வேங்கை வயல் விவகாரத்தில் மழுப்பும் விசிக…! திமுகவுடன் கூட்டணியை முறிக்க பயமா…?

Author: Babu Lakshmanan
27 November 2023, 9:08 pm

கடந்த இரண்டு ஆண்டுகளாக தென் மாநிலங்களில் வாழும் பட்டியல் இன மக்களின் ஒரே தலைவர் என்பது போல் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதற்காக அவ்வப்போது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணமும் மேற்கொள்வதையும் பார்க்க முடிகிறது.

அதேநேரம் தமிழகத்தில் மட்டும் இந்த ஒரு விஷயத்தில் அவர் மிகுந்த சுணக்கம் காட்டுவது வெளிப்படையாகவே தெரிகிறது.

குறிப்பாக திமுக ஆட்சி அமைந்த பிறகு பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அவர் கண்டு கொள்வதே இல்லை. அதற்கான போராட்டங்களை முன்புபோல் தீவிரமாக முன்னெடுப்பதும் இல்லை என்ற குற்றச்சாட்டு பல்வேறு தரப்பினராலும் வைக்கப்படுகிறது.

இது அவருடைய கட்சியின் வளர்ச்சியை தமிழகத்தில் பெரிதும் பாதிக்கும் என்பதையும் அவருக்கு நெருக்கமானவர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் அதை அவர் அவ்வளவாக கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை.

என்றபோதிலும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்பிரச்சனை அவருக்கு பெரும் தலைவலியை கொடுக்கலாம் என்று யாரும் சொன்னார்களோ, என்னவோ தெரியவில்லை. திடீரென்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாக திருமாவளவன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

“வேங்கைவயல் பிரச்சினையில் 5 ஆயிரம் பேரை திரட்டி போராட்டம் நடத்தினோம். பட்டியலின மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. சமீபத்தில் ஓசூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

ஆளும் திமுக அரசுக்கு எதிராக தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்து மதுரை, திருநெல்வேலியில் போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். திமுகவுக்கு எதிராக விடுதலை சிறுத்தை போராட்டம் நடத்தவில்லை என்று கூறுவது எங்கள் மீதான அரசியல் வெறுப்பை காட்டுகிறது.

திமுக, அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கின்றபோது பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கின்றன. அவர்கள் மீதான தாக்குதலுக்கு ஆளுங்கட்சி மட்டுமே பொறுப்பேற்க முடியாது. சமீபத்தில் சென்னையில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் திமுக அரசை விமர்சிக்கும் வகையில் இரண்டு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

மாநிலம் முழுவதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் சனாதன சக்திகளால் ஆதி திராவிடர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சாதியக் கொடுமைகளை கண்டிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

பஞ்சமி நிலங்களை பட்டியலின மக்களுக்கு வழங்கவும் எஸ்.சி.-எஸ்.டி. துணை திட்ட சட்டங்களை சட்டப் பேரவையில் நிறைவேற்றவும் சமூக, பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

நகர்புறங்களில் மட்டுமின்றி கிராமப் பகுதியிலும் போதைப் பொருள் பெருக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம்.

வேங்கை வயல் விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க விரும்புகிறார். டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்வோம் என்றும் போலீசார் கூறுவதால்தான் தாமதம் ஏற்படுகிறது” என்று குறைபட்டுக் கொண்டார்.

பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடரும் பட்சத்தில், திராவிட மாடல், சமூக நீதி என்று பேசும் திமுகவுடன் கூட்டணி வலுவிழந்து விடுமா? என்ற இன்னொரு கேள்விக்கு, பதில் அளித்த திருமாவளவன் “பட்டியலின மக்களுக்கான நீதி விஷயத்தில் திமுகவும், விடுதலை சிறுத்தைகளும் ஒரே பக்கம் தான். ஆனால் ‘சிஸ்டம்’ அதை அனுமதிக்கவில்லை. நாங்கள் அதை நியாயப்படுத்தவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ இல்லை. பாஜகவுக்கு எதிராக திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். ஒரு பிரச்சினைக்கு அப்பால் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படவேண்டும். அதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது நிலைப்பாட்டை நீர்த்து போகச் செய்து விட்டது என்றோ, பட்டியலின மக்களுக்காக போராடும் தன்மையை இழந்து விட்டோமோ என்று அர்த்தமில்லை” எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

திருமாவளவனின் பேட்டியில் இருந்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் நம்பிக்கையை தான் இழந்து விட்டதை ஏறக்குறைய அவரே ஒப்புக் கொண்டிருப்பது போல இந்த கருத்து அமைந்து இருக்கிறது என்றே சொல்லவேண்டும். அது மட்டுமின்றி அவர் திமுக அரசு மீது மிகுந்த அதிருப்திடனும், மனக்கசப்புடனும்தான் இருக்கிறார் என்பதையும் இந்த நிலையில்தான் திமுகவுடன் விசிகவின் கூட்டணி தொடர்கிறது என்பதையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

அவருடைய இக் கருத்து அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

“தமிழக காவல்துறையை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதற்காக திருமாவளவன் இவ்வளவு முட்டுக் கொடுக்கவேண்டும் என்ற கேள்விதான் முதலில் எழுகிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“திமுக, அதிமுக ஆட்சி இரண்டிலும் பட்டியலின மக்களுக்கு எதிராக அநீதி நடக்கிறது என்று திருமாவளவன் சொல்கிறார். ஏன் நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே கூட இப்படி அநீதிகள் நடக்கிறது என்று கூட அவர் சொல்லவும் முடியும். ஏனென்றால் இன்று இருப்பது போல் முன்பு சமூக ஊடகங்கள் இல்லை என்பதால் அப்போது பட்டியல் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் வெளிவராமல் போய்விட்டது என்று அவர் வாதிடுவதிலும் நியாயம் இருக்கிறது.

ஆனால் நாடு சுதந்திரம் அடைந்த பின்பு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது போன்ற கொடூர நிகழ்வு எந்தவொரு இந்திய மாநிலத்திலும் இதுவரை நடக்காத ஒன்று. கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி வேங்கை வயல் விவகாரம் வெளியுலகத்திற்கு தெரிய வந்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த வேதனை நிகழ்வு நடந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையிலும் கூட இதுவரை குற்றவாளிகள் யாரையும் திமுக அரசு கைது செய்யவில்லை. ஆனால் அதற்கு திருமாவளவன் கூறும் காரணம்தான் வேடிக்கையாக உள்ளது.

வேங்கை வயல் விவகாரத்தை பொறுத்தவரை, முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார். ஆனால் டிஎன்ஏ பரிசோதனையை முடித்தபிறகே உண்மையான குற்றவாளிகளை கைது செய்வோம் என்று சிபிசிஐடி போலீசார் கூறுவதால் இதுவரை யாரையும் கைது செய்ய முடியவில்லை என்கிறார்.

காவல்துறையின் முழு கட்டுப்பாடும் ஸ்டாலின் வசம்தான் உள்ளது. ஆரம்பத்திலேயே முதலமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய
காவல்துறைக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து இருந்தால் இந்த விவகாரம் இப்படி வருட கணக்கில் நீடித்துக் கொண்டே போய் இருக்காது.

அதேநேரம் வேங்கை வயல் விவகாரத்திற்காக விசிக எடுத்த போராட்டங்கள் அவ்வளவு வலுவானதாகவும் இல்லை. ஏனென்றால் அவை புதுக்கோட்டை மாவட்ட அளவிலும் தமிழகத்தின் மற்ற சிறு சிறு நகரங்களிலும்தான் நடந்தன. தமிழகத்தின் தலைநகர் சென்னை குலுங்கும் அளவிற்கு திருமாவளவன் எந்த ஒரு போராட்டத்தையும் இந்த விஷயத்தில் எடுக்கவில்லை என்பது வெளிப்படையான உண்மை.

அப்படி அவர் செய்திருந்தால் உண்மையிலேயே பட்டியல் இன மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தீவிரமாகப் போராடுகிறார் என்பது தமிழகம் முழுவதும் இந்நேரம் பரவி இருக்கும். அது அவர் கொண்ட கொள்கையில் மிக உறுதியாக உள்ளார் என்பதையும் வெளிப்படுத்தி இருக்கும். ஆனால் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவின் ஆட்சி மாநிலத்தில் நடப்பதால் இதை அவரால் மெல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை.

அதேபோல சேலம் மாவட்டம் திருமலைகிரி கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி இன்னொரு மிகப்பெரிய கொடுமை அரங்கேறியது. அங்கு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பட்டியல் இன இளைஞர் ஒருவரை சமூக நீதி பேசும் திமுக ஒன்றிய செயலாளர் ஒருவரே மிகவும் ஆபாசமாக பேசியதுடன் அந்த இளைஞரின் பெற்றோர் முன்னிலையிலேயே அவமானப்படுத்தி அவரை விரட்டி அடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கியது. ஆனால் அதற்காக எந்தவொரு போராட்டத்தையும் திமுக அரசுக்கு எதிராக இதுவரை விசிக எடுத்ததாக தெரியவில்லை.

ஆனால் அதுபற்றி யாரும் கேள்வி எழுப்பி விடக்கூடாது என்பதற்காக திமுக, அதிமுக ஆட்சி இரண்டிலுமே பட்டியலின மக்களுக்கு எதிராக அநீதிகள் நடக்கிறது என்று திருமாவளவன் கூறுகிறார்.

அதிமுக ஆட்சியில் சாதிய ரீதியான இதுபோன்ற பிரச்சனைகள் ஒரு சில நடந்து இருக்கலாம். ஆனால் அவை வேங்கை வயல், திருமலைகிரி ஆகிய இடங்களில் நடந்த கொடுமைகளை விட மிகப் பெரியவை அல்ல. தவிர முந்தைய அதிமுக ஆட்சியில் சிறு துரும்பு கிடைத்தாலும் அதை பூதாகரமாக்கி திமுகவுடனும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகியவற்றுடனும் இணைந்தோ அல்லது தனித்தோ மிகப்பெரிய போராட்டமாக முன்னெடுத்த திருமாவளவன் தற்போது அமைதி காப்பதால்தான் உண்மையிலேயே பட்டியல் இன மக்களுக்காக அவர் பாடுபடுகிறாரா? போராடுகிறாரா? என்ற சந்தேகமே எழுகிறது.

அதேபோல சமீபகாலமாக இரண்டு கட்சிகளை கோர்த்து விட்டு மறைமுகமாகவும், கிண்டலாகவும் திருமாவளவன் பேசுவதை பார்க்க முடிகிறது. பாஜக மாநில தலைவர்
அண்ணாமலையின் கூட்டத்திற்கு அதிக அளவில் பாமக, அதிமுக இளைஞர்கள்தான் போகிறார்கள். அதனால்தான் அவருக்கு நிறைய கூட்டம் சேர்கிறது என்று ஒரு கதையை சொன்னார். இதை யாருமே நம்ப மாட்டார்கள்.

அதேநேரம் பட்டியல் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் தமிழகத்தில் பாஜகவுக்கு வரவேற்பு கிடைப்பதை பொறுக்க முடியாமல்தான், தனக்கு ஆதரவான இளைஞர்கள் பாஜக பக்கம் திரும்புகிறார்களே என்ற கோபத்தில் அவர் இப்படி பேசுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

பட்டியலின மக்களுக்கு எதிரான அநீதிகள், வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள் எந்த ஆட்சியில் நடந்தாலும் அதை துணிச்சலுடன் தட்டிக் கேட்பதுதான் திருமாவளவன் போன்ற தலைவர்களுக்கு அழகு. இல்லையென்றால் அவர்கள் மீதான நம்பகத்தன்மை அந்த சமுதாய மக்களிடமே அடியோடு தேய்ந்து போய்விடும் என்பதே எதார்த்தமான உண்மை” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரிதான்!

  • Nayanthara and Vignesh Shivan's love story நயன்தாரா வீடியோ லீக்…படையெடுக்கும் ரசிகர்கள் ..!
  • Views: - 340

    0

    0