மின்னணு வாக்குப்பதிவு முறை வேண்டாம்.. வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் : திருமாவளவன் அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan24 December 2023, 5:17 pm
மின்னணு வாக்குப்பதிவு முறை வேண்டாம்.. வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் : திருமாவளவன் அறிவிப்பு!
பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மனித சமூக நீதியை நிலைநாட்டவும், விளிம்பு நிலை மக்கள் வலிமை பெற வேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடியவர் பெரியார்.
அவரின் அரசியலை நீர்த்துப் போகச் செய்வதற்கு சில சனாதன சக்திகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து அவரது கருத்துக்களுக்கு எதிராக பேசி வருகிறார்கள்.
அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி என்ற பெயரில் சமூக நீதி காண போராளிகள் ஒருங்கிணைந்திருக்கிறோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் சனாதன சக்திகளை விரட்டியடிப்போம் என பெரியாரின் இந்த நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம்.
வருகிற 29ம் தேதி, தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு முறையை மாற்றி வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
இது தொடர்பாக இந்தியா கூட்டணியில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. எனவே, பொதுமக்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும் என கூறினார்.