சென்னையில் 4,000 கோடிக்கு என்ன வேலை செஞ்சீங்க? வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!!
Author: Udayachandran RadhaKrishnan7 December 2023, 12:09 pm
சென்னையில் 4,000 கோடிக்கு என்ன வேலை செஞ்சீங்க? வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!!
சென்னை வெள்ள பாதிப்பு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், இந்திய வானிலை மையம் ஐந்து நாட்களுக்கு முன்பே ரெட் அலர்ட் எச்சரிக்கை வழங்கிய பின்பும், விடியா திமுக அரசு மழை பெய்த பின்பு ராட்சத மோட்டாருக்கு ஏற்பாடு செய்வதும், மற்ற ஏற்பாடுகளை செய்வதும் இந்த பொம்மை முதலமைச்சரின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது. 4.12.2023 அன்று தலைமைச் செயலாளர் தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்தபோது,
மழை நீரை அகற்றுவதற்கு பல்வேறு இடங்களில் ராட்சத மோட்டார்களை ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இந்த ராட்சத மோட்டார்கள் எப்போது வந்து தேங்கிய தண்ணீரை அகற்றும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கெனவே, தேங்கிய தண்ணீரை அகற்றுவதற்கு ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
மேலும், தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு, வாடகைக்கு வாங்கப்பட்ட சிறுசிறு மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு டீசல் வாங்குவதற்கு பணம் தரவில்லை என்பதால் பல இடங்களில் அந்த மோட்டார்கள் இயங்காமல் இருந்ததாக அப்பகுதி மக்கள் விடியாதிமுக அரசை குறை கூறிய நிகழ்வுகளும் 5.12.2023 அன்று நடந்தன. மழை நின்று மூன்று நாட்கள் ஆன நிலையில், இப்போது வரை சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள சுமார் 38,500 பிரதான உட்புற சாலைகளில், சுமார் 20 ஆயிரம் சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. அதேபோல், சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடியாமல், மழை நீர் வடியாமல், கழிவு நீருடன் கலந்து தொற்று நோய் பரவும் அபாயத்தில் உள்ளது.
எங்கள் ஆட்சிக் காலத்தில், கன் மழை மற்றும் புயல் காலங்களில் முன்னெச்சரிக்கையாக நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு தங்க வைக்கப்படுபவர்களுக்கு உணவு மற்றும் பாய், போர்வை போன்ற பொருட்களும் வழங்கப்படும். ஆனால், தற்போது இந்த ஆட்சியில் 5.12.2023 அன்று தான் ஒருசில இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டதாக செய்திகள் தெரிய வருகின்றன. 6.12.2023 அன்று வெளிவந்த மாலை பத்திரிகைகள், 24 மணிநோ ஊடகச் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்திலும், இன்னும் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளன. குறிப்பாக, ஒரு லட்சம் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது என்று செய்திகள் தெரிவித்தன.
அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் பாடி, கொரட்டூர், முகப்பேர் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. குறிப்பாக, இந்த விடியா திமுக அரசின் இரண்டு முறை மின் கட்டண உயர்வால் ஏற்கெனவே தள்ளாடிக்கொண்டிருந்த இத்தொழிற்சாவைகளுக்குள் தற்போதைய மழை வெள்ளம் புகுந்து இயந்திரங்கள் இயங்க முடியாத நிலையில் உள்ளதாகவும், வெள்ள நீரை அகற்றி, மீண்டும் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்குவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும் என்று தொழிற் கூட்டமைப்பினர் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த விடியா திமுசு அரசு இத்தொழிற்பேட்டைகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக அப்புறப்படுத்துவதோடு, அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், மின்கட்டண சலுகை அளிக்கவும் வலியுறுத்துகிறேன். ஒருசில இடங்களில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகளை மேற்கொண்ட இந்த விடியா திமுக அரசு, பணிகள் முடிவற்ற கால்வாய்களை சரியான முறையில் இணைக்கத் தவறியதால், தாழ்வான பகுதிக்கு குறுகிய காலத்தில் அதிக தண்ணீர் தேங்கியுள்ளது என்று தெரிய வருகிறது. எனவே, இதை உடனடியாக ஆய்வு செய்ய வலியுறுத்துகிறேன். இந்த மழையினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதற்கு நிர்வாகத் திறமையற்ற விடியா திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்.
இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் மற்றும் மந்திரிகளும் வாய்ச் சொல்லில் ஜாலம் காட்டுகிறார்கள். இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களை முறையாகக் கையாளாமல், இன்று இம்மழையினால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சரும், மந்திரிகளும் ஊடகங்களுக்கு தங்கள் முகங்களை காண்பிப்பதற்கு முனைப்பாக உள்ளனர். இதுவே அம்மா ஆட்சியில், எங்களது அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் தங்கி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
இந்த மழையின் போது மின் சும்பங்கள், மின் கோபுரங்கள் பெருமளவில் சேதமடைந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும், மின் துண்டிப்பு முழுமையாக நடைபெற்றது. மின் இணைப்பு இல்லாத காரணத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் உள்ள பொதுமக்கள், மின் மோட்டார்கள் இயங்காமல் குடிதண்ணீருக்கும், இயற்கை உபாதைகளுக்கும் போதிய தண்ணீர் இன்றி கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மேலும், இந்த விடியா திமுக அரசு திட்டமிட்டே மழையின் பாதிப்புகள் மற்றும் இந்த அரசின் அவலங்களை, ஊடங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்ற எண்ணத்துடன் 6.12.2023 மாலை வரை 50 சதவீத மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னை மாநகரில் சுமார் 4,000/- கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளநீர் வடிகால் பணிகள் நடந்தாக இந்த விடியா திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. நடந்து முடிந்த பணிகளின் பட்டியலை வெளியிட இந்த அரசு தயாரா? பணி முடிந்த ஒவ்வொரு இடத்துக்கும் செலவிட்ட தொகை கணக்கை தரத் தயாரா? பணிகள் 100 சதவீதம் முடிந்த இடங்கள், தொடர்ந்து பணி நடைபெறும் இடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை விடியா திமுசு அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாவின் வெளியிட வேண்டும். ஏதாவது சொல்லி, ஏமாற்றி தப்பித்துவிடலாம் என்று இந்த நிர்வாகத் திறனற்ற ஆட்சியாளர்கள் நினைத்தால், அதற்குண்டான பதிலை பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் வெளிப்படுத்துவார்கள் என்று எச்சரிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.