சீட்டு கட்டு போல சரியும் போலி சித்தாந்தம்… செந்தில் பாலாஜியை தொடர்ந்து மற்றொரு அமைச்சர்… அண்ணாமலை ஆவேசம்..!!
Author: Babu Lakshmanan19 December 2023, 2:22 pm
அமைச்சர் பொன்முடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், திமுக குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மீட்பு பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் I.N.D.I. கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளார். அப்படியே பிரதமர் மோடியை சந்தித்து வெள்ள பாதிப்பு குறித்து பேசவும் முடிவு செய்துள்ளார்.
தென் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணி கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு செல்வது அவசியமா..? என்று பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். அதேவேளையில், சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது திமுகவுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஊழலை மட்டுமே தனது அரசியல் பிழைப்பாகக் கொண்டு, எதிர்ப்புக் குரல்களை அதிகார பலத்தின் மூலம் அடக்கிய ஒரு போலியான சித்தாந்தம், இன்று சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே, இலாகா இல்லாத திமுக அமைச்சர் ஒருவர், ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார். தமிழக உயர்கல்வி அமைச்சர் திரு பொன்முடியோ, ஊழல் குற்றச்சாட்டில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். தென் தமிழகத்தில், மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த துயரமான வேளையில், தமிழக முதல்வரோ, ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப அரசியல்வாதிகளின், I.N.D.I. கூட்டணி நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லிக்குச் சென்றிருக்கிறார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.