13 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவில் மீண்டும் பூட்டியதால் பரபரப்பு.. சினிமா காட்சியைப் போல் நடந்த சம்பவம்!!
Author: Babu Lakshmanan24 October 2023, 6:16 pm
13 ஆண்டுகள் பூட்டி கிடந்த அம்மன் கோவில், நீதிமன்ற உத்தரவுபடி திறக்கப்பட்டு மீண்டும் இரு தரப்பு பிரச்சனையால் கோவிலுக்கு பூட்டு போடப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பு நிலவியது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காளாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ அருள்மிகு சக்தி காளியம்மன் கோவில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சம் மலை அடிவாரத்தில் அமைந்த இந்த காளி கோவில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் திருவிழா யார் நடத்துவது என்று இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு வழக்கு நீதிமன்றம் சென்றதால் தீர்ப்பு வரும் வரை கோவில் பூட்டப்பட்டது.
இதற்கு இடையே ஒரு தரப்பினர் நவராத்தி கொலு வைக்க நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று 10 நாட்கள் மட்டும் கோவில் திறக்கப்பட்டு கொலு வைத்து அம்மனை வழிபட்டு வந்தனர். இரண்டு ஆண்டுகள் இந்த பூஜை அமைதியாக நடந்து மூன்றாம் ஆண்டும் அதே போல் இந்த வருடம் நடைபெற்றது.
இந்நிலையில், மறு தரப்பினர் ஒன்று கூடி கோவிலில் உள்ள உற்சவர் சிலையை, நாங்கள் எங்கள் ஊர் கோவிலில் இரண்டு நாட்கள் வைத்து வழிபடுகிறோம் என்று சிலையை கேட்டனர். இதற்கு முதற்தரப்பினர் கொலுவில் இருக்கும் அம்மனை தர முடியாது என்று மறுத்துனர். இதனால், இருதரப்பினருக்கும் காரசாரமான விவாதம் ஏற்பட்டு சிறு தள்ளு முள்ளும் ஏற்பட்டது.
தகவல் அறிந்த லத்தேரி காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபு தலைமையில் போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்று தோல்வி அடைந்தனர். பிறகு குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் கே.வி.குப்பம் வட்டாட்சியர் கலைவாணி ஆகியோர் பேசிய சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் பலன் அளிக்காததால், அறநிலைதுறை தான் இதற்கு முடிவு எடுக்க வேண்டும் என்று கோவில் மீண்டும் பூட்டப்பட்டது.
13 ஆண்டுகள் பூட்டப்பட்ட நிலையில் வருடத்திற்கு 10 நாள் திறக்கப்பட்ட அம்மன் கோவில் சினிமா காட்சிகள் போல் மீண்டும் பூட்டப்பட்டதால் பொது மக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த வேதனையோடு தரிசனம் செய்யாமல் சென்றனர். இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.