திமுகவுக்கு OPS திடீர் ஆதரவு! அதிர்ச்சியில் டெல்லி பாஜக?…

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2023, 7:57 pm

ஆளுநர் ஆர்.என். ரவி திமுக அரசுக்கு திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அவருக்கே அனுப்பி வைத்துள்ள நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது பற்றும் பாசமும் கொண்டிருப்பது போல கருத்து தெரிவித்திருப்பதும், ஓபிஎஸ்சும் அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள் மூவரும் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டு போட்டு இருப்பதும் அரசியல் களத்தில் விவாதத்துக்குரிய விஷயங்களாக மாறி இருக்கிறது.

ஏனென்றால், சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்த பத்து மசோதாக்களில் ஜெயலலிதா பெயர் கொண்ட மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு வைக்கப்பட்ட பெயரை திமுக அரசு நீக்கி விட்டதாக கூறப்படுவது தவறு. பெயர் எதுவும் மாற்றப்படவில்லை.
தற்போது ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களில் 2020ம் ஆண்டில் ஜெயலலிதா பெயர் சூட்டி அனுப்பப்பட்ட மசோதாவும் ஒன்று. முதலமைச்சர் எவ்வித காழ்ப்புணர்வையும் காட்டாமல் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று அந்த மசோதாவையும் சட்டப்பேரவையில் வைத்துள்ளார். இது தெரியாமல்
ஒரு நொண்டி சாக்கை கண்டுபிடித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

ஆனால் இதுபோன்ற தந்திர வேலைகளை நிகழ்த்துவதில் திமுகவுக்கு இணையாக யாருமே கிடையாது என்ற விமர்சனம் பொதுவெளியில் எழுந்துள்ளது.

இதில், இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் வழக்கமாக அதிமுக கரை வேட்டி கட்டி சட்டப்பேரவைக்கு வரும் ஓ பன்னீர்செல்வம், இந்த சிறப்பு கூட்டத்திற்கு காவி வேட்டி அணிந்து சாமியார் போல வந்திருந்தார். அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருப்பதால் அவர் இப்படி வந்ததாக கூறப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் சென்றபோதும் இன்னும் சில விசேஷ நிகழ்வுகளின் போதும் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் ஓபிஎஸ் காவி வேட்டி கட்டி இருந்தாலும் கூட, தான் எப்போதும் பாஜகவின் ஆதரவாளன் என்பதை மறைமுகமாக உணர்த்தும் விதமாகத்தான் தமிழக சட்டப்பேரவைக்கு அவர் காவி
வேட்டி அணிந்து வந்தார் என்று கூறுகிறார்கள்.

ஓபிஎஸ் இப்படி காவி வேட்டியில் வந்ததை பார்த்து, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நான்கு பாஜக எம்எல்ஏக்களும் ஆச்சரியப்பட்டு மகிழ்ச்சியும் அடைந்தனர். ஆனால் அது வெகுநேரம் நீடிக்கவில்லை. தாங்கள் வெளிநடப்பு செய்த போதே ஓபிஎஸ்சும் அவருடைய ஆதரவாளர்களும் தங்களுடன் வருவார்கள் என்ற நம்பிக்கையும் பொய்த்துப் போனது.

ஆளுநர் ரவி, திமுக அரசுக்கு அனுப்பி வைத்த பத்து மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஓபிஎஸ்-ன் வேடம் கலைந்தது.

அத் தீர்மானத்துக்கு பகிரங்கமாகவே ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேரும் ஓட்டு போட்டு டெல்லி பாஜக மேலிடத்துக்கு கடும் அதிர்ச்சியும் அளித்தனர்.

ஏனென்றால் ஆளுநர் ரவி மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்டவர். அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாஜக தலைவர் ஜே பி நட்டா ஆகியோரின் நன் மதிப்பையும் பெற்றவர் என்பது நன்கு தெரிந்திருந்தும் கூட ஓபிஎஸ்சும் அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேரும் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டு போட்டது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் யார் பக்கம்? இருப்பார் என்ற கேள்வியையும் அரசியல் களத்தில் எழுப்பிவிட்டு உள்ளது.

பாஜகவுடன் செல்லலாமா? அல்லது தனது இரண்டு மகன்களின் அரசியல் எதிர்காலத்திற்காக திமுக பக்கம் சாயலாமா?… என்று மதில் மேல் பூனையாக ஓபிஎஸ் இருப்பது போலத் தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனுடன் சமீப காலமாக அவர் மோதல் போக்கை கொண்டு இருப்பதுதான்.

மூத்த மகன் ரவீந்திரநாத்துக்கு தேனி தொகுதியையும், இளைய மகன் ஜெயபிரதீப்புக்கு ராமநாதபுரம் தொகுதியையும் விட்டுக் கொடுக்கும்படி டிடிவி தினகரனிடம் ஓபிஎஸ் தொடர்ந்து கேட்டு வருவதாகவும், ஆனால் அதற்கு டிடிவி மறுத்துவிட்டதோடு நான் பாஜக கூட்டணியில் தேனியில் போட்டியிடுவது உறுதி, அதேபோல ராமநாதபுரம் தொகுதியில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் எனது கட்சி ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓட்டுகள் பெற்றுள்ளது. அதனால் அமமுக வேட்பாளர்தான் அங்கும் போட்டியிடுவார், இதை டெல்லி பாஜக மேலிடத்திற்கு நான் தெரிவித்தும் விட்டேன் என்று கறார் காட்டிருக்கிறார்.

இதுபற்றி ஓபிஎஸ் தனக்கு நெருங்கிய ஆடிட்டர் மூலம் டெல்லி பாஜக தலைமையை தொடர்பு கொண்டு தன் மனக்குறையை தெரிவித்து இருக்கிறார். அதற்கு “முதலில் ஐந்து மாநில தேர்தல்கள் முடியட்டும். அதன் பிறகு டிசம்பர் மாத இறுதியில் இது குறித்து பேசி முடிவு செய்வோம். நாடாளுமன்றத் தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில் நீங்கள் இதற்கு இவ்வளவு அவசரம் காட்ட வேண்டியதில்லை” என்று பாஜக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ்சிடம் அவருடைய இரு மகன்களும், திமுகவில் நாம் இணைந்து தேனி, ராமநாதபுரம் தொகுதிகளை கேட்டு வாங்கி போட்டியிடுவோம். வெற்றியும் பெறுவோம் என்று தடாலடியாக கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே திமுக ஆதரவு மன நிலையில் உள்ள ஓபிஎஸ்சும் இதை ஏற்றுக்கொண்டு விட்டார் என்றே தெரிகிறது.

இதனால்தான் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு ஆதரவாக, தான் மட்டுமின்றி தன்னை ஆதரிக்கும் மூன்று எம்எல்ஏக்களையும் ஓபிஎஸ்
ஓட்டுப் போட வைத்து விட்டார், என்கிறார்கள்.

இதன் மூலம் பாஜகவுக்கு அவர் நெருக்கடி கொடுத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. இதில் பாஜக மேலிடம் என்ன முடிவெடுக்கும் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. டிடிவி தினகரனையும், ஓபிஎஸ்சையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை ஈடுபடுத்தும் வாய்ப்பு உள்ளது. அல்லது விரைவில் மூவரையும் டெல்லிக்கு அழைத்து பேசவும் செய்யலாம்.

“அதேநேரம் அமைச்சர் தங்கம் தென்னரசு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது திமுக அரசு மிகுந்த அக்கறை கொண்டிருப்பது போல கருத்து தெரிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது” என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் முந்தைய அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, பணிக்கு செல்லும் ஏழைக் குடும்ப பெண்களுக்கு 50 சதவீத மானிய விலையில் ஸ்கூட்டர், அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் போன்ற மக்களின் வரவேற்பை பெற்ற பல முக்கிய நலத்திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அடியோடு நிறுத்திவிட்டது. ஏழைகளின் பசிப்பிணியை போக்குவதற்காக ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டு பல மாநில அரசுகள் இன்று பின்பற்றி வரும் அம்மா உணவகம் திட்டத்திற்கு போதிய நிதி ஓதுக்கீடு செய்யாமல் அதை திமுக அரசு முடக்குவதற்காக இப்போது எல்லா முட்டுக் கட்டைகளையும் போட்டு வருகிறது.

திமுக அரசு கொண்டு வந்த அரசு கல்லூரி மாணவிகளுக்கு மூன்று ஆண்டுகள் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை விட ஜெயலலிதா கொண்டு வந்த
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் எவ்வளவோ மேலானது. ஏனென்றால் மூன்றாண்டுகள் படித்து முடிக்கும் இந்த மாணவிகளுக்கு அதிக பட்சம் 36,000 ரூபாய்தான் கிடைக்கும். ஆனால் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தில் படிக்காத ஏழை குடும்ப பெண்களின் திருமணத்திற்கு 25 ஆயிரம் ரூபாயும், ஒரு பவுன் தங்கமும் வழங்கப்பட்டது. அதுவே பட்டதாரி பெண்கள் என்றால் திருமண உதவித் தொகை
50 ஆயிரம் ரூபாயாக இருந்தது. ஒரு பவுன் தங்கத்தின் இன்றைய மதிப்பு 45 ஆயிரம் ரூபாய் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர அரசு கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மட்டும்தான் இந்த உதவித் தொகை என்று ஜெயலலிதா எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

இந்தத் திட்டத்தால் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிய சுமார் ஒன்பது லட்சம் ஏழைக் குடும்ப பெண்களின் திருமணங்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. கொரோனா காலத்தில் அந்நோயின் தாக்கம் தமிழகம் முழுவதும் இருந்ததால் 2020ல் ஏழை பெண்களின் திருமணங்கள் தடைபட்டு தாலிக்கு தங்கம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மற்றபடி இத்திட்டம் தமிழக பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற ஒன்றாகும்.

உண்மையிலேயே ஜெயலலிதா மீது திமுக அரசுக்கு மிகுந்த அக்கறை இருக்குமேயானால், அமைச்சர் தங்கம் தென்னரசு முதலமைச்சர் ஸ்டாலினிடம் இதை தெரிவித்து ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேநேரம் ஏற்கனவே வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தை தலைமை இடமாக கொண்டு 2021 பிப்ரவரியில் அதிமுக அரசால் உருவாக்கப்பட்ட டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திமுக அரசு வந்த பின்பு அப்படியே முடக்கி போட்டு விட்டது. ஆனால் இப்போது ஜெயலலிதா பெயரிலான மீன் வளப் பல்கலைக்கழகத்தை நாங்கள் கொண்டு வர முடிவு செய்திருக்கிறோம் என்று திமுக அரசு கூறுவது நல்ல நகைச்சுவையாக இருக்கிறது.

ஏனென்றால், எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை அதிலும் குறிப்பாக 1972 க்கு பிறகு 1987ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் அவரை பெரியப்பா என்று அழைப்பேன் என ஒருபோதும் பொதுவெளியில் கூறாத ஸ்டாலின், 2021 தமிழக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜனவரி மாதம் முதல் முறையாக அப்படிச் சொன்னார். இது முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்திற்காக பேசப்பட்ட விஷயம் என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் இப்போது மறைந்த ஜெயலலிதா மீது திடீர் கரிசனம் காட்டுவது எதற்கு என்றுதான் தெரியவில்லை” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை
மீண்டும் திமுக அரசு கொண்டு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

  • Tamil actress Sana Khan updates பிரபல நடிகை மீண்டும் கர்ப்பம்..கோலிவுட்டில் பரபரப்பு..!
  • Views: - 404

    0

    0