பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய செயல்… கேப்டனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் ; இபிஎஸ் இரங்கல்…!!!

Author: Babu Lakshmanan
28 December 2023, 9:59 am

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமான தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார். நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்தது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்தது.

இதனிடையே, விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், 9 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கேப்டன்‌ விஜயகாந்த்‌ அவர்கள்‌ நுரையீரல்‌ அழற்சி காரணமாக மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர்‌ ஆதரவுடன்‌ சிகிச்சை பெற்றிருந்தார்‌. மருத்துவ பணியாளர்களின்‌ கடின முயற்சி இருந்தபோதிலும்‌ அவர்‌ இன்று காலை 28 டிசம்பர்‌ 2023 காலமானார்‌.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதை அறிந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு கண்ணீருடன் கதறியபடி குவிந்து வருகின்றனர். எனவே, அவரது வீட்டின் முன்பு தடுப்புகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில், ” பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்தின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 362

    0

    0