போபால் விஷவாயு கசிவு சம்பவம் நியாபகம் இருக்கா..? எண்ணூர் வாயுக் கசிவில் அலட்சியம் வேண்டாம் ; தமிழக அரசை எச்சரிக்கும் SDPI!!
Author: Babu Lakshmanan27 December 2023, 5:10 pm
எண்ணூரில் போபால் விஷவாயு விபத்து போன்றதொரு பெருந்துயர் நடப்பதற்கு முன் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சென்னை எண்ணூரில் கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட் எனும் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று நள்ளிரவில் இந்த ஆலையில் இருந்து உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு இருமல், மூச்சுத் திணறல், கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து அந்த கிராமத்தில் உள்ள மக்கள் இளைஞர்களின் உதவியுடன் ஆட்டோ இருசக்கர வாகனங்கள் மூலம் ஊரை விட்டு வெளியேறி தூரப் பகுதியில் உள்ள இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் மூச்சு திணறல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறிய வாயு ஆபத்தான அமோனியா வாயுதான் என்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியமும் உறுதி செய்துள்ளது.
ஆலை வாசலில் காற்றில் 400 மைக்ரோ கிராமாக இருக்க வேண்டிய அமோனியா அளவு தற்போது 2090 மைக்ரோ கிராம் இருப்பதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் கடலில் 5 மில்லி கிராமாக இருக்க வேண்டிய அமோனியா தற்போது 49 மில்லிகிராம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மிகப்பெரும் அளவில் அமோனியா வாயு காற்றில் கலந்தது தொடர்பாக ஆலையிலிருந்து எவ்வித எச்சரிக்கையும், அபாய ஒலியும் எழுப்பப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான முதல் உதவி அளிக்கவோ, வாகனங்கள் ஏற்பாடு செய்து மக்களை வெளியேற்றவோ நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நல்வாய்ப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையால் மீன்பிடிக்க இளைஞர்கள் கடலுக்குச் செல்லாததால், அவர்களின் உதவியுடன் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இல்லாவிட்டால் இந்த வாயு கசிவால் மிகப் பெரும் அளவில் உயிர் ஆபத்துக்கள் ஏற்பட்டிருக்கும். இந்த அம்மோனியா வாயு காற்றில் கலப்பதற்கு காரணம் என்ன என்பதை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
கடலில் நிற்கும் கப்பலில் இருந்து ஆலைக்கு திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதா? ஆலையில் உள்ள அமோனியா கொள்கலனில் கசிவு ஏற்பட்டதா? அல்லது ஆலையால் செயற்கையாக நள்ளிரவில் அமோனியா வாயுக்கழிவு திறந்து விடப்பட்டதா என்பதை உரிய விசாரணை நடத்தி கண்டறிந்திட வேண்டும். எச்சரிக்கை விடுக்க தவறிய ஆலை மீது வழக்கு பதிவு செய்திட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
1984-ல் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைடு ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர். அந்த விபத்து ஒரு பெரும் துயராக மாறாத வடுவாக இன்றளவும் இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே தமிழக அரசு ரசாயன தொழிற்சாலைகளின் ஆபத்துக்களை உணர்ந்து, அது போன்றதொரு பெருந்துயர் ஏற்படுவதற்கு முன்னர், முதற்கட்டமாக சென்னைக்கு அருகில் அமைந்துள்ள இந்த கோரமண்டல் ரசாயன ஆலையின் செயல்பாட்டை நிறுத்தி வைத்து, சிறப்பு வல்லுனர் குழுவை அமைத்து ஆலையில் முழுமையாக சோதனை நடத்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.