நீதிபதிகள் கேட்ட ஒத்த கேள்வி…? சட்டென ஜாமீன் மனுவை திரும்ப பெற்ற செந்தில் பாலாஜி ; உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
28 November 2023, 12:12 pm

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையின் போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பிறகு, அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கு சிறை மருத்துவர்களின் கண்காணிப்பிலிருந்து வந்தார். இதனிடையே, அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருவதால், சிகிச்சை அளிக்க ஏதுவாக நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

கடந்த நவம்பர் 15ம் தேதி அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, காலில் உள்ள நரம்பை எடுத்து அறுவை சிகிச்சை செய்ததால் அடிக்கடி கால் மரத்து போவதாக செந்தில் பாலாஜி கூறினார். இதையடுத்து, மீண்டும் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 11வது முறையாக அவருடைய நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு, வரும் டிச 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, இரு முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், மருத்துவக் காரணங்களை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, மருத்துவ அறிக்கை தொடர்பாக விளக்கினார். விளக்கங்களை கேட்ட நீதிபதிகள், இதில் இருக்கும் பிரச்சனைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாமே என கேள்வி எழுப்பினர்.

அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில், ”இதயம் மற்றும் மூளை நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருத்துவமனையில் வைத்து உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும், ஏனெனில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பாதிப்புகளால் அவருக்கு பக்கவாதம் வரும் வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், தேவையான பரிசோதனைகள் செய்தாகிவிட்டது. நீங்கள் முன் வைப்பது போல எதுவும் அபாயகரமாக இல்லை. Chronic பிரச்சனைகள் மருந்துகளால் தீர்க்க முடியும் என இணையத்தில் படித்தேன் என கூறினர். பின்னர் செந்தில் பாலாஜி தரப்பில், “இந்த மனுவை திரும்பப் பெற நாங்கள் தயாராக உள்ளோம்” என தெரிவித்தனர்.

அதற்கு நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் பெற மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்தும், மெரிட் அடிப்படையில் மட்டுமே செந்தில் பாலாஜியும் ஜாமீன் மனுவை பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 315

    0

    0