அக்கறை இல்லாத முதலமைச்சர் ஸ்டாலின்… விவசாயிகளின் கண்ணீர் திமுக அரசை சும்மா விடாது ; எச்சரிக்கும் ஆர்பி உதயகுமார்!!
Author: Babu Lakshmanan11 November 2023, 11:14 am
விவசாயிகள் மீது அக்கறை இல்லாத முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :- இன்றைக்கு விவசாயிகள் எல்லாம் பாதிப்படைந்து கண்ணீர் வடித்து வேதனையில் உள்ளார்கள். இதற்கு திமுக அரசு தீர்வு காணவில்லை. எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது டெல்டா பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதை அறிவித்தார். அதன் மூலம் காவிரி காப்பாளர் என்கிற பட்டத்தினை விவசாயிகள் அவருக்கு பட்டம் சூட்டி மகிழ்ந்தார்கள்.
ஏனென்றால் அன்றைக்கு துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டார். அப்போது தோழமை கட்சிகள் எல்லாம் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மீண்டும் பொன்விளையும் பூமியாக எடப்பாடியார் உருவாக்கி கொடுத்தார்.
நான் டெல்டாகாரன் என்று சொல்லுகிற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், இன்றைக்கு குறுவை சாகுபடிக்கு இன்சூரன்ஸ் செய்யாதது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது, தமிழக அரசு அதற்கு தகுதியான முயற்சிகள் எடுக்கவில்லை, ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் முதலமைச்சராக இருந்த பொழுது 100 சதவீதம் பயிர் காப்பீடு தொகையை பெற்று தந்தார்கள். அது மட்டுமல்லாது, வெள்ளம் போன்ற காலங்களில் நிவாரணம், இடுபொருள் மானிய நிவாரணமாக பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்குவதோடு, இன்சூரன்ஸ் காப்பீடு நிறுவனத்தில்
மூலம் ஒரு ஏக்கருக்கு 84 ஆயிரம் வரை பெற்று தந்தார். தற்போது திமுக அரசு ஒரு ஏக்கருக்கு13,500 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு போதாது. ஆண்டு முழுவதும் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆனால், குறுவை சாகுபடிக்கான காப்பீட்டை செய்ய இந்த அரசு இன்னமும் முன்வரவில்லை.
குருவை சாகுபடிக்கான காப்பீட்டை இந்த அரசு கைவிட்டதன் காரணமாக, இன்றைய கேள்வியாக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்தில் கூட அந்த விவாதம் எழுப்பப்பட்டிருக்கிறது. விவசாயிகள் மீது அக்கறை இல்லாத ஒரு முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். இந்த நிலை, தொடர்ந்தால் விவசாயிகள் கொதித்து எழுதுவார்கள். முல்லை பெரியாரில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீரைப் பெற்று தராதவர் எப்படி காவிரியில் இருந்து தண்ணீரை எப்படி தர முடியும்.
இன்றைக்கு அக்கறை இல்லாத அரசாக, மக்கள் விரோத நிலைப்பாட்டை தான் அரசு கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக நமக்கு தெரிகிறது. கடவுள் என்ற முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி, அந்த விவசாயி கண்ணீர் வடித்தால் அந்த பாவம் திமுக அரசை சும்மா விடாது.
இதற்கெல்லாம் தீர்வு காண்பதற்கு எடப்பாடியாரின் ஆட்சி காலத்திலே செய்த அந்த மகத்தான நிவாரண நடவடிக்கை எல்லாம் முன்மாதிரியாக கொண்டு நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் என கூறினார்.