பேருந்து நிலையத்தில் பெண் குத்திக்கொலை… திருப்பூரை உலுக்கிய சம்பவம் ; வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!
Author: Babu Lakshmanan6 November 2023, 12:39 pm
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 1 ம் தேதி பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு 10 மணி அளவில் நடுத்தர வயது பெண்ணின் தலையில் சராமரியாக கத்தியால் குத்திக் கொலை செய்த நபரை பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தெற்கு காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை, பொதுமக்கள் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து பெண்ணை கத்தியால் குத்திய நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த கணேசன் (52) என்பதும், ஆக்டிங் டிரைவராக பணியாற்றும் இவர், திருமணமாகாத நிலையில், பழனிக்கு சென்ற போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பவளக்கொடி (எ) சாந்தி (48) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சாந்தியை திருப்பூர் அடுத்த கோவில்வழி பகுதியில் குடியமர்த்திய கணேசன் ஒட்டன்சத்திரத்தில் பணியாற்றியபடி சாந்தியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை அறிந்த கணேசன் நேற்று இரவு திருப்பூருக்கு வந்துள்ளார்.
அப்போது, பேருந்து நிலையத்தில் சாந்தி வேறு ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்ததை கண்டதும் ஆத்திரமடைந்த கணேசன் காய்கறி வெட்டும் கத்தியால் சாந்தியின் தலை மற்றும் பின் முதுகு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சாந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.