உரிமையோடு கேட்கிறேன்… திமுக எம்பி, எம்எல்ஏ, நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட அன்புக் கட்டளை!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2023, 9:47 pm

உரிமையோடு கேட்கிறேன்… திமுக எம்பி, எம்எல்ஏ, நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட அன்புக் கட்டளை!!

தமிழ்நாட்டில் 2 நாட்கள் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, “அடுத்த இரு நாட்களுக்கு மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அவர்களது பகுதியில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும். நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு ட்விட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

அதில், “அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் – மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்துக் கழக நிர்வாகிகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் வேண்டுகோள். இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை /கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் அரசு நிர்வாகம் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அரசு அதிகாரிகளின் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மாண்புமிகு அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகள் தத்தமது பகுதிகளில் இருந்து – மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை செய்திட உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கான உணவு, உடை, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிடும் வகையில் அரசு அதிகாரிகளுக்கும் – ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளையும் செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், “நேற்று (01-12-2023) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (02-12-2023) காலை 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (02-12-2023) காலை 0830 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 440 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 450 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) தெற்கு- தென்கிழக்கே சுமார் 580 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 670 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு – தென்கிழக்கே சுமார் 670 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு ள்ளது.

இது மேலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 03-12-2023 வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கடக்கக்கூடும்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 329

    0

    0