வெள்ளலூர் குப்பைக் கிடங்கு… டெல்லிக்கு போன விவகாரம் : மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து மனு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 December 2023, 4:33 pm

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு… டெல்லிக்கு போன விவகாரம் : மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து மனு!!

கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால், நிலத்தடி நீர், காற்று மற்றும் மண் மாசுபாடு அடைவதாகக் கூறி, இடத்தை மாற்றக் கோரி அல்லது மூட நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்புக் கூட்டுக்குழு பலமுறை வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கை மூட நடவடிக்கை எடுக்குமாறு குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழுவினர் மத்திய அமைச்சர்களை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேவால், சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர்எ எல்.முருகன் ஆகியோரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்பாட்டின் பேரில், கூட்டுக்குழு செயலாளர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் டெல்லியில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், கோவை மாநகராட்சி, 2019க்கு பிறகு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியின்றி வெள்ளலுார் கிடங்கில் குப்பை கொட்டி வருகிறது.

இதனால், சுற்றியிருக்கும் குறிச்சி, போத்தனுார், கோணவாய்க்கால்பாளையம் மற்றும் வெள்ளலுார் பகுதிகளில் வசிக்கும், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுகாதார சீர்கேடு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.

தினமும், 1,200 டன் குப்பை கொட்டப்படும் நிலையில், 550 டன் மட்டுமே ‘பயோ மைனிங்’ உள்ளிட்ட முறைகளில் மேலாண்மை செய்யப்படுகிறது. மீதம், 650 டன் சரியாக தரம் பிரிக்காது கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து கடந்த 2018ல் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஓராண்டுக்குள் இதற்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் கிடங்கில் இருக்கும் பழைய 7 லட்சம் டன் குப்பை அழிப்பு நடவடிக்கையிலும் மாநகராட்சியின் செயல்பாட்டில் திருப்தியில்லை என சமீபத்தில் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இதனிடையே திடக்கழிவு மேலாண்மை விஷயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோவை மாநகராட்சிக்கு ரூ.80 லட்சம் அபராதமும் விதித்தது.

வெள்ளலூர் குப்பை கிடங்கை சுற்றி பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏராளமாக உள்ளன. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகின்றனர்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வில் நிலத்தடி நீர், காற்று உள்ளிட்டவை அபாய கட்டத்தில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. எனவே, வெள்ளலுார் குப்பை கிடங்கை, உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

  • Vidamuyarchi movie bookings அஜித்தின் விடாமுயற்சி கொண்டாட ரெடியா…படத்தின் புக்கிங் ஓபன்..குஷியில் ரசிகர்கள்..!
  • Views: - 373

    0

    0