ரூ.4000 கோடி செலவு பண்ணுனதன் பலன் தான் இது… சென்னை வெள்ளபாதிப்பு குறித்து மார்தட்டும் முதலமைச்சர் ஸ்டாலின்

Author: Babu Lakshmanan
5 December 2023, 11:37 am

சென்னையில் வடிகால் வாரியத்திற்கு ரூ.4000 கோடி செலவு செய்ததால் தான் மழை, வெள்ளத்தில் இருந்து மீள முடிந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் குளம்போல காட்சியளிக்கின்றன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொருட்களை இழந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்கும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், புயல், மழை பாதிப்பு குறித்து சென்ட்ரல் அருகே கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பிறகு, சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசினார். பின்னர் மக்களுக்கு உணவு வழங்கினார்.

அதனை தொடர்ந்து, வால்டாக்ஸ் சாலை, சுண்ணாம்பு கொளத்தூர் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களிலும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- முன்பு பெய்த மழையின் அடிப்படையில் பணிகளை திட்டமிட்டோம். வரலாறு காணாத மழை பெய்த போதிலும், பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையில் இயல்பு நிலையை வெகு விரைவில் கொண்டுவரப்படும். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், மழையால் ஏற்பட்ட பாதிப்பின் தாக்கம் குறைந்துள்ளது.

2015-ல் சென்னையில் செயற்கை வெள்ளம் ஏற்பட்டது. தற்போது இயற்கையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 2015 மழையின்போது 119 பேர் பலியான நிலையில், இம்முறை அதிகம் மழை பெய்தும் 7 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். 47 ஆண்டுகளில் இல்லாத அளவாக இம்முறை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 4 ஆயிரம் கோடி ரூபாயை திட்டமிட்டு செலவு செய்ததன் காரணமாகவே தற்போது சென்னை தப்பியுள்ளது.

ரூ.4 ஆயிரம் கோடிக்கு சென்னையில் பணிகள் நடந்ததால் தான் பாதிப்புகள் குறைவாக இருக்கின்றன. மழை நிற்பதற்கு முன்பே வெளி மாவட்ட பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் தொடங்கின.

‘மிக்ஜம்’ புயல் மீட்பு பணிகளுக்காக ரூ.5,000 கோடி நிவாரண நிதி வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளோம், எனக் கூறினார்.

  • good bad ugly movie collected 200 crores in 9 days ஒன்பதே நாள்ல வேற லெவல் கலெக்சன்; AKனா சும்மாவா? குட் பேட் அக்லி கல்லா கட்டிய விவரம்…