திமுக வேணுமா?… வேண்டாமா?…குழப்பத்தில் இண்டியா கூட்டணி!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2023, 9:43 pm

திமுக வேணுமா?… வேண்டாமா?…குழப்பத்தில் இண்டியா கூட்டணி!

இண்டியா கூட்டணிக்கு சோதனை மேல் சோதனை என்பதுபோல ஏதாவது ஒரு விவகாரம் அவ்வப்போது பெரும் தலைவலியை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. அதுவும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர்,தெலுங்கானா, மிசோரம் மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் வெளியான பின்பு இண்டியா கூட்டணியில் பலத்த சலசலப்பு ஏற்பட்டிருப்பதை வெளிப்படையாகவே காண முடிகிறது.

சத்தீஷ்கரிலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று பெரும்பாலான முன்னணி ஊடகங்கள் கருத்துக்கணிப்பு வெளியிட்ட நிலையில் டிசம்பர் 3ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டபோது அது அப்படியே பொய்த்துப் போனது. அதைவிட மிகுந்த ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் மத்திய பிரதேசத்தில் பாஜக அதிகபட்சம் 120 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில் 160க்கும் மேற்பட்ட இடங்களை வென்று இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.

அதேநேரம் தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் ஆட்சிக்கு எதிரான அலை வீசியதால் அங்கு காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றி விட்டது.

என்றபோதிலும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கண்ட படுதோல்விக்கு என்ன காரணம் என்பதை இண்டியா கூட்டணி ஆய்வு செய்தபோது இரண்டு முக்கிய காரணங்கள் கண்டறியப்பட்டன என்று கூறப்படுகிறது.

அதில் திமுக அமைச்சர் உதயநிதியால் சில மாதங்களுக்கு எழுப்பப்பட்ட சனாதன ஒழிப்பு விவகாரத்தை பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே பி நட்டா, உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தங்களின் பிரதான தேர்தல் பிரச்சார ஆயுதமாக கையில் எடுத்து பயன்படுத்திக் கொண்டது முதல் காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளை மதிக்காமலும், சிறிய அளவில் கூட தொகுதி பங்கீடு செய்து கொள்ள முன் வராமலும் பெரியண்ணன் மனப்பான்மையில் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டது இன்னொரு காரணமாக கூறப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக ராஜஸ்தானில் ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகளையும், உ.பி.யில் பிரதான எதிர்க்கட்சியாக திகழும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடியை மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் புறக்கணித்ததும்தான் அதன் படுதோல்விக்கு காரணமாக அமைந்தது என்றும் அந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில்தான் கடந்த 6ம் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்த, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் பல கட்சிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் பங்கேற்க மறுத்ததை தொடர்ந்து கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் வேறு வழி இன்றி காங்கிரஸ் தலைமை தற்போது ஒரு படி கீழே இறங்கி வந்துள்ளது.

அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது “இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் வருகிற 19ம் தேதி டெல்லியில் நடக்க இருக்கிறது. இதில் கூட்டணி கட்சிகளின் எல்லா தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இக் கூட்டத்தில் நான், எனது என்பன போன்ற பிரச்சனைகள் எதுவும் இருக்காது; நாம் என்ற ஒற்றுமையுடன் ஆலோசிக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேச வேண்டும் என கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வரும் சூழலில் அதுவே பிரதானமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் இண்டியா கூட்டணியில் இருந்து திமுகவை வெளியேற்ற வேண்டும் என்கிற ஒரு சிந்தனை பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், ஜார்கண்ட், மராட்டிய மாநிலங்களில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேயின், சிவசேனா, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் தீவிரமாக எழுந்துள்ளது.

அதை அவர்கள் தங்களது கட்சி தலைமையிடமும் தெரிவித்து வருகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அந்த கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் வைக்கும் வாதங்கள் இவைதான்.

“ஐந்து மாநில தேர்தல்கள் அடிப்படையில் பார்த்தால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக 285 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

சனாதன ஒழிப்பு பற்றி பேசும் பிரதான மாநில கட்சி ஒன்றும் நமது கூட்டணியில் இருப்பது இதற்கு முக்கிய காரணமாக அமையலாம். அக் கட்சி இண்டியா கூட்டணியில் தொடர்ந்து நீடித்தால் நாடாளுமன்றத் தேர்தலில் நமது அணியால்150 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவதே கடினமாகிவிடும்.

அதேநேரம் அக் கட்சியை இப்போதே கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டால் 2024 தேர்தலில் நம்மால் 300 இடங்களுக்கும் குறையாமல் வெற்றி காண முடியும். அந்த கட்சியால் நமக்கு 40 இடங்கள் கிடைக்காமல் போனாலும் கூட, மற்ற மாநிலங்களில் அதை ஈடுகட்டி இண்டியா கூட்டணியால் பாஜகவை வீழ்த்தி விட முடியும்.

ஏனென்றால் சனாதன தர்மத்தை ஆதரிக்கும் மக்கள் அனைவரும் நம்மை நடுநிலை தவறாதவர்கள் என்ற கோணத்திலேயே பார்ப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு மனதார வாக்களிக்கவும் செய்வார்கள்.

தவிர அக்கட்சியால் காங்கிரஸுக்கு ஒரு சில இடங்களில் வெற்றி கிடைக்கலாம். அதற்காக நாட்டை மீண்டும் பாஜக வசம் ஒப்படைத்து விடக்கூடாது. அப்படி நடந்து விட்டால் இண்டியா கூட்டணி நாட்டிற்கு செய்யும் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாக அமைந்தும் விடும்.

இதை மனதில் கொண்டு 19ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இண்டியா கூட்டணி தொகுதி பங்கீடு பற்றி பேச்சு நடத்தவேண்டும்.

நமது கூட்டணியில் அங்கம் வகிக்கும் அந்தப் பிரதான மாநில கட்சியையும் அதனுடன் உள்ள சிறு சிறு கட்சிகளையும் வெளியேற்றுவதற்கு எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையென்றால் எத்தனை முறை ஆலோசனை கூட்டம் நடத்தினாலும் சனாதன ஒழிப்பு பற்றி பேசும் அக் கட்சியையும் வைத்துக்கொண்டு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறுவது குதிரைக்கு கொம்பு முளைத்த கதையாகத்தான் இருக்கும். 15 மாநில மக்களின் மன உணர்வுகளை புரிந்துகொண்ட பிறகே இந்த வேண்டுகோளை நாங்கள் வைக்கிறோம்” என்று பல்வேறு காரணங்களை அந்தக் கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.

“இண்டியா கூட்டணியில் உள்ள சில முக்கிய கட்சிகளின் தலைவர்கள் எந்தக் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்று வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் கூட அது
திமுகவைத்தான் மறைமுகமாக குறிப்பிடுகிறது என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று டெல்லியில் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“ஆனால் தமிழகத்தில் திமுகவையும், அதன் கூட்டணியில் உள்ள விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளை கழற்றி விடுவதற்கு இண்டியா கூட்டணி அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ளுமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரள்வதற்கு வழி அமைத்துக் கொடுத்ததே திமுக தலைவர் ஸ்டாலின்தான். மேலும் மாநில முதலமைச்சராக உள்ள அவருடைய கட்சியை வெளியேற்றுவதற்கு காங்கிரஸ் ரொம்பவே தயக்கம் காட்டும்.

வேண்டுமென்றால், நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடியும் வரை சனாதன ஒழிப்பு பற்றி நீங்கள் பேசவேகூடாது என்று இண்டியா கூட்டணி திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் கேட்டுக்கொள்ளலாம். அதனால் ஐந்து மாநில தேர்தல்களில் ஏற்பட்ட பாதிப்புகளை காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மறைமுகமாக திமுகவுக்கு எடுத்தும் சொல்லலாம்.

ஒருவேளை திமுகவை ரொம்பவும் எச்சரித்தால் தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டு அதில் பெரும் பகுதியினர் திமுக அணியில் இணைவதற்கும் வாய்ப்பு உருவாகிவிடும் என்று காங்கிரஸ் தலைமை கருதுவதற்கும் இடம் உண்டு. எனவே காங்கிரஸ் இந்த விவகாரத்தில் அடக்கியே வாசிக்கும்.

ஆனால் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தை இனி தீவிரமடையும் என்பதால் இண்டியா கூட்டணி தலைவர்களால் இது குறித்து வெளிப்படையாக பேசாமல் இருக்கவும் முடியாது. அதனால் திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சனாதன ஒழிப்பு விவகாரத்தில் கடிவாளம் போடப்படும் என்ற நிலைதான் காணப்படுகிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, வரும் 19ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் அனல் பறக்கும் கார சார விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது என்பது மட்டும் உறுதி!

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 476

    0

    0