திமுக அமைச்சரின் மகன், பேரன் மீது சரமாரி தாக்குதல்… தியேட்டரில் 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!!!
Author: Udayachandran RadhaKrishnan11 November 2023, 11:28 am
திமுக அமைச்சரின் மகன், பேரன் மீது சரமாரி தாக்குதல்… தியேட்டரில் 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!!!
தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் சாத்தூர் ராமச்சந்திரன் என்று அழைக்கப்படும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.
இவரது மகன் ரமேஷ், அமைச்சரின் பேரன் கதிர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இரவு காட்சியை பார்த்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அமைச்சரின் மகன் மற்றும் பேரன் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் அமர்ந்து கூச்சலிட்டுக்கொண்டும் விசில் அடித்துக்கொண்டும், அசிங்கமான வார்த்தைகளை பேசிக்கொண்டும் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அமைச்சர் மகன் ரமேஷ் மற்றும் அங்கிருந்த சக பார்வையாளர்கள் தட்டிக்கேட்டு உள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதில் அமைச்சர் மகன் மற்றும் பேரன் மீது அந்த கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது.
படுகாயம் அடைந்த அமைச்சரின் பேரன் கதிர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
தாக்குதலில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலும் திரையரங்கின் அவசர வாயில் வழியாக தப்பிச்சென்று உள்ளது. இது தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அமைச்சர் மகன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
தாக்குதல் நடத்திய கும்பல் யார், அமைச்சரின் மகன் மற்றும் பேரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா? என்ற எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு கேபினட்டில் மூத்த அமைச்சராகவும், திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இருந்து வரும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.