பொன்முடிக்கு சிறை தண்டனை… ஊழல் செய்பவர்களுக்கு ஒரு படிப்பினை ; காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் சுளீர்…!!

Author: Babu Lakshmanan
27 December 2023, 4:24 pm

தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கவே முடியாது என்று நிர்மலா சீதாராமன் கூறி வருவது வருத்தத்துக்குரியது என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியதாவது :- இன்னொரு பகுதியில் அமோனியம் வாயு கசிவு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வரும் காலங்களில், இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

இதுபோன்று இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது முதல் முறையல்ல, பலமுறை இது போன்று நடந்துள்ளது.
கஜா புயலின் போது தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிப்பதற்கு தயங்குவது ஏன்..? இவ்வளவு சதவீதம் பாதிப்பு இருந்தால் தான் தேசிய பேரிடராக அறிவிக்க முடியும் என்ற எந்த சட்டமும் கிடையாது. அரசு நினைத்தால் அறிவிக்கலாம்.

தேசிய பேரிடராக அறிவிக்கவே முடியாது என்று நிர்மலா சீதாராமன் கூறி வருவது வருத்தத்துக்குரியது. இந்த விவகாரத்தில் தர்க்கம் பண்ணுவது சரியல்ல. ஏட்டிக்கு போட்டி என்று இல்லாமல் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு துணையாக இருக்க வேண்டும்,

ஊழல் குற்றச்சாட்டில் பொன்முடி தண்டனை பெற்ற முதல் நபர் கிடையாது. பாரபட்சம் இல்லாமல் விசாரணை செய்து உண்மையாக ஊழல் செய்திருந்தால் தண்டிக்கலாம். ஆனால் இந்த சம்பவம் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, ஊழல் செய்து வரும் அதிகாரிகளுக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில் இந்தி குறித்து நிதீஷ்குமார் கூறிய கருத்து பெரிதாக்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் அவர் பேசும்போது அனைவருக்கும் ஆங்கிலம் தெரியும். ஆங்கிலத்தில் பேசலாம் என்று ஒரு சிலர் கூறியதாகவும், அதற்கு நிதீஷ் குமார் பேச்சுவாக்கில் ஹிந்தி கற்றுக் கொண்டால் என்ன என்று கூறினார். அதை பலர் பெரிதாக்கி விட்டனர்.

உதயநிதி கூறும் கருத்து குறித்து அதில் தான் பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும். அவரை பேசக்கூடாது என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகளை அரசு விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சொந்த மாவட்டம் என்பதற்காக பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செல்வதில் தவறில்லை. ஆனால், அங்கு சென்று அவர் ஆளுநர் போன்று பேசியிருக்க வேண்டும். அரசியல்வாதி போன்று பேசியது தவறு.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு செல்பவர்கள் செல்லலாம். யாரும் தடுக்க போவது கிடையாது. ராமர் கோவில் கட்டி ஆகிவிட்டது. திறக்கப் போகிறார்கள், ராமரை கும்பிட மாட்டோம் என்று நாங்கள் கூறவில்லை. அனைத்து மதத்தினரையும், கடவுளையும் நாங்கள் வழிபடுவோம், எனக் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 395

    0

    0