விளக்கம் கேட்ட எம்பிக்களை சஸ்பெண்ட் செய்வது வெட்கக்கேடானது.. அமித்ஷா பதவி விலகணும் ; திருமாவளவன் கோரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2023, 3:56 pm

விளக்கம் கேட்ட எம்பிக்களை சஸ்பெண்ட் செய்வது வெட்கக்கேடானது.. அமித்ஷா பதவி விலகணும் ; திருமாவளவன் கோரிக்கை!

எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசப்பட்ட நிகழ்வு உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்புக் குறைபாட்டுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகவேண்டும்; தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 15 எம்.பிக்கள் மீதான நடவடிக்கையை உடனே ரத்து செய்யவேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்!

பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவால் பரிந்துரைக்கப்பட்டு மக்களவைக்குள் வந்த பார்வையாளர்கள் இருவர் திடீரென பார்வையாளர் மாடத்திலிருந்து அவைக்குள் குதித்து புகைக் குண்டுகளை வீசினர். அவர்களை எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

பாதுகாப்புச் சோதனைகளை மீறி புகைக் குண்டுகளை அவர்கள்எப்படி எடுத்துவந்தனர் ? இந்தப் பாதுகாப்புக் குறைபாடு உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

‘இதுகுறித்து உள்துறை அமைச்சர் அவையில் விளக்கம் அளிக்க வேண்டும்; அவையில் விதி எண்- 267 இன் கீழ் விவாதம் நடத்த வேண்டும்’ என இந்தியா கூட்டணி கட்சிகளால் நேற்று முடிவு செய்யப்பட்டு, அது மக்களவை/ மாநிலங்களவைத் தலைவர்களுக்கும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.

அவையில் உள்துறை அமைச்சர் பதிலளிக்காததால் அதை இந்தியா கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதற்காக 14 மக்களவை உறுப்பினர்களும்; மாநிலங்களவை உறுப்பினர் ஒருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெளி ஆட்கள் உள்ளே அத்துமீறி நுழைந்து புகைக் குண்டு வீசுவதற்கு அறிந்து அறியாமலோ காரணமாகவுள்ள பாஜக எம்.பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக, விளக்கம் கேட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது வெட்கக் கேடானது! இத்தகைய ஜனநாயகப் படுகொலைக்கு இரு அவைகளையும் வழிநடத்திய சபாநாயகர்கள் துணைபோவது அதிர்ச்சியளிக்கிறது.

நாடாளுமன்றப் பாதுகாப்பில் நிலவும் குறைபாடு மற்றும் கவனக்குறைவுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அத்துடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான இடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்வதுடன், விதிஎண் 267 -இன் கீழ் அவையில் அது குறித்து விவாதம் நடத்த முன்வரவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்” என வலியுறுத்தியுள்ளார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 269

    0

    0