அமைச்சரை ‘ஐடி’யிடம் போட்டுக் கொடுத்த கருப்பு ஆடு யார்?…திமுக குழப்பம்!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2023, 7:12 pm

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடுகள், அவர் தொடர்புடைய கல்வி நிலையங்கள், கட்டுமான மற்றும் நிதி நிறுவனங்கள், தொழில், பட அதிபர்களின் வீடுகள், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை நவம்பர் 3ம் தேதி அதிரடி ரெய்டில் இறங்கியது,
பல இடங்களில் இந்த சோதனை இரண்டாவது நாளாகவும் நீடித்தது.

இது திமுகவினரை மிகுந்த அதிர்ச்சியடைய வைத்துள்ளது, என்பது நிஜம்!

ரெய்டு மேல் ரெய்டு

சென்னை, கோவை, கரூர் திருவண்ணாமலை, விழுப்புரம் என்று மட்டுமல்லாமல் தமிழகத்தை கடந்து கர்நாடக, ஆந்திர மாநிலங்களிலும் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி அதிகாரிகள், தீவிர சோதனையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இது கடந்த மாதம் அரக்கோணம் தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்டதைவிட அதிக எண்ணிக்கை ஆகும்.

ஏனென்றால் அவருக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் மட்டுமே 60 இருக்கும் என்கிற நிலையில், அதைவிட குறைவான எண்ணிக்கையில் கல்வி நிலையங்களை கொண்டுள்ள அமைச்சர் எ.வ. வேலு ஏன் ஐடி அதிகாரிகளால் பெரிய அளவில் குறி வைக்கப்பட்டார்? என்ற கேள்விதான் அரசியல் வட்டாரத்தில் அனல் பறக்கும் விவாதத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது.

எ.வ வேலு குவித்த சொத்துகள்

தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடந்திருக்க முகாந்திரம் உள்ளது என்ற சந்தேகத்தின் பேரில்தான் நாங்கள் இந்த சோதனைகளை இத்தனை இடங்களில் நடத்துகிறோம் என்று வருமானவரித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். என்றாலும் கூட அந்த ஆதாரங்கள் அவர்களுக்கு எப்படி, யார் மூலம் கிடைத்தது? என்ற ஒரு கேள்வியும் எழுகிறது.

40 வருடங்களுக்கு முன்பு பஸ் கண்டக்டராக பணி புரிந்த எ. வ. வேலு அரசியலுக்கு வந்த பின்பு, அதுவும் திமுகவில் அமைச்சரான பிறகு அவரால் எப்படி பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கல்வி நிறுவனங்களை கட்ட முடிந்தது? அவருக்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை சொத்துக்கள் இருக்கலாம் என்று கூறப்படுவதும் எப்படி? என்பன போன்ற கேள்விகளும் விஸ்வரூபம் எடுத்துள்ளன.

இதனால் அமைச்சருக்கு மிக நெருக்கமான அல்லது வேண்டாதவர்கள் யாரேனும் கருப்பு ஆடுகளாக மாறி இருப்பார்களோ என்ற சந்தேகம் திருவண்ணாமலை மாவட்ட திமுகவினருக்கு எழுந்துள்ளது. இல்லையென்றால் அமைச்சர் எ வ வேலு யார் யாருடன் எந்த வகையில் லிங்க் வைத்திருந்தார் என்பதையெல்லாம் வருமானவரித் துறையால் இவ்வளவு நுணுக்கமாக கண்டுபிடிதிருக்கவே முடியாது என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

திமுக பிரமுகர் தான் காரணமோ?

அவர்களின் சந்தேகப்பார்வை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட முன்னாள் திமுக துணை செயலாளரான சாவல் பூண்டி சுந்தரேசன் மீது திரும்பியுள்ளது, என்கிறார்கள்.

திமுகவில் சிறந்த பேச்சாளராக அறியப்பட்ட 70 வயது சாவல்பூண்டி சுந்தரேசன் ஏற்கனவே மனைவி, மகன், பேரப்பிள்ளைகள் உள்ள நிலையில், 2020-ல் திருவண்ணாமலையைச் சேர்ந்த 27 வயது ஆராய்ச்சி மாணவி அபிதாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியவர்.

இவருக்கும், எ வ வேலுவுக்கும், 2018ம் ஆண்டு முதலே ஏழாம் பொருத்தம்தான்.

தற்போது சாவல் பூண்டி சுந்தரேசன் திமுகவில் எந்த பதவியிலும் இல்லையென்றாலும் கூட ஐடி அதிகாரிகளுக்கு டீடெய்லான தகவல்களை அவர்தான் தெரிவித்திருக்க வேண்டும் என்று திமுகவினரில் பலரும் நம்புகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது பிப்ரவரி மாதம் திருவண்ணாமலை மாவட்ட திமுக நிர்வாகி ஒருவரிடம் சாவல் பூண்டி சுந்தரேசன் போனில் பேசும்போது எ வ வேலுவை கடுமையாக தாக்கி இருந்ததுதான்.

அது தொடர்பான ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையையும் அப்போது ஏற்படுத்தியது. இதற்காக அவர் கட்சியிலிருந்து உடனே தற்காலிக நீக்கமும் செய்யப்பட்டார்.

அன்று அவர் பேசியது இதுதான்: “வேலு கட்சிக்கு வந்து பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. அப்பன் குடை நிழலில் இருக்கிற அவரோட மகன் கம்பனை, ‘கலியுக கம்பன், கலசப்பாக்கத்தைக் காப்பாற்ற வந்த கடவுள்’னு ஜால்ரா பசங்க சொல்றானுங்க. என்ன கொடுமை பாரு?… அப்ப அரசியலில் நான் என்ன பண்ணுவேன். நாங்க உழைச்ச உழைப்பெல்லாம் வீண் தானே?…

அப்பா பள்ளிக்கூடம், ஐடிஐ, என்ஜினியரிங் காலேஜ்ன்னு 8 வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழகத்தில் அவர்களுக்கு 6,000 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஸ்பின்னிங் மில் உள்ளது. ஆந்திராவில் கிரானைட் கம்பெனி இருக்கிறது. மெடிக்கல் காலேஜ் கட்டுகிறார். கரூரில் 500 கோடி ரூபாய் பைனான்ஸ் விடுகிறார். சினிமா படத்துக்கு பைனான்ஸ் பண்றார். சினிமா படம் விநியோகம் பண்றார். டிவி தொடர் எடுக்கிறார்.

இங்க ஒருத்தன் 20, 30 வருஷமா சாவல்பூண்டியில கஷ்டப்படுறான். கொடி எடுத்துக்கொண்டு ஓடுறான். ரத்தத்தை சிந்துறான். மந்திரி எதிர்ல கத்துறான். ஜெயிலுக்கு போறான். அவன்லாம் அப்படியே செத்துப்போறான். ஆனால், அப்பனும் வாழ்க்கையை அனுபவிக்கனும். புள்ளையும் வாழ்க்கையை அனுபவிக்கனும். எவ்வளவு தொழில் இருக்கிறது. அதில் எதிலாவது போய் வளருங்கள் என்றால், இவன் பிழைப்பை வந்து கெடுக்கிறானே. அப்பன் மகன் அது கலைஞராக இருந்தாலும் கலைஞர் பிள்ளையாக இருந்தாலும் அவங்களுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்.

அப்பா மாவட்ட செயலாளர் ஆகிறார். எம்.எல்.ஏ.வாகிறார். எல்லா தொகுதியையும் அனுபவிக்கிறார். அப்ப நாங்கள் எல்லாம் இந்த கட்சியில் உழைத்து என்ன பயன்? இது கட்சியா இல்லை அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து விட்டோமா? கட்சி எவ்வளவு கேவலமாப் போய்க்கிட்டிருக்கு பாரு” என்று காட்டமாக விமர்சித்து இருந்தார்.

இந்த ஆடியோவால் அதிர்ச்சி அடைந்த எ.வ.வேலு, அடுத்த சில நாட்களில் தன்னிலை விளக்கம் அளித்தபோது “எனக்கு 6,000 ஏக்கர் நிலம் இல்லை. 500 கோடி ரூபாயில் பைனான்ஸ் தொழிலும் செய்யவில்லை” என்று மறுத்தார். அதேநேரம் அவர், தன்னைக் குற்றம் சாட்டிய சாவல் பூண்டி சுந்தரேசனின் பெயரை மறந்தும் கூட அப்போது உச்சரிக்கவில்லை.

“இரண்டரை வருடங்களுக்கு முன்பு திமுக நிர்வாகி சாவல் பூண்டி சுந்தரேசன் மனம் குமுறி வெளியிட்ட விஷயங்களை தற்போது வருமான வரித்துறை நடத்தும் சோதனைகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் அதன் அடிப்படையில்தான் ரெய்ட் நடந்துள்ளது போல் தெரியும். ஏனென்றால் சினிமா பட அதிபர் ஒருவர் வீட்டிலும், கோவையில் அமைச்சர் ஏ.வ.வேலுவுக்கு நெருங்கிய உறவினர் வீட்டிலும், கரூரில் ஒரு நிதி நிறுவனத்திலும் ஆந்திர கிரானைட் கம்பெனி ஒன்றிலும் ஐடி சோதனை நடத்தி இருப்பதால் இப்படி நினைக்கத் தோன்றும். ஆனால் இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்பு எ வ வேலுவை எதிர்த்து அரசியல் செய்வது கடினம் என்பதை சாவல் பூண்டி சுந்தரேசன் நன்றாகவே புரிந்து கொண்டிருப்பார். அதுவும் அந்த ஆடியோவில் திமுக தலைவர் ஸ்டாலினையும், இளைஞரணி செயலாளர் உதயநிதியையும் மறைமுகமாக தாக்கி பேசியதாலும், இன்று திமுக ஆட்சியில் இருப்பதாலும் அவரால் எதுவும் செய்து விட இயலாது என்பதுதான் எதார்த்தம். அதேநேரம் திமுகவில் அசுர வளர்ச்சி கண்டுள்ள எ வ வேலுவை விரும்பாதவர்கள், வேண்டாதவர்கள் அவருடைய மாவட்டத்தில் நிறையவே உண்டு, என்பார்கள்.

அதிமுகவில் இருந்து வந்தவர் இன்று திமுகவில் மிக முக்கிய பொறுப்புக்கு வந்துவிட்டார், கோடி கோடியாக பணமும் சம்பாதித்து விட்டார். நாம் 35, 40 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம், நம்மை தலைமை கண்டு கொள்ளவே இல்லை என்ற மனப்புழுக்கம் பலரிடம் இருக்கும்.

அவர்களில் ஒரு சிலர் எம்எல்ஏக்களாகவும் இருக்கிறார்கள், என்று கூறுவார்கள். அவர்களின் ஆதரவாளர்கள் கூட எ வ வேலுவின் ரகசியமாக கண்காணித்து, பதவி அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் யார் யாருடன் எல்லாம் பண ரீதியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்ற தகவல்களை திரட்டி அதை வருமான வரித்துறைக்கு விரிவாக தெரிவித்திருக்க வாய்ப்பு உள்ளது, என்பதையும் மறுக்க முடியாது.

அதேபோல திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவில் முக்கிய பொறுப்புகள் வகிக்கும் ஒரு சில நிர்வாகிகள் கூட வருமான வரித்துறைக்கு தெரிவித்திருக்கலாம். எப்படி இருந்தாலும் அமைச்சர் எ வ வேலு தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டிருப்பது, திமுகவுக்கு தலைவலியை தரும் ஒன்றாகவே அமையும். அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் நேரத்தில் இத்தகைய ரெய்டுகள் திமுக தலைமைக்கு அக்னி பரீட்சையாகத்தான் இருக்கும்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த சோதனை மேல் சோதனையை திமுக எப்படி சமாளிக்க போகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வி!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 408

    0

    0