உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி.. தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 November 2023, 2:10 pm

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி.. தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார் : கேரளாவில் உயிர் பிரிந்தது!!

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா ராவுத்தர் குடும்பத்தில் 1927-ம் ஆண்டு அன்னவீட்டில் மீரா சாகிப்- கதீஜா பீவி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர் பாத்திமா பீவி. சட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர். நாட்டின் உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமைக்குரியவர்.

1989-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் முதலாவது பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் பணி புரிந்தார். 1997-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தமிழ்நாடு ஆளுநராகப் பணியாற்றினார்.

தமிழ்நாடு முதல்வராக இருந்த கருணாநிதியின் வேண்டுகோளின்படி பாத்திமா பீவி, தமிழ்நாட்டு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இறுதியில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் துறையை உருவாக்க எதிர்ப்பு தெரிவித்தார் பாத்திமா பீவி. அதேபோல மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் சாலிஹூ நியமனத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தார் ஆளுநராக இருந்த பாத்திமா பீவி.

பின்னர் 2001- தேர்தலில் எம்.எல்.ஏ.வாக இல்லாத நிலையில் ஜெயலலிதாவுக்கு முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைத்தது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கினார் பாத்திமா பீவி.

2001 ஜூன் 30ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான நள்ளிரவு கைது நடவடிக்கையின் போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார் ஆளுநர் பதவியில் இருந்த பாத்திமா பீவி. மத்திய அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறன், டிஆர் பாலு அப்போது கைது செய்யப்பட்டது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.

மொத்தத்தில் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமாக அறியப்பட்டார். இந்த சம்பவங்களால் மத்திய அரசால் ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் பாத்திமா பீவி.

ஆளுநர் தமது கடமையில் இருந்து தவறியதாக அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் பாத்திமா பீவி. அவருக்கு பின்னர் தற்காலிக ஆளுநராக ஆந்திரா ஆளுநர் ரங்கராஜன் நியமிக்கப்பட்டார்.

பின்னர் கேரளா சென்றார் பாத்திமா பீவி. அண்மையில் வயது முதுமை காரணமாக உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டு கொல்லம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி 96 வயதில் காலமானார் பாத்திமா பீவி.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 380

    0

    0