எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தம்.. டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் : வெளியாகும் தேதி அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan16 December 2023, 9:08 pm
எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தம்.. டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் : வெளியாகும் தேதி அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்று அழைக்கப்படும் டிஎன்பிஎஸ்சி தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு துறை வாரியாக ஆட்களை தேர்வு செய்கிறது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி கடந்த சில ஆண்டுகளாக பணியாளர்களை தேர்வு செய்வதில் சுணக்கம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக குரூப்-2, 2ஏ ஆகியவற்றில் வரும் 5 ஆயிரத்து 446 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் நடந்தது.
இந்த முதல்நிலைத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. தேர்வு முடிந்த சில மாதங்களில் தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இதுவரை முடிவு வெளியிடப்படவில்லை. இதனால் நொந்துபோன டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள், குரூப் 2 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து ட்விட்டரில் டிரெண்ட் செய்து வந்தனர்.
அரசியல் தலைவர்களும் உடனடியாக தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்றும் தாமதத்திற்கான காரணம் என்னவென்று கூற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், குருப் 2, 2 ஏ முதன்மை தேர்வு முடிவுகள் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், குருப் 2, 2 ஏ முதன்மை தேர்வு முடிவுகள் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியிடப்படும்.
முதன்மை தேர்வுக்காக அதிக விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டியிருந்ததாலும், புயல், வெள்ளம் காரணமாகவும் விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணி துரிதமாக நடைபெறுகிறது. குருப் 2 தேர்வுகள் தொடர்பாக வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.