15 தொகுதிகளை திமுக ஒதுக்குமா?…காங். கண்டிஷன்… கேஎஸ் அழகிரி டென்ஷன்!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2023, 9:50 pm

திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸுக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடுவதற்கு எத்தனை இடங்களை திமுக ஒதுக்கும்?… என்ற கேள்வி
கடந்த சில மாதங்களாகவே அரசியல் களத்தில் சூறாவளியாய் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.

ஐந்து தொகுதிகள்தான் கிடைக்கும், இல்லை இல்லை ஏழு தருவார்கள், 2019 தேர்தல் போல ஒன்பது ஒதுக்குவார்கள், இண்டியா கூட்டணியில் பிரதான கட்சியாக இருப்பதால் 12 இடங்கள் நிச்சயம் தருவார்கள், 15 தொகுதிகள் கிடைப்பது உறுதி என்று ஒவ்வொருவரும் பட்டிமன்றமே நடத்தும் அளவிற்கு இது விவாதப் பொருளாகவும் மாறிவிட்டது.

அதுவும் கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்பு இது தொடர்பான ஆருடங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியும் வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட பலரின் எதிர்பார்ப்பும் 15 தொகுதிகளை எப்படியாவது திமுகவிடம் கேட்டு பெற்று விடவேண்டும் என்பதாகவே உள்ளது.

இதனால் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்களும் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இது பற்றி வெளிப்படையாக பேசத் தொடங்கியும் விட்டனர். அதுவும் திமுக எத்தனை தொகுதிகளை ஒதுக்கினாலும் அதை பணிவோடும், மன நிறைவோடும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ள கே எஸ் அழகிரியின் ஆதரவாளர்களே இம்முறை திமுகவிடம் அதிக சீட்டுகளை கேட்டுப் பெறவேண்டும் என்று கொந்தளித்து இருப்பதுதான், இதில் ஆச்சரியமான விஷயம்!

அதை மிக அண்மையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பார்க்கவும் முடிந்தது. இதில் பங்கேற்ற மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர்,”தமிழக காங்கிரஸ் தலைமை நடத்தும் விழாக்கள், கூட்டங்களுக்கு கோஷ்டி தலைவர்கள் வருவதே இல்லை. ஆனால் சோனியா, ராகுல், பிரியங்கா சென்னைக்கு வரும்போது மட்டும் அவர்கள் முன்பு ஆஜராகி கட்சிக்கு மிகக் கடுமையாக உழைப்பது போல நடிக்கின்றனர்.

அரசு பதவி அதிகாரத்தை பயன்படுத்தி சம்பாதிக்கவும் செய்கின்றனர். ஆனால், கட்சிக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்வதில்லை. அதே நேரம் எந்த பதவியும், அதிகாரமும் இல்லாதவர்கள், கடன் வாங்கி தங்கள் சொந்த பணத்தை கட்சிக்கு செலவு செய்கின்றனர். எனவே கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களை அடையாளம்
கண்டு தேர்தலில், ‘சீட்’ கொடுக்க வேண்டும். வாரிசுகளுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது. திமுக கூட்டணியில் இம்முறை, 15 தொகுதிகளை கேட்டு வாங்க வேண்டும். எந்த பதவியும் வகிக்காத மாவட்ட தலைவர்களுக்கு, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவேண்டும்”என்று ஆவேசமாக முழங்கினர்.

இது திமுக அனுதாபிகளாகவே மாறிப் போய்விட்டதாக பொது வெளியில் பேசப்படும் காங்கிரஸ் தலைவர்களான ப. சிதம்பரம், ஈ வி கே எஸ் இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், கே வி தங்கபாலு, திருநாவுக்கரசர் ஆகியோரை கே எஸ் அழகிரியின் ஆதரவு மாவட்ட மாவட்டத் தலைவர்கள் மறைமுகமாக போட்டு தாக்கியிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவும் முடிகிறது.

ஏனென்றால் அதே நாளில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஈ வி கே எஸ் இளங்கோவன் எம்எல்ஏ கூறும்போது தமிழக காங்கிரஸ் குறித்து மனம் நொந்து போய் சில கருத்துக்களையும் தெரிவித்தார். அது கே எஸ் அழகிரிக்கும், அவருடைய ஆதரவு மாவட்ட தலைவர்களுக்கும் தக்க பதிலடி கொடுப்பது போலவும் அமைந்திருந்தது.

“காவிரி நீர் பிரச்சினையைப் பொறுத்தவரை எப்படி நமக்கு வயிற்றுப் பிரச்சினையாக உள்ளதோ, அதேபோல் கர்நாடகாவுக்கும் உள்ளது. எனவே, இப்பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ளவேண்டும். ஆணையத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் ரவி தன் விருப்பம் போல், ஏதேதோ செய்கிறார். கடந்த
4 நாட்களில் அவரிடம் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன.

தமிழக காங்கிரசில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. கட்சியைப் பொறுத்தவரை ஒரு கூட்டம் நடக்கிறது என்றால், மூத்த தலைவர், முன்னாள் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். ஆனால், தற்போதைய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார். அதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. சத்தியமூர்த்தி பவனில் இப்படி ஒரு கூட்டம் நடப்பதையே ஊடகங்களின் வாயிலாகத்தான் நானே தெரிந்து கொண்டேன். என்னை முன்னாள் தலைவர், மூத்த தலைவர் என்று முன்பு அழைத்து வந்த நிலையில், தற்போது முடிந்துபோன தலைவர் என்று அழைக்கிறார்கள்.

செய்யாறு சிப்காட் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டது விவசாயிகள்தானா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. அங்கு, சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி செய்தவர்கள் மீது தான் குண்டர் தடுப்பு காவல் சட்டம் போடப்பட்டுள்ளது. அதில் சில விவசாயிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தகவல் தெரிந்ததும், முதலமைச்சர் ஸ்டாலின் அவற்றை நீக்கியுள்ளார். ஐந்து மாநில தேர்தலில், பஞ்ச பாண்டவர்கள் போல் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார்.

ஈ வி கே எஸ் இளங்கோவன், இப்படி கூறுவதால் அவரைப் போன்றவர்கள் கட்சியில் வளர்ந்து கொண்டிருக்கும் அடுத்த தலைமுறை தலைவர்களை ஓரம் கட்டுகிறார்கள், அவர்கள் முன்னேறுவதற்கு முட்டுக்கட்டையும் போடுகிறார்கள் என்று அழகிரியின் ஆதரவாளர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று நம்பவும் தோன்றுகிறது.

ஏனென்றால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ வி கே எஸ் இளங்கோவனை அறிவிப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின்தான் பின்னணியில் இருந்தார் என்பது வெளிப்படையாகவே தெரிந்த ஒன்று.

அதேபோல தமிழக சட்டப்பேரவையில் அதிமுக,பாஜக, பாமக தலைவர்களும், எம்எல்ஏக்களும் திமுக அரசை நோக்கி ஏதாவது கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பினால் அதற்கு அமைச்சர்களை முந்திக்கொண்டு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைதான் முதல் ஆளாக பதில் சொல்கிறார்.

கூட்டணி கட்சியில் இருந்தாலும் கூட நான் திமுகவின் விசுவாசி போலத்தான் செயல்படுகிறேன், அதனால் என்னை தனியாக கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என்ற எண்ணத்தில் இப்படி முந்திரிக்கொட்டை போல் செயல்படுகிறாரோ என்ற சந்தேகமும் இதனால் எழுகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸோ இந்தியாவின் விடிவெள்ளி திமுக தலைவர் ஸ்டாலின்தான் என்கிறார்.
கே எஸ் அழகிரியோ 2021 சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீட்டின்போது திமுகவிடம் நாங்கள் 42 தொகுதிகள் கேட்டோம், பின்பு 32 தொகுதிகளுக்கு இறங்கியும் வந்தோம். ஆனால் கடைசியில் தந்தது என்னவோ 25 இடங்கள்தான். அதையும் கொடுப்பதற்கு கூட அறிவாலயத்தில் திமுக தலைவர்கள் என்னை கண்ணீர் விட்டு அழும்படி செய்து விட்டனர், என்று புலம்பியவர்.

ஆனால், அதன் பிறகு திமுக அரசை எந்த கட்சிகள் விமர்சித்தாலும் திமுக தலைவர்களை விட உடனுக்கு உடன் அதற்கு கண்டனம் தெரிவிப்பது கேஎஸ் அழகிரியாகத்தான் இருக்கிறார்.

“தமிழக காங்கிரஸின் நிலைமை இப்படி இருக்கும்போது திமுக 7 தொகுதிகள் கொடுத்தாலே அது மிகப்பெரிய விஷயமாக இருக்கும்” என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

“இதற்கு முக்கிய காரணம் ஒருவேளை இண்டியா கூட்டணி 2024 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி விட்டால் அந்த அமைச்சரவையில் அதிகாரமிக்க பதவிகளை பெறுவதற்கு திமுக கண்டிப்பாக முயற்சிக்கும். குறிப்பாக துணை பிரதமர், உள்துறை, நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அமைச்சர் பதவிகளை
திமுக தலைமை பெறுவதில் தீவிரம் காட்டும்.

ஆனால் தமிழகத்தில் காங்கிரசுக்கு மட்டும் 15 தொகுதிகளை ஒதுக்கினால் கூட்டணி கட்சிகளுக்கு 10 இடங்கள் வரை திமுக பங்கிட்டு கொடுக்க வேண்டி இருக்கும். அப்படியென்றால் எஞ்சிய 14 தொகுதிகளில்தான் திமுக போட்டியிடக் கூடிய சூழ்நிலை ஏற்படும். இத்தகைய நெருக்கடியை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எந்தவொரு கட்சியும் ஏற்றுக்கொள்ளாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதனால் காங்கிரசுக்கு அதிகபட்சமாக ஏழு தொகுதிகளை அறிவாலயம் ஒதுக்குவதற்குத்தான் வாய்ப்பு உள்ளது.

ஈ வி கே எஸ் இளங்கோவனை பொறுத்தவரை திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சிப்காட் அமைப்பதற்காக விவசாய நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டது விவசாயிகள்தானா என்ற சந்தேகம் வருகிறது. அங்கு, சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்தவர்கள் மீதுதான் குண்டர் தடுப்பு காவல் சட்டம் போடப்பட்டு உள்ளது என்று கூறி இருக்கிறார்.

இதில் குண்டர் சட்டத்தில் கைதான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் என்பவரை தவிர மற்ற ஆறு பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டமும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.

இதில் வேடிக்கையானதொரு விஷயம் என்னவென்றால் முந்தைய அதிமுக அரசின் போது 2018 ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை- சேலம் எட்டு வழி சாலை திட்டத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று போராடிய நூற்றுக்கணக்கான விவசாயிகளில் அருளும் ஒருவர்.

2021 தமிழக தேர்தலுக்கு முன்பு இதற்காக விவசாயிகளுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஸ்டாலினும் கலந்து கொண்டு பேசியிருக்கிறார், என்கிறார்கள். அந்த விழா மேடையில், இன்று செய்யாறு சிப்காட்டில் விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என போராட்டத்தை தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவசாயி அருளும் பச்சை துண்டு அணிந்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளில் ஒருவராக முன் வரிசையில் உட்கார்ந்தும் இருக்கிறார்.

இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அன்று அந்த மேடையில் இருந்த விவசாயி அருளின் பெயரை குறிப்பிட்டு பாராட்டுவது போன்ற ஒரு நிமிட வீடியோ காட்சி ‘அன்று சமூக போராளியாக இருந்தவர் இன்று எப்படி சமூக விரோதியாக மாறினார்?’ என்ற கேள்வியுடன் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த வீடியோ விவகாரம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், பொதுப் பணித்துறை அமைச்சர் எ வ வேலுவுக்கும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான
ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கும் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்” என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, தமிழகத்தில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது நாடாளுமன்றத் தேர்தலுக்கான மனு தாக்கல் தொடங்கும் வரை சஸ்பென்ஸ் ஆகத்தான் இருக்கும்!

  • Serial Actor Who Got Divorce from his wife விவாகரத்து கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்!
  • Views: - 371

    0

    0