ஒரு சொட்டு நீர் தேங்காது-னு சொன்னீங்க… இப்ப என்ன ஆச்சு..? திமுக ஆட்சிக்கு வந்தாலே பிரச்சனை தான் ; செல்லூர் ராஜு விளாசல்!!
Author: Babu Lakshmanan5 December 2023, 2:25 pm
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு மக்களுக்கு பல சோதனைகள் வந்து கொண்டே இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே.நகரில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறுகையில், “ஜெயலலிதா மறைவிற்குப் பின்னே அதிமுக சுக்கு நூறாக உடைந்து விடும் என நினைத்தார்கள். பீனிக்ஸ் பறவையைப் போல அதிமுக வெற்றி நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு மக்களுக்கு பல சோதனைகள் வந்து கொண்டே இருக்கிறது.
கொரோனா, மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் அதிக அளவில் பரவிக் கொண்டே இருக்கிறது. மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சென்னை மக்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். சென்னை மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு வர வேண்டுமென வேண்டிக் கொள்கிறோம். 2015ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது அதிமுக சிறப்பாக செயல்பட்டு மக்களை காத்தது. தற்போதைய சென்னை மழை வெள்ள பாதிப்புகளை திமுக தலைமையிலான அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு மழை நீர் கூட தேங்காது என திமுக அரசு கூறியிருந்தது. மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணம் வழங்க உள்ளோம்.
லண்டனில் உள்ள பென்னிகுயிக் நினைவிடம் மற்றும் சிலையை தமிழக அரசு அறிவித்தது போல பராமரிக்க வேண்டும். பென்னிகுயிக் நினைவிடத்தை பராமரிக்க தமிழக அரசு பணம் ஒதுக்கீடு செய்யவில்லை. பென்னிகுயிக் நினைவிடம் மற்றும் சிலையை பராமரிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினார்,
செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருக்கையில், பின்னால் நின்று கொண்டிருந்த அமமுக கட்சியினர் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் மாறி மாறி கோஷம் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.