யாரை துரத்தி அடிக்கப்போறாங்கனு பார்க்கலாம்.. என் வேலையை பற்றி எனக்கு தெரியும் : அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஆளுநர் தமிழிசை பதிலடி!
Author: Udayachandran RadhaKrishnan27 December 2023, 10:29 am
யாரை துரத்தி அடிக்கப்போறாங்கனு பார்க்கலாம்.. என் வேலையை பற்றி எனக்கு தெரியும் : அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஆளுநர் தமிழிசை பதிலடி!
தென் மாவட்டங்களில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட வந்த தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசு குறித்து செய்தியாளர்களிடம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது.
மத்திய அரசை குறை சொல்ல மாநில அரசு என்ன செய்தீர்கள்? திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது எனவும் குற்றம் சாட்டினார் தமிழிசை சௌந்தரராஜன்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, தமிழிசை செளந்தரராஜன் பாண்டிச்சேரியுடைய ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும். பாஜகவின் செய்தி தொடர்பாளராக செயல்பட வேண்டாம். அவர்களுக்கு இருக்கின்ற பணியை அவர்களை பார்க்கச் சொல்லுங்கள் என்று காட்டமாக கூறினார்.
இதற்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், நான் ஆய்வு செய்வதற்காக போகவில்லை என்றார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, என்னை வேலை செய்ய சொல்வதற்கு அமைச்சர் சேகர்பாபுவுக்கு எந்த உரிமையும் இல்லை. அவரவர் வேலையை சரியாக பார்த்தால் நான் ஏன் என்னுடைய வேலையை விட்டுவிட்டு தமிழகம் வரப்போகிறேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவே சென்றேன். நான் ஏற்கனவே அங்கு போட்டியிட்டிருக்கிறேன். எனக்கு வாக்களித்த மக்களை சந்திக்க போனேன்.
நான் பார்த்தது வரை தென் மாவட்ட பேரிடரை எதிர்கொள்வதில் மாநில அரசு முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளது. இதனை சொன்னவுடன் தான் அண்ணன் சேகர்பாபுவுக்கு கோபம் வருகிறது… பதற்றப்படுகிறார். எங்கே போட்டியிட்டாலும் துரத்தியடிப்போம் என்கிறார். இதெல்லாம் நடக்கவே நடக்காது.
பாஜக செய்தித் தொடர்பாளர் போல பேசுகிறேன் என சேகர் பாபு கூறுகிறார். என்னைப் பொறுத்தவரை மக்களின் செய்தித் தொடர்பாளராக நான் பேசுகிறேன். ஏனெனில் அந்த அளவுக்கு தென் மாவட்டங்களில் பாதிப்பு உள்ளது. எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்படி முன்னெச்சரிக்கை கொடுத்திருந்தால் நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றிருப்போம் என ஏரல் போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளின் மக்கள் தெரிவிக்கிறார்கள்.
எனக்கு இங்கு என்ன வேலை என்று எல்லோரும் கேட்கிறார்கள். சபாநாயகர் அப்பாவு கேட்டதற்கு சொல்கிறேன், நான் ஆய்வுக்காக வரவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வந்தேன், எனக்கு தமிழகத்தில் வேலை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.