எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் குறித்து பேசாதது ஏன்..? செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்பி ராகுல் ஆவேசம்..!!
Author: Babu Lakshmanan20 December 2023, 9:21 pm
எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் குறித்து பேசாதது ஏன்..? என்று செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்பி ராகுல் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கடந்த வாரம் மக்களவைக்கு அத்துமீறி நுழைந்த 2 பேர் வண்ணப் புகை குண்டுகளை வீசியதால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டுமெனக் கூறி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்துவதாகக் கூறி, திமுக, காங்கிரஸ் உள்பட இரு அவையிலும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த சஸ்பெண்டு நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்றத்தின் வெளியே எதிர்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காந்தி சிலையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் அவையை வழிநடத்தும் விதத்தை, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கிண்டலாக நடித்துக் காட்டிய விவகாரம் குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால், ஆத்திரமடைந்த ராகுல் காந்தி, ஊடகங்கள் தொடர்ந்து அதையே காட்டிக் கொண்டிருக்கின்றன, 150 எம்.பி.க்கள் வெளியே தூக்கி வீசப்பட்டது பற்றி ஊடகங்களில் எந்த விவாதமும் நடத்தவில்லை. அதானி விவகாரம், ரபேல் மோசடி வேலைவாய்ப்பின்மை குறித்தும் எதுவும் பேசவில்லை, என ஆவேசமாக தெரிவித்து சென்றார்.