CM ஸ்டாலினிடம் வெள்ளநிவாரணம் வழங்க எதிர்ப்பு! காங். எம்எல்ஏக்களுக்கு செக்!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2023, 9:29 pm

திமுக கூட்டணியில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு திடீரென ஆளும் கட்சியான திமுக மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை, திடீரென்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக முணுமுணுப்பை காட்டத் தொடங்கி இருக்கிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர்களில் பெரும்பாலானோர் திமுகவிடம் சரணாகதி அடைந்துவிட்டதாக கருதப்படும் நிலையில் இந்த சலசலப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தி உள்ளது.

இதற்குக் காரணம் இரு வாரங்களுக்கு முன்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, மாவட்டங்களை புரட்டி போட்ட மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புதான்.

இந்த நான்கு மாவட்டங்களிலும் 37 லட்சம் குடும்பத்தினர் வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி இவர்களில் முதல் கட்டமாக
24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை தமிழக அரசு அறிவித்து, அதை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தும் விட்டார். இது தவிர முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நன்கொடை தாருங்கள் என்று மக்களிடம் கோரிக்கை வைத்து அதன் மூலம் திமுக அரசு நிதியும் திரட்டி வருகிறது.

மேலும் தனது கட்சியின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரண நிதியாக முதலமைச்சர் ஸ்டாலின் பெற்றும் விட்டார். மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் வெள்ள நிவாரணத்துக்கு நிதி உதவி அளித்துள்ளன. ஆனால் தமிழக காங்கிரஸ் இதுவரை திமுக அரசு திரட்டும் வெள்ள நிவாரண நிதிக்கு எந்தப் பங்களிப்பையும் செலுத்தியதாக தெரியவில்லை.

இதற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில் தற்போது அந்த மர்மம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக இது திமுகவின் தீவிர அபிமானியும் தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவருமான செல்வப் பெருந்தகைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியும் விட்டிருக்கிறது, என்றே சொல்ல வேண்டும்.

அவருக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பட்டியல் இன பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார் எழுதிய கடிதம்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வெள்ள நிவாரண நிதி வழங்க முட்டுக்கட்டை போடுவது போல அமைந்துவிட்டது, என்கிறார்கள்.

செல்வப்பெருந்தகைக்கு, அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் சில யோசனைகளையும் தெரிவித்து இருக்கிறார். ரஞ்சன் குமார் எழுதிய அந்த கடிதத்தில், “காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 18 பேரின் ஒரு மாத சம்பளத்தை, முதலமைச்சரிடம் கொடுக்க முடிவு செய்துள்ளீர்கள். இது பாராட்ட வேண்டிய விஷயம் தான். இருந்தாலும், இதில் என் கருத்தையும் இங்கே பதிவு செய்வது அவசியம்.

தொழிலதிபர்கள் மற்றும் சினிமா நடிகர்களுக்கு மக்களுடன் நேரடி தொடர்பு இல்லை. எனவே அவர்கள் அரசிடம் நேரடியாக நிவாரண உதவித் தொகையை வழங்குகின்றனர். நம் கட்சிக்கு, தமிழகம் முழுவதும் அடித்தள கட்டமைப்பு வலுவாக இருக்கிறது.

எனவே, 18 எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளத்தை, கட்சியே நேரடியாக மக்களுக்கு நிவாரண உதவிகளாக வழங்குவதுதான் சிறந்ததாக இருக்கும். இந்தத் தொகையுடன் ஒவ்வொரு எம்எல்ஏவும் மூன்று மடங்கு சேர்த்து கொடுத்தால் சுமார் 60 லட்ச ரூபாய் வரை நிதி திரண்டு விடும்.

இதை நாமே மக்களை நேரடியாக சந்தித்து கொடுத்தால் தான், நம் கட்சியின் செயல்பாடு மக்களுக்கும் தெரிய வரும். மாறாக, முதலமைச்சரிடம் கொடுக்கும்போது, பத்தோடு பதினொன்றாகவும் ஒரு நாள் செய்தியாகவும் இது அடங்கிப் போய்விடும். இதை நாம் நேரடியாக மக்களிடம் வழங்கினால், அவர்களுடனான உறவை மேலும் பலப்படுத்தவும் முடியும்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வழங்கும் நிவாரண தொகையை, நம் கட்சியின் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் வேளச்சேரி எம்எல்ஏ ஹசன் மௌலானா மற்றும் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாயிலாக, மக்களுக்கு நேரடியாக வழங்கலாம்.

இது தவிர, மாவட்ட, நகர, வட்டார தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழியாகவும் வழங்கலாம். இந்த எதார்த்த உண்மையை புரிந்து, சரியான முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்” என அந்த கடிதத்தில் ரஞ்சன் குமார் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் வெள்ள நிவாரண பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்று கூறி திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி ஜெயக்குமாரையும், வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மௌலானாவையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் அவர்கள் தலைமையிலேயே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் என்று ரஞ்சன் குமார் குறிப்பிட்டு இருப்பதுதான்.

இக் கடிதத்தை அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது.

இதனால்தான் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் செல்வப் பெருந்தகை தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தங்களது மாத சம்பளத்தை இதுவரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பெய்த வரலாறு காணாத மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கன மழையை விட பல மடங்கு அதிகம் என்பது தெளிவாக தெரிகிறது.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 94 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பல சிறு நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கானவரின் வீடுகளில் வெள்ளம் புகுந்தும் உள்ளது.

தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்களில் சரி பாதி பேர் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் அந்தப் பகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடியான நிலை இப்போது அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

இதற்கும் கணிசமான அளவிற்கு நிவாரண உதவி வழங்கவேண்டிய கட்டாய சூழல் உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு எம்எல்ஏவும் 15 லட்ச ரூபாய் முதல் 25 லட்ச ரூபாய் வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இன்னொரு பக்கம் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக ராகுல் காந்தி தனது கட்சியினரிடம் நன்கொடையை வாரி வழங்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கும் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குறிப்பிட்ட அளவிற்கு நிதி கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் கட்சி மேலிடத்தின் கடும் கோபத்திற்கு அவர்கள் உள்ளாக நேரிடலாம்.

இப்படி பல்வேறு நெருக்கடிகள் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்ககளுக்கு உருவாகி இருப்பதால் அவர்கள் என்ன செய்வது என்று விழி பிதுங்கி நிற்கிறார்கள் என்பது நிஜம்!

ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பலர் தாங்கள் 2021 தேர்தலில் போட்டியிடுவதற்காக 2 கோடி ரூபாய் வரை ஒரு சீட்டுக்கு பணம் கொடுத்ததாக ஜோதிமணி எம்பி தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் மீது அப்போது பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார். அதனால் வெற்றி பெற்று இப்போது எம்எல்ஏக்களாக இருக்கும் அவர்களிடம் பணமே இல்லை என்று கூறினால் அது நம்ப முடியாத ஒன்றாகத்தான் இருக்கும்! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரும் 50 லட்சம் ரூபாய் வரை நிவாரண உதவிக்கு செலவிட முடியும். அதனால் அவர்களுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

  • Lokesh Kanagaraj Kaithi 2 Updates சொர்க்கவாசல் படத்தால் கைதி 2 – க்கு சிக்கல்..குழப்பத்தில் லோகேஷ் ..!
  • Views: - 386

    0

    0