நாளை ஜனாதிபதி வருகை.. இன்று பெட்ரோல் குண்டுவீச்சு ; பின்னணியில் மிகப்பெரிய சதி… பரபரப்பை கிளப்பிய இபிஎஸ்!!

Author: Babu Lakshmanan
25 October 2023, 7:52 pm

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம், அமைதி பூங்கா என முன்பு தமிழ்நாட்டிற்கு இருந்த அடையாளத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது ;- தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கிற்கு அடையாளமாக விளங்கும் ஆளுநர் மாளிகையிலேயே இத்தகைய சம்பவம் நடந்திருப்பது தமிழகத்தின் பாதுகாப்பையும் , மாண்பையும் ,அமைதி பூங்கா என முன்பு தமிழ்நாட்டிற்கு இருந்த அடையாளத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

இந்திய குடியரசுத் தலைவர் நாளை தமிழ்நாடு ஆளுனர் மாளிகைக்கு வரவுள்ள நிலையில், அடிப்படை பாதுகாப்பிற்கே குந்தகமான செயல்கள் நடந்திருப்பது தமிழக உளவுத்துறையும், காவல்துறையும் இந்த விடியா ஆட்சியில் மொத்தமாக செயல் இழந்து விட்டதையே வெளிக்காட்டுவதுடன், தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டதோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மேலும் குண்டுவீசி பிடிபட்ட நபர் இரண்டு நாட்கள் முன்னர் தான் சிறையில் இருந்து வெளிவந்தவர் என்பது தெரியவந்துள்ளது, அப்படியானால் ஆளுநர் மாளிகை குண்டுவீச்சுக்கான திட்டம் சிறையிலேயே திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகமும் , இதற்கு பின் மிகப்பெரிய சதிவலை பின்னபட்டிருப்பதும் உறுதியாகிறது ,

மாநிலத்தின் உட்சபட்ச பாதுகாப்புக்குறிய ஆளுநர் மாளிகைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதையும், இந்திய குடியரசு தலைவர் நாளை ஆளுனர் மாளிகைக்கு வர இருக்கின்ற வேளையில், இத்தகைய குண்டு வீச்சு சம்பவம் என்பது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான பெரும் எடுத்துகாட்டாக உள்ளது. இது தான் #விடியா_திமுகமாடல், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!