பழையபடி ஓட்டுச் சீட்டுக்கு மாறுங்க!…. வாக்குப்பதிவு எந்திரத்தால்நடு நடுங்கும் திருமா….? தமிழக அரசியல் களம் பரபர…!!
Author: Babu Lakshmanan25 December 2023, 9:15 pm
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சிகள் காட்டும் ஆர்வத்தை விட சின்ன சின்ன கட்சிகள்தான், இதை மிக ஆவலோடு எதிர்பார்ப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
வருகிற 29ம் தேதி டெல்லியில் காங்கிரசுக்கும், திமுகவுக்கும் இடையே 2024 தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடப்பதாக மிக அண்மையில்தான் தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் அதற்கு முன்பாகவே மதிமுக, விசிக,மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த விஷயத்தில் துள்ளிக் குதிக்கின்றன.
ஒருவேளை நமக்கு கிடைக்கக்கூடிய ஒன்றிரண்டு தொகுதிகளும் இம்முறை கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தால் இந்தக் கட்சிகளின் தலைவர்கள் இப்படி தீவிரம் காட்டுகின்றனரோ என்ற சந்தேகமும் இதனால் எழுகிறது.
அந்த வகையில்தான் திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திடீரென ஒரு கோரிக்கையை எழுப்பி, அதற்காக வருகிற 29ம் தேதி, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அகில இந்திய அளவில் இண்டியா கூட்டணி என்ற பெயரில் சமூகநீதி காண போராளிகள் ஒருங்கிணைந்து இருக்கிறோம். வருகிற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சனாதன சக்திகளை விரட்டி அடிப்போம் என பெரியாரின் இந்த நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம்.
பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து எதேச்சதிகாரப் போக்கோடு செயல்பட்டு வருகிறது, எதிர்க்கட்சிகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அரசமைப்புச் சட்டத்தையும் மதிப்பதில்லை. அவர்கள் விரும்பியது போல சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றனர். இது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது. மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள்.
மின்னணு எந்திர வாக்குப் பதிவு முறையை மாற்றி வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அதுவே சிறந்ததாக இருக்கும் என்பதை வலியுறுத்தி வருகிற 29ம் தேதி தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இது தொடர்பாக இண்டியா கூட்டணியில் தீர்மானமும் நிறைவேற்றப் பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இதற்கு ஆதரவு தரவேண்டும். சென்னை உள்ளிட்ட வட மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை கணக்கில் கொண்டு வெல்லும் ஜனநாயகம் மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது வரும் ஜனவரி இறுதியில் நடைபெறும்.
முதலமைச்சரை சந்தித்த பின்பு எந்த நாள் என்பதை அறிவிப்போம். அமைச்சர் பொன்முடி வழக்கு முனைப்போடு எதிர்கொள்வதற்கு திமுகவின் வழக்கறிஞர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். சட்டப்படி உரிய தீர்வை பெறுவார்கள்” என்று குறிப்பிட்டார்.
திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்த விஷயங்களை கூர்ந்து கவனித்தால் அவர் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர் போல பேசியதாக தெரியவில்லை. திமுகவின் மூத்த நிர்வாகிகள் தங்களது கட்சித் தலைமையை எப்படி உயர்த்தி பேசுவார்களோ அது மாதிரி பாராட்டுவதாகத்தான் தெரிகிறது.
2004 முதல் 2019 முடிய இதுவரை நான்கு நாடாளுமன்றத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு விட்டன. இது தவிர இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களிலும் எந்திர ஓட்டு பதிவு முறையில் சட்டப்பேரவைத் தேர்தல்களும் நடத்தப்பட்டும் இருக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் தலா இருமுறை வெற்றி பெற்றிருக்கின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் நடந்த மாநிலத் தேர்தல்களில் தமிழகம், மேற்கு வங்கம், பஞ்சாப், டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா என பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. இதேபோல் ஒடிசாவிலும், ஆந்திராவிலும் பாஜக- காங்கிரஸ் ஆகிய இரு கூட்டணிகளையும் சாராத கட்சிகள் ஆட்சியை கைப்பற்றவும் செய்தன.
இந்த மாநில தேர்தல்கள் எல்லாமே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் நடத்தப்பட்டவைதான். இதையெல்லாம் மறந்துவிட்டு திருமாவளவன் இப்போது
2004 க்கு முன்பு இருந்ததுபோல பழையபடி வாக்கு சீட்டு முறைக்கு இந்தியா மாற வேண்டும் என கூறுவது எதனால் என்றுதான் தெரியவில்லை.
ஒருவேளை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து, வெற்றி பெற்று விட முடியும் என்பது திருமாவளவனின் மறைமுக குற்றச்சாட்டு என்றால் அவர் அதை தலைமை தேர்தல் ஆணையத்தின் முன்பாக நிரூபிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். அதை தவிர்ப்பதற்காக கூட அவர் இப்படி சொல்லியிருக்க வாய்ப்பு உள்ளது.
அதுபோல முறைகேடு எதுவும் செய்ய முடியாது என்று கூறி தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கும் கைதேர்ந்த தொழில்நுட்ப, மென் பொறியாளர்களுக்கும் பலமுறை அழைப்பும் விடுத்தது. சிலர் எங்களால் முடியும். நிரூபித்துக் காட்டுகிறோம் என்று சவால் விட்டார்களே தவிர தேர்தல் ஆணையத்தின் முன்பாக கடைசி வரை அவர்களால் அதை செய்து காட்ட முடியவில்லை. தோல்வியே கண்டார்கள்.
சாதாரண பாமர மக்கள் கூட இன்று டிஜிட்டல் பரிவர்த்தனையில் வங்கிக் கணக்கை கையாண்டு செல்போன் மூலம் பணம் அனுப்புவதை நன்கு கற்றுக்கொண்டு விட்ட நிலையில், 5, 6 வருடங்களுக்கு முன்பிருந்தது போல நான் காசோலை, வரைவோலை மூலம்தான் பணப் பரிமாற்றம் செய்வேன் என்று திருமாவளவன் அடம் பிடிப்பது போல அவருடைய வாக்கு சீட்டு கோரிக்கை இருக்கிறது.
தவிர விசிகவின் வங்கி கணக்கில் நேரடியாக மாநாட்டு நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி செலுத்த கியூ ஆர் கோடை பயன்படுத்தி பணத்தை அனுப்புங்கள். இயன்ற தொகையினை உடனே கைபேசி மூலமாக செலுத்திட வேண்டுகிறேன் என்று கூறும் அளவிற்கு அவரே நவீன மயத்துக்கு மாறியும் விட்டார்.
கட்சி தொண்டர்களிடம் நேரடியாக பணம் வசூலித்தால் அது நடந்து முடிய பல மாதங்கள் ஆகும் என்பதால்தானே அவர் செல்போன் மூலம் கியூ ஆர் கோடை பயன்படுத்தி கட்சிக்கு நிதியை திரட்டுகிறார்.
இந்த நிலையில் அவர் மீண்டும் வாக்கு சீட்டு முறைக்காக தமிழகம் முழுவதும் தனது கட்சி சார்பில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பது, விசித்திரமாக உள்ளது.
அதைவிட இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எந்த கட்சியாவது எடுத்தால் அந்தக் கட்சியை பாஜகவின் அடிமை என்று முத்திரை குத்துவதை திருமாவளவன் வழக்கமாக வைத்திருக்கிறார்.
இப்போது வெல்லும் ஜனநாயகம் மாநாட்டுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்க இருப்பதால் அவருக்கு நேரம் கிடைப்பதை பொறுத்து மாநாட்டு தேதி அறிவிக்கப்படும் என்று கூறுகிறார். ஏன் திருமாவளவன் அழைக்கும் நாளில் ஸ்டாலின் கலந்துகொள்ள மறுப்பாரா என்ன?… அப்படியென்றால் ஓரிரு எம்பி சீட்டுக்காக திமுகவின் அடிமை கட்சியாக விசிகவை அவர் மாற்றிவிட்டார் என்றுதானே கருதுத் தோன்றுகிறது.
“பட்டியலின மக்களின் ஒரே தலைவன் என்று திருமாவளவன் தன்னை என்னதான் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினாலும் தமிழகத்தில் சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் படும் துயரத்தை அவர் கண்டும் காணாமல் இருப்பது, அவருடைய கட்சி நிர்வாகிகள் இடையே கடுமையான கோபத்தை உருவாக்கி விட்டிருப்பது திருமாவளவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லை” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில், பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேற்றப்பட்டு டிசம்பர் 26ம் தேதியான நாளையுடன் ஒரு வருடம் ஆகப் போகிறது. இதுவரை இச் சம்பவத்தில் குற்றவாளிகள் யாரையும் திமுக அரசு கைது செய்யவில்லை.
அதற்காக திருமாவளவன் முதலமைச்சர் ஸ்டாலினிடம் எந்த அழுத்தமும் கொடுத்ததாக தெரியவில்லை. இதேபோல சேலம் மாவட்டம் திருமலைகிரியில் அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பட்டியலின இளைஞர் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி திமுக நிர்வாகி ஒருவரால் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்யப்பட்டு ஊர் பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதுடன் விரட்டியடிக்கவும் பட்டார்.
அதை திருமாவளவன் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு நாங்குநேரியில் பட்டியலின வகுப்பு மாணவனும், அவருடைய தங்கையும் சாதிய பாகுபாட்டால் வீடு புகுந்து சில மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டனர்.
மிக அண்மையில் தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி 321 அரசுப் பள்ளிகள், 58 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 62 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 644 மாணவர்களிடம் எடுத்த சர்வேயில் 30 சதவீதம் பேர் சாதிய பாகுபாட்டால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இத்தகைய சாதிய பாகுபாடுகள் நெல்லை, கடலூர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 25 பள்ளிகளில் அதிகமாக காணப்படுவதாகவும், மேலும் 15 பள்ளிகளில் கழிவறையை சுத்தம் செய்வதற்கு பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளே பயன்படுத்தப்படுவதாகவும் அந்த சர்யேயில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்ட இந்த ஆய்வறிக்கையை திருமாவளவன் படித்து பார்த்தாரா? என்பது தெரியவில்லை.
மாறாக சில வாரங்களுக்கு முன்பு, அவர் ஒரு பேட்டியில் கூறும்போது, எல்லோருடைய ஆட்சி காலத்திலும் பட்டியலின மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று சர்வ சாதாரணமாக கூறியிருந்தார்.
கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவின் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் விதமாக அவர் இப்படி கருத்து தெரிவித்திருப்பது எங்களுக்கு ஏமாற்றம் தருவதாக உள்ளது. இப்படிப்பட்டவர் எங்களுக்காக உரிமையோடு குரல் கொடுப்பார் என்ற நம்பிக்கையும் படிப்படியாக தளர்ந்து வருகிறது, என்று விசிக நிர்வாகிகளே புலம்பும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது.
இந்த நிலையில் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு நாடு மாற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பது தேவையற்ற ஒன்று”என அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எது எப்படியோ, 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடியும் வரை பட்டியலின மக்களின் பிரச்சினைகள் பற்றி சிந்திக்க திருமாவளவனுக்கு நேரம் கிடைக்குமா, என்பது சந்தேகம்தான்.