சென்னை அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து… 4 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு…!!!
Author: Udayachandran RadhaKrishnan24 October 2023, 9:28 am
சென்னை அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து… 4 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு…!!!
சென்னை, ஆவடி ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை அந்த பகுதியில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி நோக்கி வந்த மின்சார ரயிலானது ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும்.
ஆனால், சிக்னல் கொடுத்தும் ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் உரிய பிளாட்பார்மில் நிற்காமல் சென்றது. இதனால், மின்சார ரயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. இதில் ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் மின் கம்பிகள் சேதமடைந்தன.
மின்சார ரயில் தடம் புரண்ட காரணத்தால், சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூரில் இருந்து சென்னை ரயில்கள் தாமதமாக புறப்படும் என்றும், வந்தே பாரத் ரயில் உட்பட பல்வேறு விரைவு ரயில் சேவை அந்த பாதையில் இயங்க முடியாமல் தாமதமாகி உள்ளது.
இந்த மின்சார ரயில் தடம்புரண்ட விவகாரத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. மாறாக காலையில் மின்சார ரயிலில் வேலைக்கு செல்லும் மக்கள் தான் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ரயில் தடம்புரண்டது குறித்து ரயில்வே துறையினர் குழு அமைத்து விசாரணை செய்து வருகின்றனர் இது ஓட்டுநர் கவனக்குறைவா? அல்லது தொழில்நுட்ப குளறுபடியா என விசாரணை செய்து வருகின்றனர்.
தற்போது தடம் புரண்ட ரயிலை இருப்பு பாதைக்கு மாற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் .