பெரியார் விவகாரத்தில் பல்டி அடித்த அண்ணாமலை… காத்திருந்து காத்திருந்து பாஜகவினர் வீணாகத்தான் போவார்கள் ; ஜெயக்குமார் பதிலடி…!!!
Author: Babu Lakshmanan10 November 2023, 9:30 am
ஓபிஎஸ்யின் நிலை தற்போது சினிமா நகைச்சுவை காட்சியை போன்று அவர் கால் வைத்த இடம் எல்லாம் அவருக்கு கன்னி வெடியாய் உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
திருவள்ளூர் அதிமுக வடக்கு மாவட்ட கழகம் மாணவர் அணி செயலாளர் ராகேஷ் பவித்ரா அவர்களின் மகன் அதிரன் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் ஆர்எம்கே கல்விக்குழும தலைவர் ஆர்எஸ் முனிரத்தினம், மாவட்ட கழகச் செயலாளர் அலெக்ஸாண்டர் பலராமன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னைய்யன், ஜெயக்குமார், மூர்த்தி, ரமணா, அப்துல் ரஹீம், முன்னாள் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது :- தற்போது ஆதரவான அலை திமுகவிற்கும், எதிர்ப்பான அலை திமுகவிற்கும் உள்ளது. திமுகவிற்கு கடும் பாதிப்பை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஏற்படுத்தும். மகத்தான வெற்றியை அதிமுக பெறும்.
அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை. பெரியாரை அவமதிப்பதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது அண்ணாமலை பெரியார் விவகாரத்தில் பல்டி அடித்துள்ளார். கடல் வற்றி கொக்கு கருவாடு சாப்பிட முடியுமா கடல் தண்ணி வற்றப் போவதும் கிடையாது, அவர்கள் காத்திருந்து பாஜகவினர் வீணாகத்தான் போவார்கள்.
கட்சியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஓபிஎஸ் மேல்முறையீடு அப்பீல் செய்து வருகிறார். ஓபிஎஸ் நிலை சினிமா நகைச்சுவை காட்சியைப் போன்று கால் வைத்த இடமெல்லாம் கன்னிவெடி போன்று உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தை கடுமையாக நாங்கள் எதிர்க்கிறோம். அவர்களின் தவறை சுட்டிக்காட்டுகிறோம். பாராளுமன்றத் தேர்தலுக்கு நாள் உள்ளது. தேர்தல் நெருங்கும்போது, கூட்டணி குறித்து உரிய விவரங்கள் தெரிய வரும் என்று அவர் தெரிவித்தார்.