எண்ணெய் கசிவுக்கு மழை மீது பழிபோட்ட திமுக அமோனியம் கசிவுக்கு யார் மீது பழி போடப்போறீங்க? சீமான் கேள்வி!!
Author: Udayachandran RadhaKrishnan27 December 2023, 10:19 am
எண்ணெய் கசிவுக்கு மழை மீது பழிபோட்ட திமுக அமோனியம் கசிவுக்கு யார் மீது பழி போடப்போறீங்க? சீமான் கேள்வி!!
எண்ணூர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் அம்மோனிய வாயு கசிவு காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணூர் பெரியகுப்பம் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையிலிருந்து வேதிப்பொருள் வாயுக்கசிவு ஏற்பட்டு அதனால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், பொருளுதவியும் அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.
மேலும் அமோனியம் சேமிப்புத் தொட்டிகளை சரிவர பராமரிக்காமல் இந்தக் கொடுமை ஏற்படக் காரணமாக இருந்த தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுத்திடவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
அண்மையில்தான் CPCL எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு எண்ணூரின் பெரும்பான்மைப் பகுதிகள் பாதிப்புக்குள்ளான நிலையில், அதனையொட்டிய நடவடிக்கைகள் முடிவடையாதபோதே அடுத்த வேதிப்பொருள் கசிவு என்பது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் நிர்வாகத் தோல்விக்கும், பன்னாட்டு நிறுவனங்களின் மக்கள்மீதான அக்கறையின்மைக்கும் சான்றாக இருக்கிறது.
எண்ணெய்க் கசிவின்போது பெருமழையின் மீது பழி சுமத்தியவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள வாயுக்கசிவிற்கு எதன்மீது பழி சுமத்தப் போகிறார்கள்? சென்னையின் பூர்வகுடி மக்கள் அதிகம் வசிப்பதோடு, சென்னையின் அதிமுக்கிய சூழலியல் மண்டலங்களைக் கொண்ட வடசென்னை பகுதியில் தொழிற்சாலைகள்,
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், அனல்மின் நிலையங்கள், துறைமுகங்கள் என்று தொடர்ச்சியாக இயற்கைக்கு எதிரானத் திட்டங்களைக் கொண்டு வந்து, இப்பகுதியைத் திட்டமிட்டு சீரழித்தது கடந்த அரைநூற்றாண்டு காலம் ஆட்சி செய்த திராவிட ஆட்சியாளர்களே.
மேலும் இதுபோன்ற எவ்விதக் கொடிய நிகழ்வுகளும் அரங்கேறா வகையில் இப்பகுதியில் புதிய திட்டங்கள் வராதவாறு தடைப் பிறப்பிக்க வேண்டும். இதுவரை விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் ஆலைகளின் உரிமங்கள் நீக்கப்பட்டு அவற்றிற்கும் தடை பிறப்பிக்க வேண்டும்.
மேலும், தன் பணியைச் சரிவர செய்திடாத மாசுக் கட்டுப்பாடு வாரியப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். தற்போதைய நிலையில் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு உரிய மீட்பு உதவி செய்வதோடு, நிரந்தரத் தீர்வாக மேற்சொன்ன நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார்.