இனி ஐ.நா. சபைக்கே சென்றாலும் ஓபிஎஸ்-க்கு தோல்வி தான்… சினிமா வசனம் எடுபடாது ; ஆர்பி உதயகுமார் பதிலடி!!!
Author: Babu Lakshmanan10 November 2023, 11:54 am
ஓபிஎஸ் பேசிய சினிமா வசனம் எடுபடாது என்றும், ஐநா சபைக்கு சென்றாலும் தோல்விதான் பெறுவார் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, பெட்ஷீட் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை நெல்லைபாலு செய்திருந்தார். நலத்திட்டங்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார், அம்மா செரிடபுள் டிரஸ்ட் செயலாளர் மு.பிரியதர்ஷினி ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், கருப்பையா, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் இருந்தனர்.
தொடர்ந்து, ஆர்பி உதயகுமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :- காவிரி, முல்லை பெரியார் போன்றவற்றில் தொடர்ந்து அரசு மெத்தன போக்கு காட்டி வருகிறது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றுத் தந்தோம். ஆனால் இன்றைக்கு உபரி நீரை கூட கர்நாடக அரசு திறக்கவில்லை. காவிரிக்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று காவேரி ஒழுங்காற்று குழு ஆணையம் உத்தரவிட்டும், தொடர்ந்து கர்நாடக அரசு தண்ணீரை திறக்க மறுக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடக அரசை கண்டிக்காமல் தொடர்ந்து மௌன விரதம் இருந்து வருகிறார்.
இன்றைக்கு தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு, பத்திர பதிவு உயர்வு என விலைவாசி உயர்ந்துள்ளது. தற்போது கட்டுமான பொருட்களான மணல், ஜல்லி, சிமெண்ட் விலை 30% உயர்ந்து விட்டது. கட்டுமான பொருள் விலைவாசி உயர்வால் கட்டுமானம் நிறுத்தப்பட்டு கட்டிடங்கள் எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. தற்போது மணல் தட்டுப்பாடால் இன்றைக்கு 40 சதவீதம் விலை உயர்ந்தது என மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர். 50 கிலோ சிமெண்ட் விலை 360 ரூபாயாக இருந்தது. தற்போது 440 ரூபாயாக உயர்ந்து விட்டது.
ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தை 59 லட்சம் நபரை தகுதியில்லை என நிராகரித்துவிட்டனர். ஆனால், மேற்முறையீடு செய்யலாம் என்று அறிவித்துள்ளனர். இதுவரை 11.85 லட்சம் நபர்கள் விண்ணப்பித்தனர். அதில் 7.35 லட்சம் பேருக்கு தான் அறிவித்துள்ளனர். மேல் முறையீட்டில் விதியை தளர்த்தினால் தான் அதிகம் பேருக்கு வழங்க முடியும். குறிப்பாக. ஏழை. எளிய மக்களுக்கு இந்த உரிமை தொகை கிடைக்கவில்லை.
இன்றைக்கு ஓபிஎஸ் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையத்திற்கு சென்றார். ஆனால் இன்றைக்கு சட்டரீதியாக தர்மம் வென்றுள்ளது. இதற்கு தற்போது சினிமா வசனத்தை பேசி இருக்கிறார். சினிமா வசனம் ஒருபோதும் எடுபடாது. ஐக்கிய நாட்டு சபைக்கு ஓபிஎஸ் சென்றாலும், அங்கு தர்மம் தான் ஜெயிக்கும்.
வெள்ளைக்கல் பகுதியில் கழிவு நுரையாக உள்ளது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து, மதுரையில் அனைத்து சாலைகளும் மோசமாக உள்ளது. இதை சீர்படுத்த தவறி விட்டால் எடப்பாடியாரின் ஆணையை பெற்று மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். அதேபோல், இன்றைக்கு தொற்று நோய் தடுக்க வண்ணம் மருத்துவ முகாம்களை போன்றவற்றை நடத்திட வேண்டும், என கூறினார்.