்தது. வில்லுக்குறி பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் முழங்கால் அளவுக்கு தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில், நேற்று மாலை கொட்டும் மழையில் பள்ளிக்கு சென்று தாய் ஜோஸ்பின் உடன், வீடு திரும்பிய 2ம் வகுப்பு படிக்கு 7வயது சிறுவன் ஆஷிக், சாலை எது ஓடை எது என தெரியாமல் நடந்து சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக மழைநீர் ஓடையில் தவறி விழுந்து மூழ்கி மாயமானார்.
தாய் அலறி சத்தம் போட்ட நிலையில், அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் தீவிரமாக தேடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைமட்ட பாலத்தின் அடியில் சிக்கியிருந்த அந்த சிறுவனை படுகாயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பள்ளி சென்று தாயுடன் வீடு திரும்பிய சிறுவன் ஓடையில் தவறி விழுந்து மாயமாகும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.