கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழுகிறதா? 50 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பு.. பரபர பின்னணி!!
Author: Udayachandran RadhaKrishnan4 November 2023, 6:56 pm
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழுகிறதா? 50 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பு.. பரபர பின்னணி!!
கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.
காங்கிரஸ் சார்பில் சித்தராமையா முதல்வராக பொறுப்பேற்றார். கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் துணை முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
முன்னதாக கர்நாடகா முதல்வர் யார்? என்பதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் மேலிட ஆதரவுடன் சித்தராமையா முதல்வர் பதவியை தட்டி சென்றார். இருப்பினும் முதல் இரண்டரை ஆண்டுகள் மட்டும் சித்தராமையா முதல்வராக நீடிப்பார்.
அதன்பிறகு கடைசி இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமார் முதல்வராக்கப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு சித்தராமையா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி 5 ஆண்டுகள் இருக்கும். இந்த 5 ஆண்டும் நானே முதல்வராக இருப்பேன்” என்றார். இது டிகே சிவக்குமார் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி தற்போது வரை டிகே சிவக்குமார் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் சித்தராமையாவின் இந்த கருத்து என்பது அவருக்கு அதிருப்தியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும், அமைச்சருமான பிரியங்க் கார்கே பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் குதிரைபேரம் நடத்த ரூ.1000 கோடி அனுப்பி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வந்தால் ரூ.50 கோடியும், அடுத்து அமையும் பாஜக ஆட்சியில் அமைச்சர் பதவியும் வழங்கப்படும்” என ஆஃபர் கொடுத்து வருவதாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் தான் கர்நாடகாவின் மூத்த பாஜக தலைவரும், எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் அமைச்சருமான முருகேஷ் நிரானி புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.
அதாவது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 50 பேர் பாஜக மேலிடத்துடன் தொடர்பில் உள்ளனர். இதனால் காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் முழுமையாக 5 ஆண்டு ஆட்சியை பூர்த்தி செய்யாது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயாப்புரா மாவட்டம் ஜூமநாலா கிராமத்தில் முருகேஷ் நிரானி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகா காங்கிரஸ் கட்சியினர் 2 பிரிவாக இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
அதேநேரத்தில் கட்சிக்கும் 4 பிரிவுகளாக உள்ளனர். 4 பேர் துணை முதல்வர் பதவியை கேட்கின்றனர். முதல்வர் பதவி தொடர்பாகவும் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் அரசில் கொந்தளிப்பான சூழல் உள்ளது. இந்த அரசு கண்டிப்பாக 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யாது.
இப்போதே 50 எம்எல்ஏக்கள் பாஜக மேலிடத்துடன் தொடர்பில் உள்ளனர். துணை முதல்வர் பதவி கிடைக்காதவர்கள், அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் என அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளனர். அவர்களே பாஜகவின் கதவை தட்டி இருக்கின்றனர்.
இதனால் நாங்கள் அரசை கவிழ்க்க வேண்டாம். அது தானாகவே கவிழ்ந்து விடும். மேலும் பல்வேறு இலவச திட்டங்களை தேர்தல் சமயத்தில் அறிவித்தனர். ஆனால் அதனை செயல்படுத்தவில்லை. பெண்களுக்கு அரசு பஸ்சில் இலவசம் என அறிவித்துவிட்டு பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர்.
அதோடு வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. மேலும் பணம் கொடுத்தால் மட்டுமே பணிகள் நடக்கிறது. இதனால் வரும் நாட்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மாநிலத்தில் இருக்குமா? இல்லையா? என்பதில் சந்தேகம் உள்ளது” என்றார்.