கட்டு கட்டாக ரூபாய் நோட்டு… ஆசையை காட்டி ஆசிரியரிடம் ரூ.3.5 லட்சம் மோசடி ; 3 பேர் கைது..!!
Author: Babu Lakshmanan6 December 2023, 12:44 pm
வெள்ளக்கோவில் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆசிரியரிடம் டம்மி நோட்டை கொடுத்து ரூ.3. 5 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 53). இவரது மனைவி பாலமுருகேஸ்வரி (வயது 50 ). இவர்கள் இரண்டு பேரும் அரசு பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்கள். உடல் நலம் பாதிக்கப்பட்ட பாலமுருகேஸ்வரிக்கு மருத்துவ செலவுக்காக 20 லட்சம் தேவைப்பட்டது. இந்த 20 லட்சம் அறக்கட்டளை மூலமா கிடைக்குமா..? என்று பரமசிவம் விசாரித்தார்.
அப்போது நாகப்பட்டினம் பகுதியில் உள்ள அறக்கட்டளையினர் உதவி செய்வார்கள் என்று தகவல் தெரியவந்தது. உடனே பரமசிவம் நாகப்பட்டினத்திற்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது, அங்கு கோவை சிட்கோ காமராஜ் நகர் சேர்ந்த ஆனந்தராஜ் (52) என்பவர் பரமசிவத்திடம் அறிமுகமாகி, நான் உங்களுக்கு பணம் ஏற்பாடு செய்து தருகிறேன். அதற்கு ஆவண செலவிற்கு ரூ.3,50,000 தர வேண்டும். பணத்தை கொடுத்தவுடன் உங்களுக்காக ரூ.20 லட்சம் பெற்றுக் கொடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஆனந்தராஜின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு பரமசிவம் கரூர் வந்தார். கரூரில் இருந்து ஆனந்தராஜ் செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.3,50,000 தயாராக உள்ளது என்று தெரிவித்தார். இதை அடுத்து பணத்தை எடுத்துக்கொண்டு வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் உள்ள மின்சார வாரியம் அலுவலகம் அருகில் காத்திருக்கும் படி ஆனந்தராஜ் கூறினார்.
அதன்படி நேற்று முன்தினம் மதியம் வெள்ளகோவில் மின்வாரிய அலுவலக பஸ் நிறுத்தம் பகுதியில் பணத்துடன் பரமசிவம் காத்திருந்தார். அப்போது, அவரது அருகில் கார் ஒன்று வந்து நின்றது. அந்த காரில் ஆனந்தராஜ் உட்பட 3 பேர் இருந்தனர். அவர்களிடம் ரூ.3,50,000 கொடுத்ததும், அவர்கள் பெரிய டிராவல் பேக் திறந்து உள்ளே பணக்கட்டுகள் இருப்பதை பரமசிவத்திடம் காட்டிவிட்டு டிராவல் பேக் அவரிடம் தந்து விட்டு சென்று விட்டனர்.
அந்த டிராவல் பேக்கில் பணக்கட்டுகள் இருப்பதாக நினைத்துக் கொண்டு தான்தோன்றி மலை சென்று வீட்டில் பேக்கை பரமசிவம் திறந்து பார்த்தார். அப்போது, ஒவ்வொரு பணக்கட்டிலும் மேலேயும், கீழேயும் மட்டும் அசல் ரூபாய் நோட்டுக்களும், உள்ளே டம்மியாக வெள்ளை காகிதம் இருந்துள்ளது. ரூ.20 லட்சம் ரூபாய்க்கு பதிலாக மொத்தமாக ரூ.13 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பரமசிவம் வெள்ளகோவில் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் ரமாதேவி, உதவி ஆய்வாளர் மணிமொழி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, மோசடி செய்த ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முத்தூர் கடை வீதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி காரில் இருந்தவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
பின்னர் கிடுக்கிப்பிடி விசாரணையை காவல்துறையினர் கையாண்டனர் அதன் பின்னர் தங்கள் தான் ஆசிரியர் பரமசிவத்திடம் டம்மி ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஏமாற்றிய ஆனந்தராஜ் மற்றும் அவருடைய நண்பர்களான மொடக்குறிச்சி வேலம்பாளையத்தைச் சேர்ந்த சாமிநாதன் (57), லக்மநாயக்கன்பட்டியை சேர்ந்த ரமேஷ் (44) என தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.