திராவிட மாடலை விட்டு விட்டு தமிழக மாடலுக்கு வந்து விட்டார்கள்… சீக்கிரம் வேறு மாடலும் வரும் ; ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
26 October 2023, 11:56 am

எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திராவிட மாடலில் இருந்து தமிழக மாடலுக்கு வந்துள்ளார்கள் என்றும், இனி வேறு மாடலுக்கும் செல்வார்கள் என ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் விமானம் மூலம் இன்று கோவை வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தப்படுவதும், அந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அரவணைப்பது போல தமிழக அரசு இருப்பதும் கண்டனத்திற்குரியது.

இதுபோன்ற கொடுமைகளை செய்தவர்களை எல்லாம் தண்டனையில் இருந்து தப்ப வைப்பதும், மன்னிப்பு தருவதும் அதற்கு அண்ணாவின் பெயரை உபயோகப்படுத்துவதும் நிச்சயமாக சரியான அணுகுமுறை அல்ல. இன்றைய தினம் கவர்னர் மாளிகையை நோக்கியே பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது என்று சொன்னால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு தமிழக அரசே ஒரு காரணமாக அமைந்துள்ளது.

தவறு செய்வது அவர்களை கண்டிப்பதற்கு பதிலாக அவர்களை அரவணைப்பது தான் தமிழக அரசிடம் காணப்படுகிறது. இதனை தமிழக அரசு திருத்தி கொள்ள வேண்டும், என்றார்.

ஆரியம், திராவிடம் குறித்து ஆளுநர் பேசியதற்கு திமுகவினர் தற்பொழுது பேசி வருவது குறித்தான கேள்விக்கு பதில் அளித்ததாவது :- திமுகவிற்கு வேலையே மக்களுக்கு நன்மை செய்வதை காட்டிலும், வேண்டாத ஒரு விவாதத்தை எடுத்து விட்டு, அந்த விவாதத்தின் மூலமாக அரசியல் லாபத்தை பார்ப்பது தான் அவர்களது அணுகுமுறையாக உள்ளது. சனாதனத்தை எதிர்ப்போம் என்று சொல்லியபோது ராகுல் காந்தி அலறுகிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அலறுகின்றனர். அகிலேஷ் யாதவ் அலறுகின்றனர். இப்படி ஒட்டுமொத்த கூட்டணியே அலறுகிறது. தேவையற்றவை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக திமுக அரசும், முதல்வர் ஸ்டாலினும் கவனத்தை செலுத்துவது நல்லது, என தெரிவித்தார்.

ஆரியம் திராவிடம் குறித்த ஆய்வு செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்தான கேள்விக்கு, இத்தனை ஆண்டுகள் இவர்கள் மாறி மாறி ஆட்சி கட்டிலில் இருக்கிற பொழுது, இதுவரை என்ன ஆய்வு செய்து இருக்கிறார்கள். இல்லை என்றால் ஏன் செய்யவில்லை. தேவையில்லாததை பேசி மக்களின் கவனத்தை திசை திருப்புவதும், ஒட்டுமொத்த தமிழகமே கூலிப்படைகளின் கைகளுக்குள் சென்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் மூளை முடுக்குகளில் எல்லாம் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. இதில் எல்லாம் காவல்துறை கவனத்தை செலுத்தி கஞ்சா தமிழகத்திலிருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டும். போதையில் இருந்து தமிழகம் விடுகின்ற பொழுதுதான், இளைஞர்கள் தமிழகம் முன்னேற்றத்தை நோக்கி தொடர்ந்து விரைவாக பயணிக்கும், எனக் கூறினார்.

தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு ஊதுகுழலாக இருப்பதாக டிஆர் பாலு தெரிவித்தது குறித்தான கேள்விக்கு கருத்து தெரிவித்த அவர், தமிழக கவர்னரை பயன்படுத்தி எப்படி மத்திய அரசிற்கும், தமிழக அரசிற்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் ஒரு ஆய்வை செலுத்துவார் என்று சொன்னால் டிஆர் பாலுவிற்கு நல்லதோ இல்லையோ, தமிழகத்திற்கு நல்லது, என பதில் அளித்தார்.

மோடியை அனைத்து தமிழர்களும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஏனென்றால் வள்ளுவனுக்கு சிலை திறந்ததிலிருந்து வள்ளுவனுடைய அனைத்து குரல்களையும் உரிய இடத்தில் உரிய நேரத்தில் உரிய மரியாதையோடு உபயோகிப்பதிலும், ஐநா சபையில் தமிழர்களின் விருந்தோம்பலை பிரதிபலிக்க கூடிய வகையிலும், பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகளை தமிழர் கூறியிருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையெல்லாம் தெரியாதவர்கள் எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள் எனவும், தலித் மக்களுக்கு நாங்கள்தான் உற்ற தோழர்கள் என திமுகவினர் கூறி வருகிறார்கள் அப்படி என்றால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அவர் கட்சியில் இருக்கக்கூடிய தலித்தை தமிழகத்தின் முதல்வராக மாற்ற வேண்டியது தானே என கேள்வி எழுப்பினார்.

பிரதமராக வருவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு சூழல் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது குறித்து கருத்து கேட்டதற்கு, அதுதான் திராவிட மாடல் என்பதும், திராவிட மாடல் என்பது எது நடக்கவில்லை என்றாலும், தங்களுடைய தலைவர்களுக்கு துதி பாடுவதே திராவிட மாடல் என தெரிவித்தார்.

மேலும், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட திராவிட மாடல் என்று சொல்லை பயன்படுத்தாமல், தமிழக மாடல் என்ற சொல்லை பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, திராவிட மாடலை விட்டு விட்டு, தற்பொழுது தமிழக மாடலுக்கு வந்துள்ளதாகவும், தமிழக மாடலையும் விட்டுவிட்டு வேறு ஏதாவது மாடலுக்கு செல்வார்கள், எனவும் விமர்சித்தார்.

சாதி வாரிய கணக்கெடுப்பு தேவையா இல்லையா என்பதை காலமும், சமூகமும் தான் முடிவு செய்யும் என தெரிவித்தார். முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சங்கர் அய்யாவிற்கு முனைவர் பட்டம் தருவதற்கு தமிழக ஆளுநர் தவிர்த்து வருவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, இதைப்பற்றி கவர்னரை சந்திக்கின்ற பொழுது இரண்டு விஷயங்கள் குறித்தும் அவரிடம் பேசுவதாக தெரிவித்துச் சென்றார்.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!