அப்பன் என்பது கெட்ட வார்த்தையா..? நான் யாரையும் மரியாதை குறைவாக பேசல ; விடாப்பிடியாக நிற்கும் அமைச்சர் உதயநிதி..!!
Author: Babu Lakshmanan23 December 2023, 1:39 pm
பொதுமக்களின் வரி விவகாரத்தில் தான் யாரையும் தரக்குறைவாக பேசவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையை தொடர்ந்து தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் நிவாரணத் தொகையை கோரியது.
ஆனால், தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இது தொடர்பாக பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவங்க அப்பன் வீட்டு காசை கேட்டதை போல செயல்படுவதாகவும், எங்கள் வரிப்பணத்தைத் தான் கேட்பதாக கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜகவினரும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர்.
அதேபோல, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், அமைச்சர் பதவி உங்க அப்பன் வீட்டு சொத்தா..? என்று கேட்டதுடன், பொறுப்புக்கு ஏற்றாற் போல பேச வேண்டும் என்று அமைச்சர் உதயநிதிக்கு புத்திமதி சொன்னார். இதனால், கடுப்பான அமைச்சர் உதயநிதி, மீண்டும் சொல்கிறேன், மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அப்பன் வீட்டு சொத்தை கேட்கவில்லை என்று கூறி மறுபடியும் வம்பிழுத்தார்.
இந்த நிலையில், சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வழங்கும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்பன் என்பது கெட்ட வார்த்தையா ? நான் நாகரீகம் இல்லாமல் எதையும் பேசவில்லை. நான் தவறாக எதுவும் பேசவில்லை.. எனக்காக நான் மத்திய அரசிடம் நிதி கேட்கவில்லை தமிழ்நாட்டு மக்களுக்காக தான் கேட்கிறோம். கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாஜக ஆட்சி பேரிடர் தான். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் பாதிப்பு அதிகமாக உள்ளது தொடர்ந்து அங்கே மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
நாளை மீண்டும் தூத்துக்குடி செல்ல இருக்கிறேன், மழைக்காலத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றார். ஆனால் அடுத்த நாளே களத்திற்கு வந்து மக்களை சந்தித்தார். வெள்ள பாதிப்புகளை தடுக்க சென்னையிலும் சரி, தென் மாவட்டங்களிலும் சரி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்தது, எனக் கூறினார்.