இது அற்ப அரசியல்… பிரதமர் மோடிக்கு இது தெரியுமா..? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விளாசிய திருமாவளவன்..!!

Author: Babu Lakshmanan
27 December 2023, 9:11 pm

தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு செய்த பின்னரும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தது பிரதமரின் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்ட கருத்தா அல்லது அவரே தன்னிச்சையாக பேசுகிறாரா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நெல்லை மாவட்டத்தில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். வெள்ளகோவில் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல் தெரிவித்தார். அதன் பின்னர் நிவாரண பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.1,000 மதிப்புள்ள பொருட்கள் நிவாரணமாக வழங்கியுள்ளேன். இது தவிர இன்னும் 3 இடங்களிலும் நெல்லை மக்களுக்கு நிவாரணம் வழங்க உள்ளேன். மொத்தமாக நெல்லை மாவட்டத்தில் 1,000 பேருக்கு நிவாரணம் வழங்குகிறேன். தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 5 இடங்களில் 4000 பேருக்கு நிவாரணம் வழங்க உள்ளோம்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்பில் மக்கள் சிக்கி பெரும் துயரம் அடைந்துள்ளது தொடர்பாகவும், அவர்களுக்கு தேவையான கூடுதல் நிவாரணம் வழங்குதல் தொடர்பாகவும் பிரதமரை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டத்தில் ஒரே நாளில் 100 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

எனவே பாதிப்பை தீவிர பேரிடராக அறிவிக்க வேண்டும் என முதல்வர் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த 2 வெள்ள பாதிப்புக்கும் சேர்த்து முதல்-அமைச்சர் மத்திய அரசிடம் ரூ. 21 ஆயிரம் கோடி நிவாரணமாக கேட்டுள்ளார். ஆனால் மாநில பேரிடர் நிதிக்காக வழங்கும் வழக்கமான நிதியான ரூ. 900 கோடியை மட்டுமே மத்திய அரசு இரண்டு தவணையாக வழங்கியுள்ளது. கூடுதல் நிதி எதனையும் வழங்கவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பின்னராவது மத்திய நிதி அமைச்சருக்கு மனம் இறங்கி இருக்க வேண்டும். அவரது கருணை மேலோங்க வேண்டும். தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு செய்த பின்னரும் மத்திய அமைச்சர் சொன்னது பிரதமரின் ஒப்புதலோடு தான் சொல்கிறாரா?அல்லது அவரே தன்னிச்சையாக பேசுகிறாரா? என்ற கேள்வி எழுகிறது.

பேரிடரில் மக்களுக்கான துயரை துடைக்காமல் மாநில அரசை விமர்சிப்பதில் கவனம் முழுவதையும் செலுத்துகின்றனர். ஆளுங்கட்சிக்கு எதிராக பேசி அரசியல் ஆதாயம் தேடும் அற்ப அரசியல் போல் இது தெரிகிறது. மேலும் ஒன்றிய அமைச்சரின் பேச்சு பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளையும் காயப்படுத்துவதாக உள்ளது இது கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் போதாது என்பது மக்கள் கருத்தாக உள்ளது. எனவே இந்த வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு ரூ.21,000 கோடி நிவாரணமாக வழங்க வேண்டும். புயல் மழை மற்றும் பெரு வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.

வருகிற மக்களவைத் தேர்தலில் வாக்குச்சீட்டு நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ந்தேதி தமிழகம் முழுதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பட்டம் நடத்தப்பட உள்ளது, என அவர் தெரிவித்தார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 341

    0

    0