கேரளா குண்டு வெடிப்பு…மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை… அலர்ட்டில் அரசு : அமைச்சர் போட்ட உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 October 2023, 2:47 pm

கேரளா குண்டு வெடிப்பு…மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை… அலர்ட்டில் அரசு : அமைச்சர் போட்ட உத்தரவு!!

கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள களமச்சேரியில் உள்ள மதவழிபாட்டு அரங்கில் இன்று சிறப்புப் பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் சுமார் 2,000 பேர் ஒன்று கலந்து கொண்டனர்.

அப்போது அனைவரும் பிரார்த்தனை செய்த போது திடீரென வெடிச் சத்தம் கேட்டுள்ளது. அடுத்தடுத்து வெடிச் சத்தம் கேட்ட நிலையில், பிரார்த்தனை கூடத்தில் பல இடங்களில் தீ பற்றியுள்ளது. இதனால் பதறியடித்துக் கொண்டு அங்கிருந்து பலரும் சிதறி ஓடியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் அங்குப் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது உடல்நிலை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இது வெடி விபத்தா இல்லை திட்டமிட்டு நந்தப்பட்ட குண்டுவெடிப்பா என்பதில் முதலில் பலருக்கும் சந்தேகம் இருந்தது. இதற்கிடையே இந்தச் சம்பவம் குண்டுவெடிப்பு தான் என்பதை அம்மாநில டிஜிபி ஷேக் தர்வேஷ் சஹேப் உறுதி செய்துள்ளார்.

இதற்கிடையே அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இந்தக் குண்டுவெடிப்பால் பலரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், விடுமுறையில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்பும்படி அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்குமாறு சுகாதாரத் துறை இயக்குநர் மற்றும் மருத்துவக் கல்வித் துறை இயக்குநருக்கு வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

விடுப்பில் இருக்கும் மருத்துவர்கள் உட்பட அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் உடனடியாக பணிக்கத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. களமச்சேரி மருத்துவக் கல்லூரி, எர்ணாகுளம் பொது மருத்துவமனை மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் வசதிகளைத் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும், கூடுதல் சுகாதார ஊழியர்களைக் களமிறக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மற்ற மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்குச் சிகிச்சை தரத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு அமைச்சர் வீணா ஜார்ஜ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இன்று காலை கொச்சியின் களமச்சேரி பகுதியில் உள்ள பிரார்த்தனை கூட்டத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இன்று காலை அங்கே பல முறைக் குண்டு வெடிப்பு நடந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் இது ஐஇடி மூலம் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு என்று கூறப்படும் நிலையில், போலீசார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வெறுப்பு கருத்துகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்ந்து நடைபெறும் நிலையில், விரைவில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. கேரளாவில் யாருமே எதிர்பார்க்காத வகையில் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Anirudh Christmas Celebration ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!
  • Views: - 422

    0

    1