கல்யாண வீட்டில் கூட ஆளுநரை நினைச்சு நினைச்சு ஏன் கதறணும்? முதலமைச்சர் ஸ்டாலின் மீது வானதி சீனிவாசன் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2023, 5:01 pm

கல்யாண வீட்டில் கூட ஆளுநரை நினைச்சு நினைச்சு ஏன் கதறணும்? முதலமைச்சர் ஸ்டாலின் மீது வானதி சீனிவாசன் விமர்சனம்!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில், திராவிடம் என்றால் என்ன? என்று கேட்க வைத்திருக்கிறதே, அதுதான் திராவிடம்.

திராவிடம் என்றால் என்ன? என்று கேட்கிறாரே அவரே தொடர்ந்து இருக்க வேண்டும். அது இன்னும் நம்முடைய பிரச்சாரத்திற்கு வலு சேர்த்துக்கொண்டே இருக்கிறது.

தயவு செய்து இங்கே இருக்கக்கூடிய ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றவேண்டாம் என்று பிரதமர், மத்திய உள்துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

முதல்வரின் இந்த கருத்து குறித்து, வானதி சீனிவாசன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் கொள்கை ஆசான், மதம் மாற்றுவதற்காக தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் பற்றி தமிழ்நாடு ஆளுநர் பேசியதிலிருந்து திமுகவினரிடம் ஒருவித பதற்றத்தைப் பார்க்க முடிகிறது.

மதமாற்ற வந்த அன்னிய சக்திகள் போட்ட விதை தான் நீதிக்கட்சி, திராவிடர் கழகமாகி, இப்போது திமுகவாகி இருக்கிறது என்ற உண்மை, சாதாரண மக்களிடமும் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கம் திருமண வீட்டில் கூட முதலமைச்சரின் நிம்மதியை குலைத்திருக்கிறது.

திமுகவின் ஆதி வரலாற்றையெல்லாம் ஆளுநர் பேசினால் திமுகவினருக்கு பதற்றம் வரத்தான் செய்யும். அதனால்தான் இதுவரை ஆளுநரை நீக்க வேண்டும் என குடியரசுத்தலைவர் மனு கொடுத்து கொண்டிருந்தவர்கள், கூட்டணி கட்சிகளை விட்டு கையெழுத்து இயக்கம் நடத்தியவர்கள், இப்போது ஆளுநரை மாற்றி விடாதீர்கள் என பேசி தங்களுக்கு தாங்களே ஆறுதல் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திமுகவினரின் இந்த நிலை பரிதாபமாக இருக்கிறது. ஆளுநர் பேசுவது திமுகவுக்கு சாதகம் என்றால், கல்யாண வீட்டில் கூட ஆளுநரை நினைத்து, நினைத்து ஏன் கதற வேண்டும்? ‘ஆரிய – திராவிட இனவாதம்’ என்பது மதம் மாற்றுவதற்காக தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட, கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் பரப்பிய கட்டுக்கதை. ஆரிய – திராவிட இனவாதம் என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரால் நிராகரிக்கப்பட்ட ஒன்று.

திமுகவால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. ராகுல் காந்தி , தன்னை பூணூல் அணிந்த பிராமணர் என்று பகிரங்கமாக அறிவித்தவர். அவர் ஆரியரா? திராவிடரா? குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியின பெண்மணி திருமதி திரெளபதி முர்மு அவர்களை ஆதரிக்காமல், திமுக ஆதரித்த திரு யஷ்வந்த் சின்கா ஆரியரா? திராவிடரா?

திமுக கூட்டணி வைத்துள்ள மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சரத்பவார், உத்தவ் தாக்கரே ஆகியோரெல்லாம் ஆரியர்களா? இல்லையா என்பதை திமுக தெளிவுப்படுத்த வேண்டும். இப்படி சந்தர்ப்பவாத அரசியலுக்காக திராவிடம், திராவிடர் என்று திரும்ப திரும்பச் சொல்லி, தமிழ், தமிழ்நாடு என்பதை திமுக கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் இப்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உண்மையான வரலாற்றை படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இனி திமுகவின் கட்டுக்கதைகள் மக்களிடம் எடுபடாது.’ என தெரிவித்துள்ளார்.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…