ஏழை மக்களுக்கான அம்மா உணவகம் நடத்த நிதி இல்லை… கார் பந்தயம் நடத்த ரூ.42 கோடியில் சாலையா..? திமுக அரசு மீது இபிஎஸ் பாய்ச்சல்..!!
Author: Babu Lakshmanan2 December 2023, 4:39 pm
அண்ணாமலையிடம் மெச்சூரிட்டி என்றால் என்னவென்று கேட்கவேண்டும் என்றும், அவரை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் சேலத்தில் எதிர்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களான பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :- சென்னையில் மிக கனமழை பொழிந்து உள்ளது. மழையின் காரணமாக சென்னை மாநகரமே தண்ணீரில் மிதந்துகொண்டு உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து நான்காயிரம் கோடிக்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தண்ணீர் எங்கும் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்கள்.
ஆனால் ஒரு நாள் மழைக்கு சென்னை மாநகரம் தண்ணீரில் தத்தளிக்கும் காட்சியை பார்க்க முடிகிறது.திமுக அரசு முழுமையாக வடிகால் வசதிகளை ஏற்படுத்தி இருந்தால் தண்ணீர் தேங்காமல் இருந்திருக்கும். இதற்கு நிர்வாகத் திறமை இல்லாத அரசாக திமுக அரசு இருப்பது என்பதுதான் பார்க்க முடியும். ஊழல் செய்வதை மட்டுமே இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் செய்து வருகிறது. அதை மட்டுமே சாதனையாக பார்க்க முடிகிறது.
மேலும், சென்னை நகரின் மையப்பகுதியான தீவுத்திடலை சுற்றி கார் பந்தயம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேடிக்கையாக உள்ளது. இதற்காக 242 கோடி செலவு செய்வதாக செய்தி வாயிலாக பார்த்தேன். இதற்கு 42 கோடி அரசு சார்பில் சாலையை சரிசெய்வதற்காக அரசு செலவு செய்வது கண்டிக்கத்தக்கது.
வேலையில்லாமல் சென்னை மாநகரப் பகுதியில் சுமார் 42 கோடி மதிப்பீட்டில் சாலைகள் விரிவுபடுத்தப்படும் வசதிகள் செய்து தரப்படும் என்று கூறி கூறியுள்ளனர். தமிழகஅரசு நிதியில்லாமல் தள்ளாடி வருவதாக கூறிவரும் நிலையில், கார் பந்தயத்திற்கு சாலை அமைப்பதற்கு 42 கோடி ரூபாய் செலவு செய்வது எந்த விதத்தில் நியாயம்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. கார் பந்தயத்திற்கு செலவு செய்கின்றனர். ஏழை, எளிய மக்கள் உணவு உண்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது. ஏழைகளுக்காக நிதி ஒதுக்காமல் கார் பந்தயத்திற்கு நிதி ஒதுக்குவது சரியானதா..?
பல்வேறு இடங்களில் வடிகால் வசதி இல்லாமல் மழைநீர் தேங்கி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்தப் பகுதிகளில் இந்த தொகையை செலவு செய்திருந்தால், நல்ல அரசாக மக்கள் பாராட்டுவார்கள். இந்த அரசு விளம்பர அரசாக பார்க்கப்படுகிறது. வரிப்பணம் வீணாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. ஒரு முக்கியமான பகுதியில் கால்பந்தயம் நடத்துவது அவசியமா? இதற்காக கார் பந்தயம் நடத்துவதற்கு ஏற்கனவே மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நடத்தலாம், வீண் செலவு செய்து மக்களுக்கு இடையூறாக இது அமையும், எனக் கூறினார்.
அமலாக்கத்துறை சார்ந்த ஒருவர் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற கேள்விக்கு,
எங்கு தவறு நடந்தாலும் தவறு தவறுதான்,யார் குற்றம் புரிந்தாலும், குற்றம் குற்றம் தான்; அதில் சட்டம் கடமை செய்வதில் எந்த தவறும் இல்லை, என்றார்.
இதைதொடர்ந்து பேசிய அவர், அதிமுக நிர்வாகிகள் ஏற்கனவே நான் கொடுத்த ஆலோசனையின்படி சென்னை மாநகரப் பகுதி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் சிரமப்படுகிறார்களோ? அங்கெல்லாம் மக்களுக்கு தேவையான உதவியை செய்து வருகின்றனர் என்றும் கூறினார்.
சட்டப்பேரவை மசோதாகளை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பியது குறித்த கேள்விக்கு, உச்சநீதிமன்றமே இறுதி தீர்ப்பு கொடுத்துவிட்டது, இதில் யாரும் ஆலோசனைப் கூறமுடியாது. உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைகள் முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும், அதில் மாற்றுக்கருத்து இல்லை என்று தான் நான் நினைக்கிறேன், என்றார்.
மேலும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மெச்சூரிட்டி இல்லை என்று அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு, அண்ணாமலையிடம் மெச்சூரிட்டி என்றால் என்னவென்று கேட்கவேண்டும். அவரை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். அவருக்கு என்ன மெச்சூரிட்டி இருக்கிறது என்று அவர்தான் கேட்கவேண்டும், என்றும் பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரைக்கும் தலைமைக் கழகத்தின் அறிவிப்புபடி அனைத்தும் மாவட்டங்களிலும் பூத்கமிட்டி, மகளிரணி உள்ளிட்டவைகள் அமைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. 95 சதவீத பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் பணிகள் அனைத்தும் முழுமை பெறும். இதைத்தொடர்ந்து, அடுத்த கட்டமாக அதிமுக தலைமை கழகத்தின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கூடி நாடாளுமன்றத் தேர்தலில் என்னென்ன யுக்திகளை கையாளலாம் என்ற முடிவை செய்வோம்; தேர்தல் அறிவித்த பின் கூட்டணி குறித்து நடவடிக்கை முடிவெடுக்கப்படும், என்றும் தெரிவித்தார்.
பின்னர் சட்டப்பேரவை தலைவருக்கு மிரட்டல் வருவதாக கூறியது குறித்த கேள்விக்கு?, சட்டப்பேரவை தலைவர் எவ்வாறு செயல்படுகிறார் என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்; ஜனநாயக முறைப்படி செயல்படுகிறாரா? சட்டப்பேரவை மரபை கடைப்பிடிக்கிறாரா? எதுவுமே கிடையாது. சட்டமன்றத்திலே அவருடைய ஜனநாயகத்தை பார்த்துவிட்டேன்; ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றும் பேசினார். மேலும் சட்டப்பேரவைத் தலைவர் கட்சிக்காரர் போன்று பேசி வருகிறார், பொதுவாக பேச வேண்டும், அவர் பேசுவதில்லை, என்றார்.
சட்டமன்றத்தை நடத்தக்கூடிய அதிகாரத்தை மட்டுமே கொடுத்துள்ளோம். சட்டமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அமைச்சர்கள், முதலமைச்சர் தான் பதில் கொடுக்கவேண்டும்; ஆனால், சட்டப்பேரவை தலைவரே பதில் கொடுத்து விடுகிறார்.
நாங்கள் அந்த இலக்கா அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் என்றால் தான் எதிர்பார்க்கிறோம்; அவரிடம் இருந்து பதில் வந்தால்தான் மக்களிடம் போய் சேரும்; ஆனால் எல்லாம் பிரச்சினையையும் சட்டப்பேரவை தலைவரை எடுத்துக்கொண்டார். சட்டப்பேரவை மரபை கடைப்பிடிக்காத ஒரு தலைவர் தான்,தற்பொழுது உள்ள சட்டப்பேரவை தலைவர் என்றும் விமர்சனம் செய்தார். எனவே சட்டப்பேரவை தலைவர் பேச்சை பொருட்படுத்தும் அவசியமில்லை; நடுநிலையாக இருந்தால் அவரை பற்றி பேசமுடியும் என்றும் கூறினார். ஆனால் அதிமுகவை பொருத்தவரை சட்டப்பேரவை தலைவரை மதிக்கிறது என்றும் பேசினார்.
தமிழகத்தில் எந்தத் துறை அரசு ஊழியர்கள் போராடினாலும் அவர்களுக்கு ஆதரவாக அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் மற்றும் இப்போதைய அமைச்சர்கள் செயல்பட்டார். அப்போது அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார்கள். தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு; தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு, இரட்டை நிலைப்பாடு உள்ள ஒரே கட்சி திமுக தான் என்றும் விமர்சனம் செய்தார்.