பலத்த காற்று.. கனமழை பெய்ய வாய்ப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2023, 9:49 pm

பலத்த காற்று.. கனமழை பெய்ய வாய்ப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் கடந்த பல நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வந்தது. ஆனால் சமீபத்திய நாட்களில் பனிப்பொழிவு தீவிரமடைந்திருக்கிறது. இருப்பினும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து விடுத்துள்ள அறிவிப்பில், நாளை(டிச.16) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
18ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 19ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது” என தெரிவித்திருக்கிறது.

மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில் நாளை(டிச.16) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதே டிச.17,18ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவு வெளியாகியுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

  • Tamil actress Sana Khan updates பிரபல நடிகை மீண்டும் கர்ப்பம்..கோலிவுட்டில் பரபரப்பு..!
  • Views: - 989

    0

    0