சென்னை வானிலை மையத்தை மூடுங்க.. அவங்க செய்ற வேலையை 5ம் வகுப்பு மாணவன் செய்வான் : கொந்தளித்த அன்புமணி!

Author: Udayachandran RadhaKrishnan
22 December 2023, 1:32 pm

சென்னை வானிலை மையத்தை மூடுங்க.. அவங்க செய்ற வேலையை 5ம் வகுப்பு மாணவன் செய்வான் : கொந்தளித்த அன்புமணி!

தமிழ்நாட்டில் இந்த ஒரு மாதத்தில் மழை காரணமாக ஏற்பட்ட இரண்டு பேரழிவுகளையும் வானிலை மையம் கணிக்க தவறிவிட்டது. இதை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

அதில், சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம்; அது தேவையில்லை, வேஸ்ட். வானிலை மையம் செய்கிற வேலையை 5ஆம் வகுப்பு மாணவன் செய்வான்; சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனதான் எப்போதும் அறிவிக்கிறார்கள்.

இது எங்களுக்கு தெரியாதா? உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறிவருகிறது; இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலைதான் தொடர்கிறது. மழை எச்சரிக்கையை சரிவர அளிக்கவில்லை எனில் சென்னை வானிலை ஆய்வு மையம் எதற்கு? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் வைத்துள்ளார்.

உதாரணமாக வங்கக்கடலில் கடந்த நவம்பர் 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த 2 வாரங்களுக்கு முன் தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் நேற்று முதல்நாள் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.

சென்னையை இந்த புயல் நேரடியாக தாக்கவில்லை என்றாலும் சென்னைக்கு அருகிலேயே புயல் மையம் கொண்டு இருந்ததுதான் எல்லா பாதிப்புக்கும் காரணம். இந்த புயல் சென்னைக்கு அருகே 100 கிமீ தூரத்தில் நகர தொடங்கியது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் புயலின் வேகம் 10 கிமீதான். அதாவது 1 மணி நேரத்திற்கு 10 கிமீ தூரம் மட்டுமே நகரும்.

அதே சமயம் இந்த புயல் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. அதாவது கிழக்கு திசையில் நகர்ந்து வந்தது. இதனால் சென்னைக்கு வடக்கு திசையில் புயல் தூரமாக சென்றாலும் கிழக்கு திசையில் அது அருகில் இருந்து கொண்டே இருந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அந்த புயல் கிட்டத்தட்ட 17 மணி நேரம் சென்னைக்கு அருகிலேயே இருந்தது. சென்னைக்கு அருகே 100 -200 கிமீ தூரத்திலேயே புயல் இருந்தது. அதுதான் சென்னைக்கு பெரிய சிக்கலாகி மாறியது.

100 கிமீ தூரத்தில் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க இருந்தது. இதனால் கடுமையான மழை மேகங்களை புயல் சென்னையை நோக்கி கொண்டு வந்தது. மேலும் கடலில் புயல் நின்றதால் காற்று காரணமாக அலைகள் அதிகம் இருந்தன. இதனால் ஆற்று நீர் கடலில் சேர முடியவில்லை. ஆறு நிரம்பியதால்.. கால்வாய் நீர் எங்கும் கடலில் கலக்க முடியவில்லை. இதனால் சென்னை வெள்ள நீர் கால்வாய்கள் அமைப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போனது. இதுவே தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி இருக்க முக்கிய காரணம் ஆகும்.

இதேபோல்தான் தற்போது தென் மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த முறை புயல் உருவாகவில்லை. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கன்னியாகுமரிக்கு கீழே கடல் பகுதியில் நகராமல் நிலைகொண்டு இருந்தது. இதுதான் மழைக்கு காரணம். பொதுவாக.. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கடலுக்கு மேலே இருக்கும் போது கடலில் மிக கனமழையை கொடுக்கும். அதுவே நிலத்திற்கு அருகே இருக்கும் போது அது நிலத்தில் கனமழையை கொடுக்கும். அதுவே ஒருவேளை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகராமல் ஒரே இடத்தில் இருந்தால் நிலப்பகுதியில் மிக மிக அதிக கனமழையை தரும்.

அதிலும் மேலடுக்கு சுழற்சியை விட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பூமிக்கு மிக அருகில் இருக்கும். இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகராமல் ஒரே இடத்தில் குமரிக்கு அருகிலேயே இருந்தது. இதை வளிமண்டல கீழடுக்கு சுழற்சியை நோக்கி காற்று தொடர் நெல்லை , தென்காசி, தூத்துக்குடி பக்கத்தில் இருந்து வந்து பெரிய சுழற்சியை ஏற்படுத்தியதே.. 4 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்ய காரணம் ஆகும்.

ஆனால் இந்த இரண்டு சம்பவங்களையும் வானிலை ஆய்வு மையம் கணிக்கவில்லை. பல்வேறு வானிலை ஆய்வு கருவிகள் இருந்தும் கூட இந்திய வானிலை மையம், சென்னை வானிலை மைய கிளை, பல்வேறு கடலோர மாவட்டங்களில் உள்ள வானிலை மானிகள் எதுவும் இதை கணிக்கவே இல்லை.

தமிழ்நாட்டில் பெய்ய கூடிய மழையை பல்வேறு தனியார் வானிலை ஆர்வலர்கள் துல்லியமாக கணிக்கும் போது இந்திய வானிலை மையம் சரியான கணிப்புகளை மேற்கொள்ளாமல் சொதப்பி வருகிறது.

தென்தமிழகத்தில் சற்று முன்னரே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பான முன்னேற்பாடுகளை செய்திருக்கலாம்.. ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம், துல்லியமான கணிப்புகளைக் கொடுக்கத் தவறியதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

  • Dhanush accused of troubling Keerthy Suresh கீர்த்தி சுரேஷ்க்கு தொல்லை : தனுஷை எச்சரித்த ரஜினி..வெளிவந்த ரகசியம்..!
  • Views: - 303

    0

    0