வெள்ளம் பாதித்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கா?…அதிர்ச்சியில் காங்.,CPM , CPI, விசிக!
Author: Udayachandran RadhaKrishnan26 December 2023, 9:13 pm
வெள்ளம் பாதித்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கா?…அதிர்ச்சியில் காங்.,CPM , CPI, விசிக!
டெல்லியில் வரும் 29ம் தேதி, காங்கிரஸ்-திமுக இடையே தொடங்கும் தொகுதி பங்கீடு பேச்சு இண்டியா கூட்டணி கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனென்றால் கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் உதயநிதி பேசிய சனாதன ஒழிப்பு, மிக அண்மையில் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் வட மாநிலங்களை பசு மூத்திர மாநிலங்கள் என்று நாடாளுமன்றத்தில் கிண்டலாக விமர்சித்துவிட்டு பின்னர் கடும் எதிர்ப்பு கிளம்பியதும் அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டது,டெல்லியில் நடந்த இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த இந்தி மொழி பெயர்ப்பு விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி ஆர் பாலுவை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கண்டித்தது போன்ற பிரச்சினைகளும் விரிவாக பேசப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் அமைத்துள்ள தொகுதி பங்கீட்டுப் பேச்சு குழுவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகல் மற்றும் மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், மோகன் பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற இருக்கும் இந்த பேச்சுவார்த்தையில் இது போன்ற நெருக்கடிகள் தங்களுக்கு வரலாம் என்பதை திமுக தலைமையும் உணர்ந்தே உள்ளது.
இந்த மாதிரியான சர்ச்சைக்குரிய விஷயங்களை திமுக தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் யாரும் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடியும் வரை பேசக்கூடாது என்ற நிபந்தனையை காங்கிரஸ் மேலிடம் விதிப்பதற்கு வாய்ப்பும் உள்ளது. மேலும் இதைக் காரணம் காட்டி, தமிழகத்தில் 14 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கவேண்டும் என்ற அழுத்தமும் திமுகவுக்கு கொடுக்கப்படலாம்.
ஆனால் தொகுதி பங்கீடு விஷயத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் சோனியா, ராகுல், மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோருக்கே உண்டு என்பதால் காங்கிரஸின் மற்ற தலைவர்கள் வைக்கும் கோரிக்கையை திமுக ஏற்றுக் கொள்ளுமா? என்பது தெரியவில்லை.
அதேநேரம் தொகுதிகளை ஒதுக்குவதில் சுழற்சி முறையை பின்பற்றவேண்டும் என்பதில் திமுக கடந்த சில மாதங்களாக உறுதியாக உள்ளது. இதை தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட்டும், மார்க்சிஸ்ட்டும் வெளிப்படையாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில்தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் 4ம் தேதி பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம், டிசம்பர் 16, 17, 18 ம் தேதிகளில் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகியவற்றில் பெய்த அதி கன மழையால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கு பிறகு தொகுதி பங்கீடு விஷயத்தில் அறிவாலயம் புதியதொரு நிலைப்பாட்டை கையில் எடுத்திருக்கிறது, என்கிறார்கள்.
ஏற்கனவே சுழற்சி முறையில் தொகுதிகளை பங்கீடு செய்ய முடிவெடுத்திருக்கும் திமுக இந்த மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான மக்கள் வசிக்கும் திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 12 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்க முடிவு செய்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதாவது திருவள்ளூர், வடசென்னை இரண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய 3 தொகுதிகள் காங்கிரசுக்கும், தென்காசி இந்திய கம்யூனிஸ்டுக்கும் காஞ்சிபுரம் மார்க்சிஸ்ட்டுக்கும் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்தக் கணக்கின்படி பார்த்தால் 2019 தேர்தலில் விசிக போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிகளிலும், காங்கிரஸ் களம் கண்ட சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட்ட நாகைப்பட்டினம், மார்க்சிஸ்ட் வென்ற மதுரை தொகுதியையும் திமுக குறி வைத்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
இது தவிர கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்டு தோல்வி கண்ட தேனி தொகுதியிலும் திமுக நிற்க வேண்டும் என்று தேனி மாவட்ட திமுக நிர்வாகிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அறிவாலயத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
சோனியாவும், ராகுலும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேரடியாக தமிழகத்தில் காங்கிரசுக்கு 14 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் 11 எம்பி சீட்டுகளை திமுக ஒதுக்குவதற்கு வாய்ப்பு உண்டு. மற்றபடி காங்கிரஸ் எதிர்பார்ப்பது போல 14 தொகுதிகளை தர திமுக ஒரு போதும் சம்மதிக்காது என்பதுதான் எதார்த்தம்.
“வெள்ளம் பாதித்த தொகுதிகளில் திமுக போட்டியிட தயங்குவதற்கு முக்கிய காரணம், வெற்றி வாய்ப்பை உறுதியாக கூற முடியாத நிலை ஏற்பட்டிருப்பது தான்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“ஏனென்றால் சென்னையிலும் அதன் புறநகர் மாவட்டங்களிலும் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் வசிக்கும் பகுதிகளில் திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மேயர், கவுன்சிலர்கள் சென்று நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கே படாதபாடு பட வேண்டி இருந்தது.
20 சென்டி மீட்டருக்கு மேல் ஒரு சொட்டு மழை பெய்தால் கூட வெள்ளம் தேங்காத அளவிற்கு மழைநீர் வடிகால் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சொன்னீர்களே, இப்போது எங்கள் வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் புகுந்துவிட்டதே… உங்களை நம்பியதால்தான் எங்களுக்கு இன்று இந்த நிலைமை?.. டிவி, மிக்சி கிரைண்டர், பிரிஜ்,கட்டில் மெத்தை மேஜை, நாற்காலி என ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இழந்து விட்டோமே.? நாங்கள் சிறுக சிறுகச் சேர்த்து வாங்கிய பொருட்கள் எல்லாம் வீணாகப் போய்விட்டதே என்று குமுறித் தள்ளிவிட்டனர்.
இவர்களது நிலைமையே மிகப் பரிதாபம் என்கிறபோது தரைத்தள வீடுகளில் வசித்த நடுத்தர வர்க்க மக்களை பற்றி சொல்லவே வேண்டாம். அடுக்குமாடி வீடுகளில் வசித்தவர்களின் நிலையோ வேறு மாதிரியாக இருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் கார்கள், பார்க்கிங் பகுதியில் இருந்து அடித்து செல்லப்பட்டன.
இவர்களும் இரண்டு முதல் மூன்று லட்ச ரூபாய் வரை தங்களது உடமைகளை இழக்கவும் நேரிட்டது.
மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களின் நிலைமையோ வேறு மாதிரியானது. சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்படுள்ளனர் என்று கூறப்பட்டாலும் கூட இவர்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது மதிப்புமிக்க
வீடு, வாசல் உள்ளிட்ட உடமைகளை இழந்ததோடு ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் பறி கொடுத்தது தங்களது வாழ்வாதாரத்தையே முற்றிலுமாக தொலைத்தும் விட்டனர். பொருளாதார ரீதியாக 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்ட நிலையில் இவர்கள் மீண்டும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பது எப்போது என்பது மிகப்பெரிய கேள்வி குறி.
விளை நிலங்களில் அழுகிய பயிர்களுக்கு அரசின் நிவாரணம் கிடைக்கும் என்றாலும் கூட, ஆற்று வெள்ளத்தோடு வயல்களுக்குள் புகுந்த மணலையும், ஏரி, கண்மாய்கள் உடைப்பெடுத்து வெள்ளம் ஓடியபோது அதனோடு சேர்ந்த மண்ணும் வயல்களில் கலந்து விட்டதை அப்புறப்படுத்தவே பல ஆயிரம் ரூபாய்களை விவசாயிகள் செலவிட வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதை அவர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. குறைந்தபட்சம் இவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஓரிரு வருடங்கள் ஆகலாம் என்பதுதான் எதார்த்த நிலை. ஏனென்றால் இவர்களுக்கு வெள்ள நிவாரணம் 6 ஆயிரம் ரூபாய் என்பதெல்லாம் யானை பசிக்கு சோளப்பொறி போட்ட கதை தான்.
இதனால் எழுந்த கோபத்தில்தான் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட விவசாயிகள் அதிக கன மழை பெய்யும் என்ற எச்சரிக்கையை எங்களுக்கு ஏன் விடுக்கவில்லை. ஏரி, கண்மாய்களில் கனமழை பெய்வதற்கு முன்பே தண்ணீரைத் திறந்து விட்டிருந்தால் இந்த அவல நிலைக்கு நாங்கள் ஆளாகி இருக்க மாட்டோமே என்று தங்களின் நிலையை பார்வையிட வந்த தமிழக அரசின் அத்தனை உயர் அதிகாரிகளையும் கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்துவிட்டனர்.
அது மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்கள் உதயநிதி, தங்கம் தென்னரசு, எ வ வேலு, கீதா ஜீவன் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை அடியோடு இழந்து நிர்க்கதியாகி விட்ட மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் செய்தனர். இது திமுக அரசு இதுவரை சந்திக்காத ஒன்று.
இவர்கள் படும் வேதனைகளுக்கும், துயரத்திற்கும் நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்குள் திமுக அரசால் தீர்வு காண முடியுமா என்பது சந்தேகம்தான். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் புதைந்து கிடக்கும் இந்த கோபம்
2024 தேர்தல் வரை நீடித்தால் திமுகவுக்கு 12 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு என்பதே கேள்விக்குறியாக மாறிவிடும் நிலைதான் காணப்படுகிறது.
இது தொடர்பாக திமுக இளைஞரணி சார்பில் எடுக்கப்பட்ட ஒரு ரகசிய சர்வேயிலும் நிலைமை திருப்திகரமாக இல்லை என ரிசல்ட் வந்திருக்கிறது, என்கின்றனர்
இது அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சாதகமான நிலையை ஏற்படுத்தவும் செய்யலாம். சில தொகுதிகளில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் சூழலும் உருவாகும். அதனால் ஏற்கனவே செயல்படுத்த திட்டமிட்டு இருந்த தொகுதிகள் சுழற்சி முறையை திமுக கையில் எடுக்கும் என்பது நிச்சயம்.
இதனால்தான் வெள்ளம் பாதித்த தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டால் அங்கு வெற்றி காண முடியுமா? என்ற அதிர்ச்சியில் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சிகள் உறைந்து போய் உள்ளன”என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
29ம் தேதி டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ்-திமுக தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சு வார்த்தையின்போது எம்பி சீட்டுகளை பகிர்ந்து கொள்வதில் சுழற்சி முறையை திமுக வலியுறுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.