2015-ஐ பார்த்தாவது கற்றிருக்க வேண்டாமா..? திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே சென்னை வெள்ளப் பெருக்குக்குக் காரணம் : சீமான்

Author: Babu Lakshmanan
6 December 2023, 12:55 pm

சென்னை ; அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வரும் இருபெரும் திராவிடக்கட்சிகளும் வடிகால்களையும், வாய்க்கால்களையும் அமைக்க செய்யத் தவறி, மாநகரத்தையே வாழத் தகுதியற்ற நிலம் போல மாற்றியிருப்பது வெட்கக்கேடானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அதிகப்படியான மழைப்பொழிவு மற்றும் முறையான வடிகால் கட்டமைப்புகள் இல்லாமை ஆகியவற்றின் காரணமாக சென்னை மாநகரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கமும் பெரும் வேதனையளிக்கிறது. தமிழகத்தின் தலைநகரமாகவும், மக்கள் அடர்த்தி மிகுந்த தொழில் நகரமாகவும் விளங்கும் சென்னையில் அடிப்படைக்கட்டுமானம் இல்லாததன் விளைவை ஒவ்வொரு ஆண்டும் மக்கள் அனுபவித்து வருவது கொடுந்துயரமாகும்.

இயற்கைச்சீற்றத்தை எவராலும் தடுக்க முடியாதென்றாலும், அம்மழையை எதிர்கொள்வதற்குரிய வடிகால் வாய்ப்புகளும், வாய்க்கால்களும், நீர்வழிப்பாதைகளும் ஒரு நகரத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டியது பேரவசியமாகும். அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வரும் இருபெரும் திராவிடக்கட்சிகளும் அதனை செய்யத் தவறி, மாநகரத்தையே வாழத் தகுதியற்ற நிலம் போல மாற்றியிருப்பது வெட்கக்கேடானது. ஒவ்வொரு ஆண்டும் வடிகால் அமைப்பதற்கென சில பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, வெள்ளத்தில் மக்களைத் தத்தளிக்க விடுவது அப்பட்டமான முறைகேடாகும். 2015ஆம் ஆண்டு அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மதிப்பிட முடியாத அளவுக்குப் பேரிழிவை எதிர்கொண்டும், இன்றுவரை அதிலிருந்து பாடம் கற்காதுவிட்டு மக்களை வெள்ளப் பாதிப்பிற்குள்ளாக்கியது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியாகும்.

ஒவ்வொரு முறையும் மக்கள் பாதிக்கப்பட்டப் பிறகுதான், அரசு விழித்துக் கொண்டு செயலாற்றுமென்றால், அது அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியமும்தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இருந்தபோதிலும், தற்சமயத்தில் எல்லோரும் இணைந்து செயலாற்றினால்தான், இப்பேரிடலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும் என்பதால், அரசுக்கும், அதிகாரிகளுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும், மின்வாரியப் பணியாளர்களுக்குமென எல்லோருக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்கக் கோருகிறேன். நாம் தமிழர் உறவுகளுக்கு மீட்புப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறேன். அவர்களும் களத்தில் செயலாற்றி, உதவிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், அரசு முழு வீச்சில் செயல்பட்டால் மட்டும்தான் மாநகரத்தை மீட்டுக் கொண்டு வர முடியுமென்பதை உணர்ந்து, கூடுதல் கவனத்துடன் பணியாற்ற முன்வர வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்துகிறேன்.

ஆகவே, வெள்ளப்பாதிப்பிலிருந்து மக்களை விரைந்து மீட்டு, இயல்பு வாழ்க்கைத் திரும்ப நடவடிக்கை எடுப்பதோடு, இனி எந்தக் காலத்திலும் சென்னை வெள்ளக்காடாக மாறாவண்ணம் தடுக்கும்விதத்தில் நகரக் கட்டுமானத்தையும், வடிகால் அமைப்பையும் உருவாக்க வேண்டுமெனவும், வடிகால் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏறக்குறைய 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…