பொன்முடியை நேரில் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.. வீடு தேடிச் சென்று ஆறுதல்!
Author: Udayachandran RadhaKrishnan23 December 2023, 4:07 pm
பொன்முடியை நேரில் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.. வீடு தேடிச் சென்று ஆறுதல்!
வருமானத்துக்கு அதிகமாக அதிகமாக 1 கோடியே 72 லட்ச ரூபாய் அளவுக்கு சொத்து குவித்த வழக்கில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடிக்கும், அவருடைய மனைவி விசாலாட்சிக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இருவருக்கும் தலா 50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கில் இரு தினங்களுக்கு முன்பு, பொன் முடியும் அவருடைய மனைவியும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தற்போது இருவருக்கும் சிறைத் தண்டனையை உறுதி செய்துள்ளது. மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியும் இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார் பொன்முடி. நேற்று காலை இந்த சந்திப்பு நடைபெற்ற நிலையில் சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடி இல்லத்திற்கு திடீர் வருகை தந்தார் மு.க.அழகிரி.
அவரை தொடர்ந்து முரசொலி செல்வமும், முதலமைச்சர் ஸ்டாலினின் மற்றொரு சகோதரருமான தமிழரசும் பொன்முடி இல்லத்துக்கு சென்று பேசியுள்ளனர்.
பின்னர் மு.க.அழகிரி, முரசொலி செல்வம், தமிழரசு மூவரும் வெளியே வந்து ஒரே காரில் அங்கிருந்து புறப்பட்டனர். தண்டனை அறிவித்ததால் மன உளைச்சலில் உள்ள பொன்முடிக்கு ஆதரவாகவும், ஆறுதலாக பேசியிருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
இந்த தண்டனையை எதிர்த்து ஒரு வாரம் கழித்து பொன்முடி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.