முருகனின் திருமேனியில் வியர்வை சிந்தும் அற்புதம் ; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் மனமுருகி பிரார்த்தனை!!

Author: Babu Lakshmanan
18 November 2023, 8:20 pm

சூரனை சம்ஹாரம் செய்ய வேல்நெடுங்கண்ணியிடம் சிக்கல் சிங்காரவேலவர் சக்தி வேல் வாங்கும் நிகழ்வின் போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை சிந்தும் அற்புத நிகழ்வைக் கண்டு பக்தர்கள் மனமுருகி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் உள்ள பிரசித்திப் பெற்ற சிங்கார வேலவர் ஆலயம் அமைந்துள்ளது. சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக வரலாறு கூறுகிறது. வேல் வாங்கிய முருகனின் திருமேனி எங்கும் வியர்வை சிந்தும் அற்புதம் உலகிலேயே எங்கும் இல்லாத ஒன்றாகும்.

இவ்வாறு பல்வேறு சிறப்பு மிக்க கந்த சஷ்டி விழா கடந்த 13ஆம் தேதி துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் சிங்காரவேலவர் பவள ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் என பல்வேறு வகையான வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா நேற்று காலை நடைபெற்றது.

தெய்வானை, வள்ளி சமேத சிங்காரவேலவர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் தீப தூப ஆராதனைகளுக்கு பிறகு, அங்கு கூடியிருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர், கோவிலின் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. இரவு தேரிலிருந்து இறங்கி சிங்காரவேலவர் கோவிலுக்குள் சென்று, அன்னை வேல்நெடுங்கண்ணியை வணங்கினார். பின்னர், சூரனை சம்ஹாரம் செய்வதற்காக சக்திவேலை வாங்கினார்.

அப்போது, வீர ஆவேசத்தில் சிங்காரவேலவரின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை அரும்பியது உலகிலேயே எங்கும் காண முடியாத அரிய காட்சியாகும். இதனால் பரவசம் அடைந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கந்தனுக்கு அரகோரா முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு மனமுருகி முருகனை வழிபட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் இரவு 12 மணியளவில் சிங்காரவேலவருக்கு மஹாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…