திமுக பெண் எம்பியால் வெடித்த ராஜீவ் சர்ச்சை! பரிதவிக்கும் இண்டியா கூட்டணி?…

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2023, 9:25 pm

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மத்திய பாஜக அரசை அகற்றவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் இணைந்திருக்கிறோம் என்று கூறிக் கொண்டாலும் கூட அந்தக் கட்சிகளுக்கு இடையே பல்வேறு முரண்பட்ட கருத்துகள் இருப்பது தெரிந்த விஷயம். ஆனால் அது சில நேரங்களில் பொதுவெளியில் அம்பலத்திற்கு வந்து மோதல் போக்கையும் அரசியலில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தி விடுவதும் உண்டு.

அத்தகையதொரு முக்கோண இடியாப்ப சிக்கலில்தான் திமுக, காங்கிரஸ், விசிக கட்சிகள் தற்போது சிக்கிக் கொண்டிருக்கின்றன. இதற்கு விதை போட்டவர் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் என்று சொல்லலாம்.

61 வயது தமிழச்சி தங்கபாண்டியன் பொதுவாக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக கருத்து எதையும் தெரிவிப்பதில்லை. சில நேரங்களில் அதிமுக, பாஜக கட்சி தலைவர்கள் அல்லது அக் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பாக காட்டமாக கருத்து தெரிவிப்பது உண்டு. மற்றபடி திமுகவின் கூட்டணிக் கட்சிகளை அவர் சீண்டுவதே இல்லை.

இந்த நிலையில்தான் இலங்கையில் தமிழ் ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26 ம் தேதியை யொட்டி தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு யூடியூப் செய்தி சேனலுக்கு ஆங்கிலத்தில் பேட்டி அளித்தார்.

அதில் தனக்கு பிடித்த பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் பதில் கூறியிருந்தாலும் கூட இரண்டு கேள்விகளுக்கு மட்டும்
சொன்ன பதில் மிகவும் வித்தியாசமானது. “சரித்திர புகழ் வாய்ந்த தலைவர் ஒருவருடன் உணவருந்தவேண்டும் என்றால், விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுடன் உணவு அருந்த விரும்புகிறேன். அப்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக அவரிடம் மன்னிப்பும் கேட்பேன்” என்று கருத்து தெரிவித்தார்.

அவர் இப்படி கூறியது கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது. முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி கட்டப் போரின்போது உங்கள் தலைவர் கருணாநிதி 2009 ஏப்ரல் மாதம் 27ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்த நிலையில் 6 மணி நேரத்தில் வெற்றி வெற்றி!… இலங்கையில் போர் நமது தீவிர முயற்சியால் தடுத்து
நிறுத்தப்பட்டுவிட்டது என்று பொய்யான ஒன்றைக் கூறி உலகத் தமிழர்களை ஏமாற்றினாரே அதற்காக மன்னிப்பு கேட்க போகிறீர்களா?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பி வலைத்தளவாசிகள் தமிழச்சி தங்கபாண்டியனை வறுத்து எடுத்து விட்டனர்.

இது கூட பரவாயில்லை. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் எம்பி ரொம்பவே கடுப்பாகி போனார். ஏனென்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண் மனித வெடி குண்டால் அவருடைய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் 1991ம் ஆண்டு
மே மாதம் 21ம் தேதி இரவு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட துயர நிகழ்வு அவருடைய நினைவுக்கு வந்துவிட்டது.

உடனே தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைத் தள கணக்கில் கோபத்தை கொட்டினார். “பிரபாகரனை பாராட்டி பேசுவது இந்திய காங்கிரஸ் கட்சியினருக்கு இசைவான கருத்து அல்ல. ராஜீவ் காந்தியும், அவருடன் 17 பேரும் விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட படுகொலை சம்பவத்தை மூடி மறைத்து பிரபாகரனின் புகழ் பாட நினைப்பது தவறு. இந்துத்துவா தேசியவாதம் போல்தான் பிரபாகரனின் தமிழ் தேசிய சித்தாந்தங்களும் மிக சிறுமையானது” என்று அவர் பதிவிட்டார்.

இதற்கு தமிழச்சி தங்கபாண்டியன் இதுவரை எந்த பதிலும் கூறாத நிலையில் விசிகவின் துணைப் பொதுச் செயலாளரான வன்னி அரசு கொதித்துப் போய் உடனடியாக கார்த்தி சிதம்பரம் எம்பிக்கு தனது அதிகாரப் பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் எதிர்ப்பை பதிவு செய்தார்.

அதில், “எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் புத்த, சிங்கள ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகவும் போராடிய பெரும் தலைவர், மேதகு பிரபாகரன். சனாதன இந்துத்துவம் ஆதிக்க மனப்பான்மையை வலியுறுத்துகிறது. மேதகு பிரபாகரனின் அரசியல், இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எப்போதுமே ஆதரவு அளித்ததில்லை.

திரு. ராஜீவ் காந்தியின் படுகொலையை காரணம் காட்டி எத்தனை நாட்கள் தமிழ் மக்களை நீங்கள் இழிவு படுத்துவீர்கள்? தமிழ் ஈழத்தில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தங்கள் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை காங்கிரஸ் கொண்டு வர வேண்டிய தருணம் இது என்பதை உணருங்கள்.

சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதால் மேதகு பிரபாகரனுக்கும் விடுதலை புலிகளுக்கும் திருமதி இந்திரா காந்தி ஆதரவு அளித்தார்.

ராஜீவ் காந்தியின் படுகொலையை யாரும் கொண்டாடவில்லை. அவரது முடிவு அவரே தேடிக் கொண்ட ஒன்றாகும். மேதகு பிரபாகரனுக்கு ஆதரவு அளிப்பதுதான் இந்துத்துவாவை எதிர்ப்பதற்கு ஒப்பாகும்” என்று கொந்தளித்து இருந்தார்.

திமுகவுடன் தமிழகத்தில் ஒரே கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் இந்த சித்தாந்த கருத்து மோதல் தேசிய அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து டெல்லியில் மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுவது இதுதான். “முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடக்கம் முதலே
நான் ஒரே உறுதியான நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன் என்பதை கார்த்தி சிதம்பரம்
பதிவிட்ட கருத்து மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

ஏனென்றால் ராஜீவ் கொலைக் கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் முதலில் விடுதலை செய்யப்பட்டபோது, அவரை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் அழைத்துப் பேசி “விடுதலை காற்றை முழுமையாக சுவாசியுங்கள்”என்று வாழ்த்து தெரிவித்தவுடன் அவருக்கு தேநீர் விருந்து அளித்து உபசரிக்கவும் செய்தார்.

கூட்டணி கட்சியான திமுகவின் இந்த நடவடிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பட்டும், படாமலும்தான் அதிருப்தி தெரிவித்தார். அதேநேரம் ஈ வி கே எஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், கே வி தங்கபாலு போன்ற மூத்த தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்காமல் அமைதியே காத்தனர். டெல்லியிலும் காங்கிரஸ் தலைவர்களிடையே கூட முதலில் லேசான முணுமுணுப்பு சத்தம்தான் கேட்டது. பின்பு அது பற்றிய பேச்சு எழவே இல்லை.

அதன்பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியபோது “சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்தச் சனாதனம். இதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரியமாகும்” என்று ஆவேசமாக குறிப்பிட்டது காங்கிரஸுக்கு பெரிய தலைவலியாக அமைந்தது.

ஏனென்றால் வட மாநிலங்களில் இந்துக்களில் பெரும்பான்மையானோர் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள். அவர்களிடம் இண்டியா கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் இளம் தலைவரே இப்படி பேசுவது ஓட்டுக்கு வேட்டு வைத்து விடும் என்பதை புரிந்து கொண்டுவேறு வழியின்றி அமைச்சர் உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. அதேநேரம் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை கடும் கண்டனத்தை பதிவு செய்தன.

ஆனால் காலப்போக்கில் இதெல்லாம் கடந்து போகும், மக்களிடம் மறந்து போகும் என்ற நிலைதான் ஏற்பட்டது. அதன் பின்னர் சனாதன ஒழிப்பு விவகாரத்தை காங்கிரஸ் கண்டுகொள்ளவே இல்லை.

இப்போது திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் காங்கிரசை அதிர வைக்கும் அளவிற்கு தெரிவித்த கருத்து தேசிய அரசியலில் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் டெல்லி காங்கிரஸ் மேலிடம் பெரியதொரு விஷயமாக எடுத்துக் கொள்ளாது என்றே தெரிகிறது. ஏனென்றால் இது போன்ற விவாதங்களை முன்னெடுத்தால் இண்டியா கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்பதை காங்கிரஸ் நன்றாகவே உணர்ந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் திமுக ஒதுக்கும் தொகுதிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருப்பதால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்து திமுக பெண் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்த கருத்துகளை காங்கிரஸ் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி கொள்ளவே செய்யும். தவிர திமுக கூட்டணியில் விசிக இருந்தால்தான் காங்கிரஸுக்கு வெற்றி கிடைக்கும்
என்பதுதான் எதார்த்த நிலை” என்று டெல்லியில் அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதுவும் ஏற்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது!

  • Tamannaah marriage rumors கல்யாணத்தை குறிவைக்கும் தமன்னா.. 35 வயதில் எடுத்த திடீர் முடிவு..!
  • Views: - 473

    0

    0