30 மாதங்களாக திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை சிக்கி சீரழிந்து வருகிறது : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2023, 2:45 pm

30 மாதங்களாக திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை சிக்கி சீரழிந்து வருகிறது : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் மருந்துகள் மொத்தமாக வாங்குவது குறைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ அதிகாரிகளுக்கு உள்ளூர் கொள்முதல் மூலம் பாதியளவு மருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிய வருகிறது.

இதனால், மருத்துவ மனைகளுக்கு அனைத்து மருந்துகளும் விநியோகம் செய்யப்படாததால் ஏழை, எளிய நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மருந்துகள் வாங்க நாளை வாருங்கள்; அடுத்த வாரம் வாருங்கள் என்று அலைக்கழிப்பதால், ஏழை, எளிய நோயாளிகள் பலமுறை பயணச் செலவு செய்து மருத்துவ மனைகளுக்கு வந்தும் மருந்து வாங்க முடியாமல் அவதிப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பல ஏழை, எளிய நோயாளிகள் பேருந்து போக்குவரத்து செலவுக்குக் கூட பணம் இல்லாமல் அவர்களது இருப்பிடங்களில் இருந்து வெயிலிலும், மழையிலும் நடைபயணமாகவே வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியில் செயல்படுத்திய வலி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் என்.சி.டி. அதாவது, தொற்று நோய்கள் கண்டறிதல் திட்டத்தை பெயர் மாற்றி ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்று ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது விடியா தி.மு.க. அரசு.
இதன்மூலம் ஓரிரு முறை மட்டுமே நோயாளிகளுக்கு நேரடியாக மருந்துகள் வழங்கப்பட்டன என்றும், தற்போது அனைத்து மருந்துகளும் நோயாளிகளுக்கு முழுமையாக வழங்கப்படுவதில்லை என்றும் செய்திகள் தெரிய வருகின்றன.

தகுதி வாய்ந்த மருத்துவர்கள் பலர் இருந்தும், 1.11.2023 முதல் மருத்துவக் கல்வி இயக்குநர் பணியிடம் காலியாகவே இருப்பது, அரசு மருத்துவர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

அம்மாவின் ஆட்சியிலும், எனது தலைமையிலான அம்மாவின் அரசிலும், தமிழக சுகாதாரத் துறை முதன்மை துறையாகத் திகழ்ந்தது. எங்களது ஆட்சியில் மத்திய அரசிடம் இருந்து பல்வேறு விருதுகளைப் பெற்ற அதே தமிழக சுகாதாரத் துறை, இன்றைய விடியா தி.மு.க. ஆட்சியில் அதிக விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள துறையாக மாறியுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த மருத்துவர்கள் தற்போது மனம் வெதும்பி உள்ளனர்.

தற்போதைய விடியா தி.மு.க. ஆட்சியாளர்களின் கொடுங்கரங்களில் சுகாதாரத் துறை சிக்கி சீரழிந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். இந்த கையாலாகாத ஆட்சியாளர்களுக்கு வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவது உறுதி.

இனியாவது அரசு மருத்துவமனைகள், மருத்துவப் பணியாளர்கள், கட்டுப்பாட்டு அறை ஆகியவை முழுமையாக இயங்கவும்; காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பவும்; அனைத்து அரசு மருத்துவ மனைகளுக்கும் உடனடியாக தேவைப்படும் மருந்துப் பொருட்களை வழங்கிட வேண்டும் என்றும்; கிராமப் பகுதிகளிலும் அரசு கிளினிக்குகளை திறந்திட வேண்டும் என்றும்; இந்திய மருத்துவக் கல்வி இயக்குநர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், விடியா தி.மு.க. அரசின் முதலமைச்சரையும், சுகாதாரத் துறை மந்திரியையும் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 314

    0

    0